20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!

தாவரக்கழிவுகளை எளிதில் மட்க வைக்கப் பயன்படும் வகையிலும் மண்ணில் நுண்ணுயிர்களைப் பெருக்கும் இடுபொருளாகப் பயன்படுத்தும் வகையிலும் ‘வேஸ்ட் டீகம்போஸர்’ (Waste Decomposer) எனும் இடுபொருளைக் கண்டுபிடித்து வெளியிட்டு இருக்கிறது, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலவாழ்வு அமைச்சகத்தின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலம், காஸியாபாத்தில் இயங்கி வரும் ‘தேசிய இயற்கை விவசாய மையம்’. தென்னிந்திய விவசாயிகளிடம் இதைப் பரவலாக்கும் பணிகளைச் செய்து வருகிறது, பெங்களூருவில் உள்ள ‘மண்டல இயற்கை விவசாய மையம்’.

வேஸ்ட் டீகம்போஸர் குறித்துப் பெங்களூரு மையத்தின் துணை இயக்குநர் ரவீந்தரநாத்திடம் பேசினோம். “இந்தியாவில் ஆண்டுதோறும் 62 மில்லியன் டன் இயற்கைக் கழிவுகள் உருவாகின்றன. இந்தியாவின் நகரங்களில் வசிக்கும் ஒரு மனிதன், ஒரு நாளைக்கு 200 கிராமிலிருந்து 600 கிராம் வரை மட்கக்கூடிய கழிவுகளை உருவாக்குகிறார். 300-400 வீடுகள் கொண்ட ஒரு கிராமத்தில் ஒரு நாளைக்கு 2 டன் அளவுக்கு வேளாண் கழிவுகள் (மாட்டுச் சாணம், தீவனக்கழிவுகள், தோட்ட கழிவுகள்) உருவாக்கப்படுகிறது. இதேபோல, கோசாலைகள், சர்க்கரை ஆலைகள்… போன்றவற்றின் மூலம் பெருமளவில் மட்கக்கூடிய கழிவுகள் உருவாகின்றன.

முற்காலங்களில் இதுபோன்ற கழிவுகளை மட்க வைத்து உரமாகப் பயன்படுத்தினர். தற்போது பெரும்பாலும் ரசாயன உரங்களே பயன்பாட்டில் இருப்பதால், இதுபோன்ற கழிவுகளைப் பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். சில இடங்களில் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், சுற்றுச்சூழலில் பல்வேறு எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன. இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில், நவீன அறிவியல் முறையில் கழிவுகளை மட்க வைத்து, அதன் மூலம் மண்வளத்தைக் கூட்டும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷம்தான் வேஸ்ட் டீகம்போஸர். மட்க வைப்பதற்குப் பயன்படக்கூடிய நுண்ணுயிர் தொகுதிகளை நாட்டு மாட்டுச் சாணத்திலிருந்து தனியாகப் பிரித்து ஆராய்ச்சி மேற்கொண்டார் விஞ்ஞானி கிருஷ்ணன் சந்திரா. அதன் பிறகு, 2004-ம் ஆண்டிலிருந்து 11 ஆண்டுகள் பண்ணைப் பரிசோதனைக்கு உட்படுத்தி நல்ல பலன்கண்ட பிறகு, 2015-ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக இதை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளும் குப்பைகளை மட்க வைக்க இதைப் பயன்படுத்தி வருகின்றனர்” என்றார்.

தொடர்ந்து பேசிய மையத்தின் ஜூனியர் அறிவியல் அலுவலர் முனைவர் சந்திரபிரபா இதன் பயன்பாடு குறித்துச் சொன்னார். “இது வெறும் மட்கவைக்கும் திரவமாக மட்டும் செயல்படுவதில்லை. நெல், காய்கறிகள், மரப்பயிர்கள், பழப்பயிர்கள் என அனைத்து விதமான பயிர்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம். ஒரு பாட்டில் விலை 20 ரூபாய். பார்ப்பதற்குப் பசை (கோந்து) போன்ற தோற்றத்தில் இருக்கும். ஒரு பாட்டிலிலிருந்து 200 லிட்டர் கரைசலைத் தயாரிக்கலாம்.

இந்தக் கரைசலை ஒரு மாதத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். அந்தக் கரைசலிலிருந்து அப்படியே பெருக்கிக்கொண்டே போகலாம். அதாவது, எத்தனை லிட்டர் கரைசல் வேண்டும்னாலும் தயாரித்துக் கொண்டே செல்ல முடியும். வாழ்நாளில் ஒருமுறை ரூ.20 செலவு செய்து, இதை வாங்கிவிட்டால் போதும். மீண்டும் மீண்டும் வாங்கத் தேவையில்லை. இதிலிருந்து வாழ்நாள் முழுவதும் இயற்கை இடுபொருள் தயாரித்துக் கொண்டே இருக்கலாம். பாட்டில் கிடைக்கப் பெற முடியாதவர்கள் இதைப் பயன்படுத்தும் விவசாயிகளிடம் கரைசலை வாங்கிக்கூட  இன்னொரு கரைசலைத் தயாரித்துக் கொள்ளலாம். இதைப் பாசன நீரில் கலந்து விடுவது மற்றும் இலைவழி தெளிப்பது என இரண்டு முறைகளிலும் பயிருக்குக் கொடுக்கலாம். இது, மண்ணில் உள்ள நுண்ணுயிர்களைப் பெருக்கி மண்ணை வளமாக மாற்றுகிறது.

இதைக்கொண்டு சாணம், காய்கறிக் கழிவுகள், இலைதழைக் கழிவுகள், காய்ந்த குச்சிகள், பட்டைகள் ஆகியவற்றையும் விரைவில் மட்க வைக்க முடியும். மட்கிய கழிவுகளை நிலத்துக்கு உரமாகக் கொடுக்கலாம். நகரப்பகுதிகளில் வீட்டுத்தோட்டம் அமைத்திருப்பவர்களுக்கு இந்த வேஸ்ட் டீகம்போஸர் எளிமையான இடுபொருளாகப் பயன்படும்.

இது நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் உள்ளிட்ட சத்துகள் மண்ணுக்குக் கிடைக்கத் துணை புரியும்” என்றதோடு இதைப் பயன்படுத்தி வரும் தமிழ்நாட்டு விவசாயிகளின் தொடர்பு விவரங்களைக் கொடுத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அஜீத், இந்த வேஸ்ட் டீகம்போஸரைப் பயன்படுத்தி வருகிறார். செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் ஆறாவது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நெம்மேலி கிராமத்தில்தான் அஜீத்தின் கிரீன் ஃபாரஸ்ட் பண்ணை இருக்கிறது. நாம் சென்றபோது அஜீத்தும், அவருடைய மகன் பரத்தும் பண்ணையில் இருந்தனர். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

“நான் செங்கல்பட்டுல வசிக்கிறேன். அங்கேயே ஜீவல்லரி கடையும் நடத்திட்டு இருக்கேன். எங்க ஜெயின் சமூகத்துல யாரும் விவசாயம் பக்கமெல்லாம் அவ்வளவா போகமாட்டாங்க. ஆனா, எனக்கு விவசாயத்து மேல ஒரு ஃபேஷன் உண்டு. அதனால, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்த 3 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். ரெண்டேகால் ஏக்கர்ல முருங்கை, வாழை, மா, பப்பாளி, எலுமிச்சை, தென்னைனு இருக்கு. இதோடு மியாவாக்கி முறையில 600 சதுரஅடியில மரப்பயிர்கள் வெச்சுருக்கேன். 50 சென்ட் நிலத்துல மிளகாய், நிலக்கடலை, அவரை, பீர்க்கன், கரும்பு, மக்காச்சோளம், சுரைக்காய்னு பலவகையான காய்கறிகளையும் ஒரே இடத்துல விளைவிக்கிற மாதிரி கலந்து விதைச்சுருக்கேன்.

எனக்கு விவசாயத்துல புது முயற்சிகளைச் செஞ்சு பார்க்குறது ரொம்ப பிடிக்கும். போன நவம்பர் மாசம் மகாராஷ்டிரா மாநிலம், புனேவுல நடந்த வேளாண் கண்காட்சிக்குப் போயிருந்தேன். அங்கதான் வேஸ்ட் டீகம்போஸர் பத்திக் கேள்விப்பட்டு வாங்கிட்டு வந்தேன். முன்னாடி பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், பிண்ணாக்கு கரைசல், மோர்க்கரைசல்னு பயன்படுத்திட்டுருந்தேன். இப்போ 3 மாசமா டீகம்போஸர் கரைசலை மட்டும்தான் கொடுத்துட்டு இருக்கேன். வேறெதையுமே கொடுக்கிறதில்ல. அந்தளவுக்கு இது வீரியமாவும் பயனுள்ளதாவும் இருக்கு. இதைத் தயாரிக்கிறதுக்கான வேலையும் குறைவாத்தான் இருக்கு. வேஸ்ட் டீகம்பஸோரோடு வெல்லத்தைத்தான் சேர்க்கணும்னு சொல்றாங்க விஞ்ஞானிகள். என் அனுபவத்துல 2 கிலோ வெல்லத்துக்குப் பதிலாக 4 லிட்டர் கரும்பு ஜூஸ், அதுவும் இல்லைனா நன்றாக பழுத்த 2 கிலோ வாழைப்பழத்தை மிக்ஸியில் அரைத்துச் சேர்த்துக்கலாம்” என்ற அஜீத், பயன்படுத்தும் முறை குறித்துச் சொன்னார்.

“முருங்கையைக் கவாத்து செய்றப்போ கிடைக்கிற குச்சிகள், இலைகள்; வாழை, மா, பப்பாளி, தென்னையில இருந்து கிடைக்கிற கழிவுகள் எல்லாத்தையும் ஓர் இடத்துல மொத்தமாப் போட்டு வெச்சு… அதுமேல வெல்லம், தண்ணீர் கலந்து தயாரிச்ச வேஸ்ட் டீகம்போஸர் கரைசலை நல்லா தெளிச்சுவிட்டேன். மூணே மாசத்துல எல்லாமே அப்படியே பொலபொலனு எரு மாதிரி மாறிடுச்சு. அதை அப்படியே நிலத்துல தூவி விட்டுட்டேன். அன்னன்னிக்குக் கிடைக்கும் சாணத்துல தெளிச்சுவிட்டா ஒரே மாசத்துல நல்லா மட்கிடுது.

இந்தக் கரைசலை 7 நாள்களுக்கு ஒருமுறை பயிருக்குக் கொடுக்கச் சொன்னாங்க. ஆனா, நான் தினமும் கொடுத்துட்டு இருக்கேன். அதேமாதிரி அவங்க தண்ணீர் கலந்து பயிருக்குக் கொடுக்க சொல்றாங்க. நான் தண்ணீர் கலக்காம, பவர் ஸ்பிரேயர் மூலமா அப்படியே தெளிச்சுவிடுறேன். நிலத்துல இருக்கிற காய்ஞ்ச களைச்செடிகள் தானாகவே மட்கி உரமாயிடுது. உயிரோடு இருக்கிற புல் வகைகள் ஒண்ணும் ஆகுறதில்ல. அதேமாதிரி பயிர்களுக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்ல. இதைத் தெளிச்சதால, மாமரங்கள்ல பூக்கள் உதிராம நல்லா காய்ச்சிருக்கு. இதைத் தெளிக்க ஆரம்பிச்ச பிறகு நோய்களும் வரலை. இதோடு மண்ணும் நல்லா கறுப்பா பொலபொலனு மாறிட்டுருக்கு. இதுமூலமா கிடைச்ச நன்மைகளால 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுல ஒரு டிரம் வாங்கியிருக்கேன். அதுல கரைசலைத் தயாரிச்சு சொட்டு நீர் மூலமா கொடுக்கறதுக்கான ஏற்பாடுகளைப் பண்ணிட்டுருக்கேன்.

முன்னாடி, ஒருமுறை இடுபொருள் தயாரிக்க ஆயிரக்கணக்கான ரூபாய் வரை செலவாகும். ஆனா, இப்போ வெறும் 100 ரூபாயில் (டீகம்போஸர் 20 ரூபாய்+ 2 கிலோ வெல்லம் 80 ரூபாய்) 200 லிட்டர் இடுபொருள் கிடைச்சுடுது” என்றார் மகிழ்ச்சியாக.

தொடர்புக்கு:
அஜீத்,
செல்போன்: 9381006992

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!

  1. Prabakaran R says:

    நான் மலை கிரமத்தில் வசித்து வருகிறேன் எங்கள் விவசாய நிலத்தில் மானாவரி மரவள்ளி சாகுபடி செய்து வருகிறேன் இவற்றின் மூலம் லாபம் இல்லாமல் திணறி வருகிறேன். வேறு எந்த பயிர் செய்தாலும். மந்தமான நிலையில் காணபடுகிறது. மண் வளம் பெருக்க நான் என்ன செய்ய வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *