]மானாவாரி பயிர்களுக்கு உயிர் உரங்களை பயன்படுத்த, வேளாண்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், தென்னை, நெல், வாழை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பி.ஏ.பி., மற்றும் கிணற்று பாசனம் வசதி பெறாத இடங்களில், மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.நான்கு மாதத்துக்கு ஒரு முறை என ஆண்டு தோறும், ஆறாயிரம் ஏக்கருக்கு மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்து பயிர்களும், சோளம், மக்காச்சோளம், பாசிப்பயறு, தட்டைப்பயறு உள்ளிட்ட பயறுவகை பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த, 15 நாட்களாக கோடை மழை பெய்வதால், கோடை உழவு செய்து, விவசாயிகள் மானாவாரி பயிர்கள் விதைத்து வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆனைமலை வேளாண்துறையினர் தொழில்நுட்ப அறிவுரை வழங்கி உள்ளனர்.
ஆனைமலை வேளாண்துறை உதவி இயக்குனர் பெருமாள்சாமி கூறியதாவது:
- கிடைக்கின்ற மழையை பயன்படுத்தி, கோடை உழவு மேற்கொண்டு, பயிர்கள் விதைப்பை துவங்க வேண்டும்.
- இதனால், மண்ணிலுள்ள களைச்செடிகள், பூச்சிகள் அழிந்து, மானாவாரி பயிர்களில் நோய் தாக்குதல்கள் பெருமளவு குறையும்.
- நடப்பு சித்திரை பட்டத்தில், 568 ஏக்கரில் சோளம், மக்காச்சோளம்; தலா, 494 ஏக்கரில் பயறுவகைகள் மற்றும் நிலக்கடலை போன்ற மானாவாரி பயிர்கள் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்து உள்ளோம்.
- விவசாயிகள் உயிர் உரங்களை பயன்படுத்தி, மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்ய வேண்டும்.
- நிலக்கடலை, எள் மற்றும் பயறுவகை பயிர்களுக்கு, ‘ரைசோபியம்’ உயிர் உரத்தை திட நிலையில் வாங்கி, விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்து, விதைப்பு மேற்கொள்ளலாம்.
- இந்த, உயிர் உரம் பயிர்களின் வேர் முடிச்சுக்களை அதிகரித்து, காற்றிலுள்ள நைட்ரஜன் சத்துக்களை எளிதாக பயிர்களுக்கு கடத்தும்.
- திரவ நிலையிலுள்ள ‘ரைசோபியம்’ விதைப்புக்குப்பின் உரமாக தெளிக்கலாம். சிறு தானியமான சோளம், மக்காச்சோளத்தில் வேர் முடிச்சுகள் இருக்காது.
- இவற்றுக்கு, ‘அசோஸ்பைரில்லம்’, ‘பாஸ்போபாக்டீரியா’ ஆகிய உயிர் உரங்களை திட நிலையில் வாங்கி, விதை நேர்த்தி செய்து, விதைப்பு மேற்கொள்ளலாம்.
- காற்றிலுள்ள நைட்ரஜன் சத்துக்களை நேரடியாக பயிர்களுக்கு கிடைக்கச் செய்யும்.உயிர் உரங்கள் பயன்படுத்துவதால் மானாவாரி பயிர்களில், 20 சதவீதம் வரையில் மகசூல் அதிகரிக்கும்.
- திரவ நிலையில் ஒரு லிட்டர் உயிர் உரம், 300 ரூபாய் மற்றும் திட நிலையில், 200 கிராம் பாக்கெட், ஆறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- ஆனைமலை வேளாண் அலுவலகத்தில் போதிய அளவு உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன. விவசாயிகள் வாங்கி பயன்படுத்தலாம்.இவ்வாறு, உதவி இயக்குனர் தெரிவித்தார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்