ஜீவாமிர்தத்தில் செழிக்கும் விவசாயம்

இயற்கையை உற்றுப்பார்; அது மனிதருக்கு விவசாயம் என்ற பாடத்தை கற்றுத்தரும்,” என்பது நம்மாழ்வாரின் கூற்று. அவர் கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக, சிவகங்கை அருகே பனையூரில் எம்.பில்., பட்டதாரி பெண் பி.ஜெயலட்சுமி, இயற்கை விவசாயத்தில் சாதனை படைக்கிறார்.

மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த இவர், சிவகங்கையில் 2.69 ஏக்கரில் சொட்டு நீர் பாசன முறையில் சம்பங்கி பூக்கள் சாகுபடி, பாரம்பரிய நெல் ரகமான பூங்கன், சீரக சம்பா நெல் சாகுபடி, மூலிகை செடிகளால் வேலி, அத்தி, முலாம்பழம், பலா, நாட்டு கொய்யா, நாவல், மாதுளை, நொச்சி உட்பட 600 பலன் தரும் மரக்கன்றுகளை சொட்டு நீர் பாசனம் மூலம் வளர்த்து வருகிறார்.

இவரது தோட்டத்து எல்கையில் வலையை வேலியாக்கி, வேலியில் கற்றாழை, நொச்சி உள்ளிட்ட மூலிகை செடிகளை வளர்க்கிறார்.

அவர் கூறியதாவது: சாணம், கோமியம், நாட்டு சர்க்கரை ஆகியவற்றினை 200 லிட்டர் தண்ணீரில் நொதிக்க செய்து, ஜீவாமிர்தம் என்ற இயற்கை உரம் தயாரித்து, பயிர்களுக்கு உரமாக இடுகிறேன். பூச்செடி, பழமரக்கன்றுகளுக்கு நடுவே விளையும் களைகளை எடுப்பதே இல்லை. செடி, கன்றுகளுக்கு அடியில் கரும்பு சக்கை, பெரிய புல்களை அறுத்துபோட்டு அவற்றை மக்க செய்கிறேன். அந்த இடத்தில் களை வளர்வதே இல்லை. மக்கும் கரும்பு சக்கை, புற்களும் அச்செடிகளுக்கு உரமாக கிடைக்கிறது.

இயற்கை விவசாயத்தில் தொடர்ந்து குறைந்த செலவில், நல்ல வருவாய் ஈட்டி வருகிறேன். இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் நன்றாக உள்ளது. கிணற்றில் 40 அடி ஆழத்தில் பாசன வசதி பெறுகிறேன். இப்பகுதியை விவசாயத்திற்கேற்ற ‘கெடா மண்’ பனையூர் என்பார்கள். செயற்கை உரங்கள் மூலம் சம்மங்கி பூ சாகுபடி செய்த விவசாயிகள், 2 ஏக்கருக்கு நாள் ஒன்றுக்கு 5 கிலோ பூக்கள் மட்டுமே வருவதாக கூறுகின்றனர். ஆனால், இயற்கை விவசாயம் மூலம் 30 சென்ட் நிலத்தில் தினமும் 8 கிலோ சம்பங்கி பூக்கள் அறுவடை செய்கிறேன். லாப நோக்குடன் விவசாயத்தில் ஈடுபடக்கூடாது. நமக்கான உணவு பொருளை நாமே தயாரிக்க வேண்டும் என்ற நோக்குடன் விவசாயிகள் களத்தில் இறங்க வேண்டும், என்றார். ஆலோசனைக்கு 9585198135.

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “ஜீவாமிர்தத்தில் செழிக்கும் விவசாயம்

  1. சிவஷண்முகராஜன்.ஹ says:

    என் நாடு என் மக்கள் அனைவரும் வெற்றி பெற்று வாழ்க்கை முறை மேம்பட வேண்டும் இயற்கையான முறையில் மன்னும் மானுடமும் இயற்கை வளமும் நலமும் அடைய வேண்டும் என்பது என் ஆவல் ஆகவே இயற்கையோடு இணைந்த விவசாயம் செய்து நாட்டை வளம் ஆக்குவோம்

  2. Sudagar krishnan channel says:

    நான் தொடர்ந்து உங்கள் பதிவுகளை படித்து கொண்டிருக்கிறேன் விவசாயம் தொடர்பான உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *