எண்ணெய்பனை சாகுபடியால் நல்ல வருவாய்

பாமாயில் எண்ணெய்ப்பனை சாகுபடி செய்து மாதம் ரூ.1.50லட்சம் வருவாய் ஈட்டுகிறார், தேனியைச் சேர்ந்த பொறியாளர் சங்கர் ராஜ். இந்திய தேவைக்காக மாதம் 60 முதல் 80 லட்சம் டன் பாமாயில் இந்தோனேசியா, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்ப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கு அதிகமான அந்நிய செலாவணி செலவாகிறது.  பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் ‘பாமாயில் எண்ணெய்ப்பனை சாகுபடி திட்டம்’ அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மகசூலை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் அரசு நிர்ணய விலையில் கொள்முதல் செய்கிறது.

விவசாயிகளுக்கு, ஒன்றரை ஆண்டுகள் வளர்ந்த பாமாயில் பனைமரக்கன்றுகளை ஒப்பந்த நிறுவனம் வழங்குகிறது. அவற்றை முக்கோண வடிவில் ஹெக்டேருக்கு 143 கன்றுகள் வீதம் நட வேண்டும். இவ்வாறு நடவு செய்த நிலத்தில் 3 ஆண்டுகள் வரை ஊடு பயிராக வாழை, கரும்பு, காய் கறி, பயறு வகைகள் சாகுபடி செய்ய உர மானியம் அரசால் வழங்கப்படும். ஊடுபயிரால் உபரி வருமானம் கிடைக்கும். மண்ணின் தன்மைக்கு ஏற்ப மரக்கன்றுகளை சுற்றி வட்டபாத்தி அமைத்து நீர் பாய்ச்சலாம்.3 ஆண்டு களுக்கு பிறகு ஆண், பெண் பனை மரங்களில் பூக்கள் மலர்ந்து, குலை உருவாகும். நீர் காய்ச்சலும், பாய்ச்சலுமாக இருந்தால் ஆண் பனையில் குறைந்து, பெண் பனையில் மகசூல் அதிகரிக்கும்.

ஒரு மட்டைக்கு ஒன்று வீதம் வளரும் குலையில் நாவல்பழம் போன்ற கருப்பு நிற காய்கள் உருவாகி,பொன் சிவப்புநிற பழமாகும். ஒரு குலையில் 5 முதல் 8 கிலோ பழங்கள் கிடைக்கும். மரத்தின் வயது, பராமரிப்புக்கு ஏற்றவாறு மகசூல் கூடும். ஆரம்ப கன்னி காய்ப்பில் ஒரு வெட்டுக்கு 4 முதல் 6 டன் வரை மகசூல் கிடைக்கும்.

நன்கு பராமரித்தால் 6 வது ஆண்டில் ஒரு குலையில் 15 முதல் 30 கிலோ வரை எடையில் மகசூல் கிடைக்கும். இன்னும் தரமான குலைகளில் 60 முதல் 80 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஒரு வெட்டுக்கு 35 முதல் 40 டன் மகசூல் கிடைக்கும். மரம், ஒரு ஆண்டுக்கு அரைஅடி வளரும். பழத்தை லாரியில் ஏற்றி எடை போட்டு ஒப்பந்த நிறுவனத்திடம் வழங்கிட வேண்டும். அவை அரியலுார் மில்லுக்கு கொண்டு செல்லப்பட்டு பாமாயில் தயாரிக்கப் படுகிறது. பாமாயில் பழத்திற்கான விலையை வேளாண் துறை ஆணையர், ஒப்பந்த நிறுவனம், மாவட்ட விவசாயி கொண்ட குழு நிர்ணயம் செய்யும்.ஒவ்வொரு மாதமும், மார்க்கெட்டுக்கு ஏற்ப டன் விலை நிர்ணயிக்கப்படும்.

கடந்த மாதம் ஒரு டன்னுக்கு ரூ.5,016 விலை கிடைத்துள்ளது. 15 நாட்களுக்கு ஒரு அறுவடை செய்யலாம். இது குறித்து கோடாங்கி பட்டி விவசாயியான இன்ஜினியர் சங்கர்ராஜ் கூறுகையில், “30 ஆண்டுகள் விவசாயம் செய்தும் லாபம் இல்லை.எண்ணெய் பனை சாகுபடியில், தென்னை சாகுபடியை விட 2 மடங்கு லாபம் கிடைக்கிறது. வேலை குறைவு. மரம் ஏற தேவையில்லை. நடவு, பராமரிப்பு மானியம் கிடைக்கிறது. 15 நாட்களுக்கு ஒரு வெட்டு. மாதம் 25 முதல் 30 டன் மகசூல் கிடைக்கிறது. 3 ஹெக்டேர் சாகுபடியால் மாதம் ரூ.1.50 லட்சம் கிடைக்கிறது. மாதம் ரூ.5ஆயிரம் மட்டுமே செலவாகிறது. மகசூல் அனுப்பிய 15 நாளில் வங்கி கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இன்ஜினியரிங் தொழிலில் கிடைக்காத லாபம் எண்ணெய் பனை விவசாயத்தில் கிடைக்கிறது. கேரளா, கர்நாடகாவில் டன்னுக்கு ரூ.9 ஆயிரம் வழங்கப்படுகிறது. தமிழக அரசு குறைந்தபட்ச விலையாக டன்னுக்கு ரூ.11 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்,” என்கிறார்.

சங்கர்ராஜை தொடர்பு கொள்ள 09944084546
பி.ரவி, தேனி

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *