ஊட்டமேற்றிய உரம் தயாரிக்க யோசனை

மானாவாரி பருவம் துவங்குவதால் முன் கூட்டியே ஊட்டமேற்றிய உரம் தயாரிக்க வேண்டும், என வேளாண்மை துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.கோபி வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு ஆசைத்தம்பி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:

 • தமிழகத்தில் மொத்த சாகுபடி பரப்பில் 50 சதவீதம் வானம் பார்த்த பூமியாகும்.
 • மானாவாரி பயிரிடப்படும் நிலங்களில் குறைந்த மகசூல் கிடைக்கிறது.
 • இதற்கு காரணம் பருவம் தவறி மழை பெய்வதும், மழை அளவில் நிலையில்லாத தன்மை, குறைந்த கால மழை பருவம், அதிக அளவில் நீர் ஆவியாதல், மண் அரிப்பு போன்றவையாகும்.
 • நிலையில்லாத சூழ்நிலையில் மானாவாரி விவசாயத்தில் சில யுக்திகளை பயன்படுத்தி ஓரளவு நிலைத்த வருமானத்தை பெறலாம்.
 • முக்கியமானது ஊட்டமேற்றிய தொழு உரமாகும்.மானாவாரி சாகுபடியில் உரமிட்ட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தெரியவருகிறது.
 • தமிழகத்தில் மானாவாரி சாகுபடி பரப்பில் பத்து சதவீதம் மட்டுமே போதிய உரமிடப்படுகிறது.
 • கோபி வட்டாரத்தில் பத்தாயிரம் ஏக்கர் மானாவாரி பகுதியாக உள்ளது. 3,000 ஏக்கருக்கு அதிகமாக ஆண்டுதோறும் மானாவாரி நிலக்கடலை பயிராகிறது. நிச்சயமற்ற மழை மற்றும் வறட்சியால் மானாவாரி நிலக்கடலைக்கு உரமிட விவசாயிகள் தயங்குகின்றனர்.
 • போதிய தொழு உரம் கிடைக்காததாலும், அதன் விலை அதிகமாக இருப்பதாலும் இயற்கை உரத்தின் பயன்பாடும் குறைந்து விட்டது.
 • இச்சூழலில், பயிருக்கு உரமிடுவதில் புதிய யுக்தியை கையாள்வது அவசியம்.
 • ஒரு வண்டி 300 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன், ஒரு ஏக்கருக்கு பரிந்துரை செய்யப்படும் உரங்களான 25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 30 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை நன்கு கலந்து நிழலில் களி மண் மூலம் நன்கு மூடி வைக்க வேண்டும்.
 • காற்று புகாத நிலையில் உரச்சத்துகள் வீணாகாமல் தடுக்கப்படும்.
 • அதை அப்படியே ஒரு மாதம் வைத்தால், தொழு உரம் ஊட்டம் பெற்று கூடுதல் சத்துக்களை பெறும்.
 • பின், இத்துடன் ஒன்பது கிலோ யூரியாவை கலந்து ஒரு ஏக்கரில் விதைப்பருப்பு சால் விடும் போது இந்த படைக்காலிலேயே தூவி விட வேண்டும்.
 • மானாவாரி நிலக்கடலைக்கு இடவேண்டிய உரச்சத்துகள் இழப்பின்றிய பயிருக்கு கிடைக்கின்றன.
 • வறட்சியின்போது ரசாயன உரமிடுவதால் ஏற்படும் அபாயமும் குறைகிறது.
 • அதுமட்டுமின்றி ஓரளவு தொழு உரமும் பயிருக்கும் இடும் வாய்ப்பு கிட்டுகிறது.
 • ஏக்கருக்கு ஒரு வண்டிக்கும் கூடுதலாக தொழு உரம் இடும் வாய்ப்பு ஏற்பட்டால் இன்னும் மகசூல் அதிகரிக்க ஏதுவாகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *