வர்த்தகரீதியில் மண்புழு உர உற்பத்திக்கான வழிமுறைகள்!

வர்த்தகரீதியாகவும் மண்புழு உரம் தயாரிப்பது குறித்து வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் மு. புனிதவதி கூறியது:

மண் புழு உரம் உற்பத்திக்காக நிலப்பரப்பின் மேலே வாழக்கூடிய மண் புழு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.  ஆப்ரிக்கன் மண்புழு (யூடிரிலஸ் எயுஜினியஸ்), சிவப்பு புழு (உய்சினியா போய்டிடா), மக்கும் புழு (பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேடஸ்) இவை அனைத்தும் மண்புழு உரத்தின் உற்பத்திக்கான சிறந்த மண் புழுக்கள். இவற்றுள் (யூடிரிலஸ் எயுஜினியஸ்) மிகவும் விரும்பக் கூடியது, குறைந்த கால இடைவெளியில் அதிகளவு புழுக்களை உற்பத்தி செய்யக்கூடியதாகும்.

மண்புழு உர உற்பத்திக்கான இடம்:

மண்புழு உரம் எங்கு வேண்டுமானாலும் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், நிழலுடன் அதிகளவு ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியான பகுதியாக இருக்க வேண்டும்.

கட்டமைப்புகள்:

 • சிமென்ட் தொட்டி உயரம் 2 அடி, நீளம் 12 அடி, அகலம் 3 அடி உடையதாக இருக்க வேண்டும்.
 • அறையின் அளவைப் பொருத்து நீளம் எந்த அளவு வேண்டுமானாலும் இருக்கலாம். தொட்டியின் அடிப்பகுதியானது சாய்வான படிவம்போல கட்டப்பட வேண்டும்.
 • அதிகளவு தண்ணீரை வடிகட்ட மண்புழு உரத் தொட்டியின் அமைப்பிலிருந்து, ஒரு சிறிய சேமிப்புக் குழி அவசியம். ஹாலோபிளாக்ஸ், செங்கல் இவற்றை பயன்படுத்தியும் கட்டமைப்புகளை உருவாக்கலாம்.

படுக்கை:

 • நெல் உமி அல்லது தென்னை நார்க்கழிவு அல்லது கரும்புச் சோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பாகத்தில் 3 செ.மீ உயரத்துக்கு பரப்ப வேண்டும்.
 • ஆற்று மணலை இந்த படுக்கையின் மேல் 3 செ.மீ உயரத்துக்குத் தூவ வேண்டும்.

கழிவுகள் தேர்ந்தெடுத்தல்:

 • கால்நடைக் கழிவுகள், பண்ணைக் கழிவுகள், பயிர்க்கழிவுகள், காய்கறிக் கழிவுகள், பழம் மற்றும் பூ மார்க்கெட் கழிவுகள், வேளாண் சார்ந்த தொழிற்சாலை கழிவுகள் மண்புழு உரம் தயாரிக்க உகந்தது.
 • மண்புழு உரம் தயாரிப்பதற்கு முன்னதாக, கால்நடைக் கழிவுகளை நன்றாக சூரிய ஒளியில் உலர்த்திட வேண்டும்.
 • மற்றக் கழிவுகளை சாணத்துடன் சேர்த்து, 20 நாள்களுக்கு வைத்திருந்து மக்க வைக்க வேண்டும். அதன்பின், இதை மண்புழு உரத் தயாரிப்பு படுக்கையில் போட வேண்டும்.

உர உற்பத்தி முறை:

 • குழி அல்லது தொட்டி முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட இடத்தின் மேல் பாலீத்தீன் காகிதத்தை விரிக்க வேண்டும். இதன் மேல் 5 செ.மீ. சாணத்தைப் பரப்ப வேண்டும்.
 • இந்த அடுக்கின்மேல் 0.5 மீட்டர் உயரத்துக்கு பண்ணைக் கழிவுகளை இட வேண்டும். பிறகு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் தெளிக்க வேண்டும். சுமார் 35 நாள்களில் இக்கலவை நன்றாக மக்கி விடும்.
 • சிமென்ட் தொட்டியின் அடிப்பாகத்தில் 3 செ.மீ உயரத்துக்கு மரத்தூள் கொண்டு, முதல் அடுக்கை அமைக்க வேண்டும். பின் 6 அங்குலம் உயரத்துக்கு தோட்டத்து மண்ணைப் பரப்ப வேண்டும்.
 • இதற்கு மேல் 2 அங்குல உயரத்துக்கு மக்கிய சாணத்தைப் பரப்ப வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 1.5 கிலோ புழுவை இட வேண்டும்.
 • மேற்கண்ட முறையில் மக்கிய இலை, தழை உரங்களை சிமெண்ட் தொட்டிக்கு மாற்ற வேண்டும். தொழு உரத்தின் ஈரப்பதம் 35 முதல் 40 சதம் இருக்க வேண்டும். புழுவை விட்ட 7 முதல் 10 நாள்களில் தொழு உரத்தின் மேல் பகுதி முழவதும் மண்புழு உரத்தால் மூடப்பட்டிருக்கும்.
 • மண்புழு உரத்தை 5 முதல் 7 நாள்களுக்கு ஒருமுறை தொட்டியிலிருந்து அகற்ற வேண்டும். மண்புழு சுமார் 45- 60 நாள்களில் தொழு உரத்தை முற்றிலுமாக தின்று மண்புழு உரமாக மாற்றி விடும்.

மண்புழு உரத்தின் பயன்கள்:

 • நிலத்தின் அங்ககப் பொருள்களின் அளவு, மண்ணின் நயத்தை அதிகரிக்கச் செய்து நீரின் உட்கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது.
 • தழை, மணி, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் அதிகம் இருப்பதால் பயிரின் வளம் கூடும்.
 • மண்புழு உரத்தால் வேர்களின் வளர்ச்சி அதிகரித்து, காய்கனிகளின் சுவை, நிறம் மற்றும் மணம் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வதுடன்,
 • அவை நீண்ட நாள்கள் கெடாமல் பாதுகாக்கிறது. வேண்டாத கழிவுகளை மட்கச்செய்து உரமாக மாற்றுவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
 • மண்புழு உரம் தயாரிப்பதன் மூலம் 1 டன்னுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை நிகர லாபம் கிடைக்கும்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “வர்த்தகரீதியில் மண்புழு உர உற்பத்திக்கான வழிமுறைகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *