ராமநாதபுரம் எலுமிச்சை சாகுபடியில் அசத்தும் விவசாயி!

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கும் ராமநாதபுரத்தில் விவசாயத்தில் சாதிப்பது சாதாரணம் அல்ல. “பொன்னு விளையும் பூமியில் ராமநாதபுரமும் ஒன்று தான்” என, தங்களின் விவசாய தொழில்நுட்பத்தை புகுத்தி சாதனை படைத்து வரும் பஞ்சாப் விவசாயிகளின் வரிசையில், சொந்த மண்ணை சேர்ந்த ராமநாதபுரம் பாண்டியூர் விவசாயி பழனியும் ஒருவர்.

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே பாண்டியூர், உச்சிப்புளி அருகே இருமேனி ஆகிய பகுதிகளில் மட்டுமே உவர்ப்பு சுவை கலக்காத தண்ணீர் கிடைக்கிறது. இவ்விரண்டு கிராமங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விலைக்கு விற்று வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக பாண்டியூர், இருமேனி கிராமங்கள் உள்ளன.
பாண்டியூர் விவசாயி பழனி, தனது தோட்டத்தில் வீரிய ஒட்டு ரக எலுமிச்சை மரங்கள் 4,000 எண்ணிக்கையில் வளர்த்து வருகிறார். தவிர 800 தென்னை மரங்கள், 750 உயர் ரக மா மரங்கள் என மொத்தம் 70 ஏக்கர் நிலம் பசுமை போர்வை போர்த்தியது போல் மிடுக்காக காட்சியளிக்கிறது.

  Courtesy: Dinamalar

எலுமிச்சை, தென்னை, மா விவசாயத்தில் நல்ல லாபம் ஈட்டி வருகிறார். இதன் மூலம் ஏராளமானோருக்கு நேரடியாகவும், மறை முகமாகவும் வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.
முன்னோடி விவசாயி பழனி கூறியதாவது:

 • ராமநாதபுரம் மாவட்டம் புளியங்குடியில் ‘வாண் பதின்’ முறையில் வீரிய ஒட்டு ரக எலுமிச்சை கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பின் அவற்றை ஆந்திராவுக்கு எடுத்துச் சென்று எலுமிச்சை கன்றுகளாக வளர்க்கப்படுகிறது.
 • கன்று ஒன்றுக்கு 135 ரூபாய் செலுத்தி 4,000 கன்றுகளை மூன்று ஆண்டுகளுக்கு முன் பாண்டியூர் தோட்டத்தில் 40 ஏக்கரில் நடவு செய்தேன்.
 • கால்நடை எரு, மக்கிய குப்பை அடியுரமாக பயன்படுத்தினேன். சொட்டு நீர்ப்பாசன முறையில் கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் ஆண்டில் இருந்து காய்கள் கிடைக்கிறது.
 • எலுமிச்சம் பழம் நன்கு பருத்துள்ளது. ஒரு கிலோவிற்கு 16 பழங்கள் உள்ளன. இளம் மஞ்சள் நிறத்தில் பழம் பளபளக்கிறது.
 • கோடை சீசனை முன்னிட்டு எலுமிச்சைக்கு கிராக்கி அதிகம். கிலோ 60 ரூபாய் வரை விலை போகிறது.
 • மரம் ஒன்றில் ஆண்டுக்கு 400 முதல் 600 பழங்கள் கிடைக்கின்றன. 70 சதவீதம் பழுத்த எலுமிச்சையை தினமும் பறித்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கிறோம்.
  வியாபாரிகள் பலர் தோட்டத்துக்கே வந்து மொத்தமாக வாங்கி செல்கின்றனர். அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்.
 • 20 ஆண்டுகள் வரை காய்ப்பு இருக்கும். சீசனை பொறுத்து லாபம் அதிகரிக்கும்.
 • எலுமிச்சை விவசாயத்தில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பராமரிப்பு செலவும் இல்லை. பூச்சிக்கொல்லி மருந்தும் தேவை இல்லை.
 • எலுமிச்சை லாபம் மிக்க விவசாயமாக உள்ளது. சொட்டு நீர்ப்பாசன முறை என்பதால் தண்ணீர் செலவும் குறைவு. இந்த விவசாயம் மன நிறைவை தருகிறது, என்றார்.

தொடர்புக்கு 09442045588 .
கா.சுப்பிரமணியன், மதுரை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “ராமநாதபுரம் எலுமிச்சை சாகுபடியில் அசத்தும் விவசாயி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *