கணக்கிட்டு செய்தால் விவசாயத்தில் நஷ்டம் வராது!

கர்நாடக மாநிலம் மைசூரில், விவசாயம் செய்து வரும், எம்.சி.ஏ., பட்டதாரியான, கார்த்திக் கூறுகிறார்:

நாங்கள், பாரம்பரிய விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இல்லை. சொந்த ஊர், நீலகிரி மாவட்டம் ஊட்டி.

அப்பா, அரசு ஊழியர். கோவையில், எம்.சி.ஏ., முடித்த நான், குடும்பத்துடன் மைசூரில் செட்டிலாகி விட்டோம்.பெங்களூரில், ஐ.டி., கம்பெனியில் சேர்ந்தேன். அது, ஒரு விதமான அழுத்தத்தை கொடுக்கவே, ஒரு கட்டத்தில் வேலையை உதறி, மைசூருக்கே வந்துவிட்டேன்.

அப்போது தான், ‘இன்டர்நெட்’டில் விவசாயம் குறித்த தகவல்களை தேடி தேடி படித்து, வயலில் இறங்கினேன்.மண்வெட்டியைப் பிடித்த பின் தான், விவசாயத்தின் நுணுக்கங்களை, அதன் ஏற்ற இறக்கங்களை அறிய முடிந்தது.’

உழுதவன் கணக்குப் பார்த்தால், உழக்கு கூட மிஞ்சாது’ என்பர். உண்மையில், எந்த உழவனும் கணக்குப் பார்ப்பது இல்லை. இது தான் அடிப்படை பிரச்னையே. விவசாயிகள் கணக்குப் பார்க்க வேண்டும்.

என் வயலில் மஞ்சள், வாழை, தக்காளி, பீன்ஸ், உருளைக் கிழங்கு, பச்சை மிளகாய், முட்டைக்கோஸ், காலிபிளவர், தர்பூசணி பயிர் போட்டுள்ளேன். விவசாயத்தில் எப்போதும் வருமானம் இருக்கும் என சொல்ல முடியாது; நஷ்டமும் இருக்கும். அதையும் தாண்டி நஷ்டத்தை எப்படி சரிக்கட்ட வேண்டும் என்று யோசித்தேன்.

விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் பெரும்பாலும், இடைத்தரகர்கள் மூலமாகவே, நுகர்வோருக்கு செல்கிறது. இதனால் தான், நஷ்டம் ஏற்படுகிறது.சந்தையில் கிலோ, 15 ரூபாய் என்றால், இடைத்தரகர்கள் வழியாக போகும்போது விவசாயிகளுக்கு, 10 ரூபாய் அல்லது அதற்கு குறைவாகவே கிடைக்கும்.

இதில் மாற்றம் செய்தாலே, விவசாயிகள் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும் என்பது, என் அனுபவம்.

இன்னொன்று… நீர் இருப்பு அறிந்து விவசாயம் செய்வது. நீர் வசதி இருக்கும் போது, நெல், காய்கறி விவசாயம் பண்ணலாம்.நீர்ப்பாசனம் குறைந்த காலங்களில் கம்பு, கேழ்வரகு, சோளம், கற்றாழை பயிரிடலாம்; ஊடுபயிர்கள் விதைக்கலாம்.

அது தனியாக ஒருபுறம் வருமானத்தை தரும். இப்படி கணக்கிட்டு செய்தால், விவசாயம் நஷ்டத்தை தராது.விவசாயிகளுக்கு அரசு உதவிகள் நிறைய இருக்கின்றன. ஆனால், அது விவசாயிகளை சென்றடைவதில்லை. அதை முறைப்படுத்தினாலே விவசாயிகள் தற்கொலை செய்வது குறையும்.

விவசாயம் செய்ய ஆர்வமுள்ள இளைஞர்கள், விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து செய்யலாம். இல்லையெனில், வீட்டிலேயே தோட்டம் அமைத்து, வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் பயிரிடலாம்.விவசாயத்தில் புதிதாக வந்துள்ள தொழில்நுட்ப வசதி குறித்து, நிறைய விஷயங்களை கற்ற நான், என் அனுபவத்தில் கண்டதையும், விவசாயிகளுக்கு ஆலோசனைகளாக வழங்கி வருகிறேன்.

தொடர்புக்கு: 9482964896

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *