பாரம்பரிய விவசாயத்தை காப்பற்ற போராட்டம்

திருத்துறைப்பூண்டி: “”இந்திய பாரம்பரிய விவசாயத்தை காக்க வலியுறுத்தி அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நாடாளுமன்றம் முன் மண் கொட்டும் போராட்டம் நடத்தப்படும்,” என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அறிவித்தார்.

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கத்தில் மாநில அளவிலான நெல் திருவிழா நடந்தது. இதைதொடர்ந்து விவசாயிகள் பங்கேற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது. வேதாரண்யம் பைபாஸ் ரோடு அருகே விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு இயக்க தலைவர் ராமையா, முத்துப்பேட்டை நெல் உற்பத்தியாளர் சங்க தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் விவசாயிகள் பங்கேற்ற பேரணியை காவிரி டெல்டா விலைபொருள் உற்பத்தியாளர் சங்கம் ரெங்கநாதன் துவக்கி வைத்தார்.

இயற்கை விவசாயத்தை காப்போம். ரசாயன உரத்தையும், அன்னிய நிறுவனங்களின் மான்சாண்டோ விதைகளையும் ஒழிப்போம் என்ற குரலுடன் முக்கிய வீதிகள் வழியாக பேரணி தெற்கு வீதியை வந்தடைந்தது.

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் சேரன், பொருளாளர் பாலகிருஷ்ணன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் காவேரி தனபாலன் வரவேற்றார். “நமது நெல்லை காப்போம்’ மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், உழவரும் நுகர்வோரும் என்ற தலைப்பில் பேசினார்.

தேசிய ஒருங்கிணைப்பாளர் உஷா பேசுகையில், “”அன்று முன்னோர்கள் பாரம்பரியமாக சில நெல் வகைகளை நமது தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப உருவாக்கி தந்தார்கள். அது மழை, வெள்ளம், வெயிலுக்கு ஏற்ப நமக்கு நல்ல மகசூலை தந்தது. அன்னிய கம்பெனிகள் கோதுமையை கொடுத்தார்கள். பின் ரசாயன உரத்தை கொட்டினர். “”அதன் விளைவாக மண் மலடாகிப்போனதுடன், பல்வேறு நோய்களுக்கும் ஆளாகிப்போனோம். இதை மறந்து மீண்டும் இயற்கையோடு முன்னோர்கள் வகுத்துக்கொடுத்த பாதையில் மீண்டும் ஒரு சுதந்திரத்தை பெற பயணத்தை துவக்கிவிட்டோம். இனி நம்மாழ்வார் காட்டிய வழியில் சென்று வெற்றி பெறுவோம்,” என்றார்.

பொதுக்கூட்டத்துக்கு தலைமை வகித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது: கடந்தாண்டு நமது விவசாயத்தை காக்கவும், மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகளை திரட்டி பார்லிமென்ட் முன் நெல்மணிகளை குவித்தோம். அரசு விழித்துக் கொள்ளவில்லை. எனவே, அக்டோபர் இரண்டாம் தேதி நமது வயல்களில் உள்ள மண்ணை ஒவ்வொரு விவசாயியும், ஒரு கிலோ அளவுக்கு எடுத்துச் சென்று பார்லிமென்ட் முன், “இந்திய பாரம்பரிய விவசாயம் காணாமல் போய், மண் மலடாகிவிட்டது. பாரம்பரிய விவசாயத்தை காக்க வலியுறுத்தி மண்ணை கொட்டி காந்திய அறவழியில்,’ நமது எதிர்ப்பை தெரிவிப்போம். நவீன விவசாயத்தால் ரசாயன, பூச்சிக்கொல்லி மருந்தாலும், ஆலைகளில் இருந்து வரும் புகையாலும், வாகனங்களில் இருந்து வரும் புகையாலும் 35 சதவீதம் பூமி சூடாவதற்கான காரணமாகிவிட்டது. காடுகள் அழிக்கப்பட்டதன் விளைவாக, மழை பெய்யும் காலமும் மாறி போதுமான மழையில்லை. காடு வளர்ப்பில் மக்களின் பங்கேற்பு இல்லை. மக்களின் பங்கேற்பு இருந்தால்தான், பூமி சூடாவதை தடுக்க வழிவகைகளை மேற்கொள்ள முடியும். கோதுமையை தந்து, மழைக்காத மக்காச்சோளத்தை தந்து, நமது இந்திய விவசாயிகளை ஏமாற்றும் வித்தையை இனியும் அனுமதிக்கக்கூடாது. மான்சாண்டோ விதைகளை வரும் காலங்களில் விற்பனை செய்தால், அதை பறிமுதல் செய்து கொளுத்தும் போராட்டத்ததைத்தான் அன்று வெள்ளையனை வெளியேற்ற காந்தியடிகள் கூறிய அன்னிய துணிகளை எரித்தது போல மான்சாண்டோ விதைகளை எரிக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபடுவார்கள். விவசாயிகள் ஓரணியில் திரண்டு இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு நோய், நஞ்சு இல்லாத உணவை மக்களுக்கு வழங்க ஒரே நோக்கத்தில் செயல்படுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்புச்சங்க செயலாளர் கண்ணப்பன் நன்றி கூறினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *