திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள சிறிய ஊர் ஜோத்தம்பட்டி. இங்கு அமராவதி ஆற்றுக் கால்வாய் பாசனம் உள்ளது. இங்கே நெல்லும் தென்னையும் மட்டுமே பெரிதும் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கே பத்து ஏக்கர் நிலத்தில் இயற்கை வழி வேளாண்மைக்குள் இறங்கி வெற்றி பெற்றுத் தனக்குத் தெரிந்த தொழில்நுட்பங்களை முடிந்தவரை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்துவருகிறார் விவசாயி மனோகரன்.
தொடக்கக் காலத்தில் மிகத் தீவிரமான ரசாயன விவசாயியாக இருந்தவர். பின்னர்த் தனக்கு ஏற்பட்ட புரிதலால் இயற்கைவழி வேளாண்மைக்கு மாறியவர். சத்தியமங்கலம் சுந்தரராமனின் வழிகாட்டுதலில் ஒரு வெற்றிகரமான இயற்கை வேளாண் பண்ணையாளராக இப்போது மாறியுள்ளார்.
இவர் குடும்பத்துடன் நிலத்தில் நேரடியாகப் பாடுபடும் ஓர் உழவர். கரைசல் தயாரிப்பது முதல் களை எடுப்பதுவரை களத்தில் நேரடியாக இறங்கிச் செய்பவர்.
முதலில் தென்னையில்தான் தனது முயற்சியைத் தொடங்கினார். தென்னைச் சாகுபடி இயற்கை வேளாண்மைக்கு ஏற்றது. பொதுவாக மரப்பயிரை இயற்கையாகச் சாகுபடி செய்வது எளிது.
அந்த அடிப்படையில் முதலில் தென்னைக்கு ரசாயன உரங்களைக் கொடுப்பதை மனோகரன் நிறுத்தினார். இதனால் ஏற்படும் சத்துக் குறைபாட்டைப் போக்க, சாணத்தையும் மாட்டு மோள் (கோமயம்) இரண்டையும் சிறப்பாகப் பயன்படுத்தத் தெரிந்துகொண்டார்.
ஒன்றும் செய்யா வேளாண்மை
முதலில் அவர் தயாரித்தது அமுதக் கரைசல் என்ற சாண உரக் கரைசல். சாணம், மாட்டு மோள், சர்க்கரை ஆகிய மூன்றையும், 10:10:1 என்ற விகித அடிப்படையில் கலந்து ஒரு நாள் நன்கு நொதிக்கவிட்டுப் பின்னர்ப் பாசன நீரில் கலந்து கொடுத்தபோது, நல்ல பலன் கிடைத்தது. அதன் பின்னர்க் களைகள் தென்னைக்குள் வளர்ந்தபோது, அவற்றை அகற்றவில்லை. களைகளை அப்படியே மடக்கி உழுது, நிலத்துக்கே கொடுத்தார். பொதுவாக விவசாயிகள் களைகளை அகற்றி வெளியே போட்டுவிடுவார்கள். ஆனால், களைகள் நிலத்தை நன்கு வளப்படுத்தும் காரணிகள் என்பதை மனோகரன் புரிந்துகொண்டார்.
அத்துடன் மரத்தில் இருந்து விழும் தென்னை மட்டைகள் மற்றக் கழிவுகளையும் தென்னந் தோப்புக்குள்ளேயே போட்டு மண்ணில் உயிர்மக் கரிமத்தை (organic carbon) அதிகப்படுத்தும் வேலையைச் செய்துகொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் தென்னைக்கு ஏதும் கொடுக்க வேண்டியதில்லை என்பதைப் புரிந்துகொண்டார். நிலம் மெல்ல மெல்ல பஞ்சுபோல மாறிவரத் தொடங்கியது. நீர் பாய்ச்சும் அளவும் குறைந்தது. ஆக, தென்னைச் சாகுபடியை ஒன்றும் செய்யாமல் தேங்காய் பெறும் நுட்பமாக மாற்றிக்கொண்டுள்ளார்.
மழை தரும் விளைச்சல்
தென்னை விளைச்சலுக்கும் மழைக்கும் அடிப்படையான தொடர்பு உள்ளது என்பது, இவரது ஆழமான அனுபவப் படிப்பினை. நல்ல மழை கிடைக்கும் ஆண்டுகளில், தென்னை விளைச்சல் சிறப்பாக உள்ளது. அதேநேரம் மழை குறையும் ஆண்டுகளில் தென்னை விளைச்சல் குறைவாக இருக்கும். அந்தக் காலத்தில் எவ்வளவு ஊட்டம் கொடுத்தாலும், விளைச்சல் குறைவாகத்தான் இருக்கும். இதைப் புரிந்துகொண்டால் எந்தச் சிக்கலும் இல்லை என்று விளக்குகிறார்.
அதிக அளவாக ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு 130 காய்களும், குறைந்த அளவாக 80 காய்கள்வரையும் மனோகர் எடுக்கிறார். தென்னைக்கு என்று எந்தச் செலவும் செய்வதில்லை. மண் நன்கு வளப்பட்டுவிட்டது. இப்போது கரைசல்களும் கொடுப்பதில்லை. களைகளை மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது தேவைக்கு ஏற்ப இருமுறை மடக்கிக் கொடுக்கிறார். நீர் பாசனம் மட்டுமே கொடுக்கப்படுகிறது.
யாருக்கு நன்மை?
களைகளை மற்றொரு முறையில் கட்டுப்படுத்துகிறார். அதற்குத் தன்னிடம் உள்ள மாடுகளைத் தென்னந்தோப்பில் கட்டுகிறார், இவை போதுமான களைகளைத் தின்றுவிடுகின்றன. எனவே கால்நடைத் தீவனமாகக் களைகள் பயன்படுவதையும் விளக்குகிறார். இப்படியாகத் தென்னையில் ஒன்றும் செய்யாத (Do nothing) வேளாண்மைக்கு தான் மாறிவிட்டதாக மனோகரன் தெரிவிக்கிறார். இந்த முறையை யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம்.
தற்போது ஆதிக்கம் செலுத்தும் சூதாட்டச் சந்தையுடன் போட்டி போடுவது, அதற்காகத் தேவையற்ற ரசாயனங்களை வாங்கிக் கொட்டுவது முட்டாள்தனம் என்பது இவரது கருத்து. இப்படி இடுபொருள்களைக் கூட்டிக்கொண்டே போவதால் உர வியாபாரிகளுக்கு மட்டுமே நன்மையன்றி, உழவர்களுக்கு அல்ல” என்னும் இவர், “தான் இயற்கை வேளாண்மைக்குள் வந்த பின்னர், மருத்துவமனைக்கே சென்றதில்லை” என்கிறார்.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் தொடர்புக்கு: adisilmail@gmail.com
மனோகரன் தொடர்புக்கு: 09003821430
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்