ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ‘ஜீரோ பட்ஜெட்

இந்தியாவின் இதர பல மாநிலங்களைப் போன்றே, ஆந்திரப் பிரதேச மாநிலமும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைத் தேவைக்கும் அதிகமாகப் பயன்படுத்துகிறது. குண்டூரில் உள்ள சில கிராமங்களில் தாய்ப்பாலிலேயே ரசாயன உரங்களின் தடயங்கள் இருக்கும் அளவுக்கு நிலை மோசமாக
உள்ளது.

இந்நிலையில், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, மாசடைந்த மண்ணுக்குப் புத்துயிரூட்ட, ‘ஜீரோ பட்ஜெட் நேச்சுரல் ஃபார்மிங்’ எனும் செலவே இல்லாத இயற்கை வேளாண் முறையைப் பிரபலப்படுத்தி வருகிறார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி
டி. விஜய்குமார்

 ‘ஜீரோ பட்ஜெட்’

உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்ற அந்நியப் பொருட்களை இடாமல் இயற்கையாகப் பயிர்களை வளர்க்க முடியும் என்பதே ‘ஜீரோ பட்ஜெட்’ வேளாண்மைத் திட்டத்தின் நம்பிக்கை ஆகும். விதைகளைச் செறிவூட்டுவதற்கும் நோய்த் தடுப்புக்கும் பசுஞ்சாணம், கோமியம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
விதர்பா விவசாயியும் பத்ம விருது பெற்றவருமான சுபாஷ் பாலேகர், இந்த வகை வேளாண்மையில் முன்னோடியாக விளங்குபவர்.

‘இந்தியாவின் முதல் அங்கக வேளாண்மை மாநிலம்’ எனும் பெருமையை சிக்கிம் பெற்றது அனைவரும் அறிந்ததே. அதேபோல ‘செலவே இல்லாத இயற்கை வேளாண்மையில் முன்னோடி மாநிலம்’ எனும் பெருமையைப் பெற வேண்டும் என்ற இலக்கை நோக்கி ஆந்திராவை நகர்த்தும் கனவுடன் இருக்கிறார் விஜய்குமார்.

லட்சியம் 2024!

1983-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான விஜய்குமார், தனது பணியில் 28 ஆண்டுகளை பழங்குடி, கிராமப்புற, விவசாய மேம்பாட்டுத் துறைகளில் செலவிட்டு, நிறைய அனுபவம் பெற்றுள்ளார்.

2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணி ஓய்வு பெற்ற பின்னர், அரசின் வேளாண்மை ஆலோசகராகப் பொறுப்பேற்றார். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் லாபநோக்க மற்ற அரசு நிறுவனமான ‘ரைது சதிகரா சமஸ்டா’வுக்கு உதவித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். விவசாயிகள், நுகர்வோர்கள் என இருதரப்பினருக்கும் இயற்கை வேளாண்மை என்பது சரிக்குச் சரி லாபமான முயற்சியாக இருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் இவர்.

60 லட்சம் விவசாயிகள், 12 ஆயிரத்து 294 கிராமப் பஞ்சாயத்துகளை இயற்கை வேளாண்மைக் குடைக்குள் 2024-ம் ஆண்டுக்குள் கொண்டுவருவதே இவரது லட்சியம். விவசாயம் செய்யக்கூடிய நிலப்பரப்பில் 90 சதவீதத்தை, 80 லட்சம் ஹெக்டேர் நிலத்தை இந்தத் திட்டத்தின் மூலம் உயிர்ப்பூட்டுவதற்கான பணிகளைச் செய்து வருகிறார்.

முன்னோடி விவசாயிகளின் பயிற்சி

அலுவல் ரீதியான அதிகாரத் தொனி எதுவும் இல்லாமல், விவசாயிகளுடன் சேர்ந்து, அவர்களுக்குப் புரியும் வகையில், எளிமையாகப் பேசுவதன் வழியாகவே, தனது இயற்கை வேளாண்மை முறைகளை குமார் அவர்களிடம் அறிமுகப்படுத்துகிறார். சக விவசாயிகளை ஊக்கப்படுத்தும் நிலையிலுள்ள, ஏற்கெனவே இந்த வகை வேளாண்மையில் சாதித்த விவசாயிகளை அந்தந்த கிராமங்களில் அடையாளம் காணுவதற்கும் வேளாண்மைத் துறையை ஊக்குவிக்கிறார்.

இதன் வாயிலாக ஒட்டுமொத்த கிராமத்தையும் ‘உயிரி கிராமங்களாக’ (பயோவில்லேஜ்) மாற்றுவதுதான் இவரது இலக்கு. தொடக்க நிலையில் 800 பேர் கொண்ட விவசாயிகள் குழுவுக்கு, இயற்கை விவசாயத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு அந்த முறைகளைப் பரப்பும் பிரதிநிதிகளாக உருவாக்கப்பட்டனர். இந்த தொடக்க நிலைப் பயிற்சிக்குப் பிறகு சுமார் 5 ஆயிரம் விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் எட்டு நாள் பயிற்சியை சுபாஷ் பாலேகர், 2016-ம் ஆண்டில் வழங்கினார்.

2017-ம் ஆண்டின் இறுதிக்குள் 704 கிராமங்களைச் சேர்ந்த 40 ஆயிரம் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. 2017-18-ல் 972 கிராமங்களிலிருந்து ஒரு லட்சத்து 63 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றனர். இந்த ஆண்டில் 3 ஆயிரத்து 15 கிராமங்களில் 5 லட்சம் விவசாயிகளை இந்தத் திட்டத்தில் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மனப்பான்மையே முதல் சவால்!

இந்த முயற்சியில் விஜய்குமார் சந்திக்கும் முக்கியமான பிரச்சினை விவசாயிகளின் மனப்பான்மைதான். நல்ல விளைச்சலைப் பெறுவதற்கு வெளியிலிருந்து போடப்படும் ரசாயனப் பொருட்கள் தேவை என்ற மனநிலை அவர்களிடையே ஆழமாகப் பதிந்து போயிருக்கிறது. ஆனால் இயற்கை வேளாண்மையால் கிடைக்கும் பலன்களைப் பற்றி சக விவசாயிகள் எடுத்துச் சொன்ன பிறகு, அவர்களில் பலர் மனம் மாறியுள்ளனர்.

விஜய்குமார் தனது பணிக்காலத்தில் ‘சமூக ஒருங்கிணைப்பாளர்கள்’ என்ற புதுமையான திட்டத்தை உருவாக்கி, ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிலையங்களில் படித்த இளம் பொறியாளர்களை பழங்குடிக் கிராமங்களில் பணிபுரியச் செய்தார். வறுமை ஒழிப்புத் திட்டத்தில் பணியாற்றியபோது சுமார் 1.15 கோடி கிராமப்புறப் பெண்களை இணைத்து சுயஉதவிக் குழுக்களை உருவாக்கினார். இந்தக் குழுக்களால் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடனைத் திரட்ட முடிந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *