எள் சாகுபடியில் தொழில்நுட்பங்கள்

மாசிப்பட்ட எள் சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றி சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது.

  • குறைந்த வயதில் (85 நாட்கள்) அதிக நீர் தேவையின்றி குறைந்த சாகுபடி செலவில் அதிக லாபம் ஈட்டக்கூடிய பயிர் எள். எள் சாகுபடி செய்வதற்கு பிப்ரவரி, மார்ச் மாத (மாசி பட்டம்) பருவமே ஏற்ற தருணம் ஆகும்.
  • கோ.1, டி.எம்.வி 4, 6 (85-90 நாட்கள்), டி.எம்.வி 3 (80-85 நாட்கள்), வி.ஆர்.ஐ.எஸ்.வி1 (70-75 நாட்கள்) ஆகியவை ஏற்ற ரகங்களாகும்.
  • எள் சாகுபடிக்கு முன்னதாக வயலை புழுதிபட உழ வேண்டும். கடைசி உழவிற்கு முன் 5 டன் தொழு உரம் அல்லது கம்போஸ்டு உரம் இடவேண்டும்.
  • ஒரு ஏக்கருக்கு தேவையான 2 கிலோ விதையை தேர்வு செய்து விதைமூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதற்காக டிரைக்கோ டெர்மாவிரிடி உயிர் பூசான கொல்லி மருந்து ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.
  • பின்னர் விதைப்பதற்கு முன் ஒரு பாக்கெட் அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் பொட்டலத்தை அரை லிட்டர் ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து அதனை விதையுடன் கலந்து நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும்.
  • ஒரு ஏக்கருக்கு தேவையான 14:9:9 என்ற விகிதத்தில் தழை, மணி, சாம்பல் சத்துக்களை அடியுரமாக இடவேண்டும். மேலுரம் இட தேவையில்லை.
  • மாங்கனீசு சல்பேட் என்ற நுண்ணூட்ட உரத்தினை ஏக்கருக்கு 2கிலோ வீதம் 18 கிலோ மணலுடன் கலந்து வயலில் சீராக தூவி மேலாக மூட வேண்டும். பின்னர் 15ம் நாள் 15செமீ இடைவெளி வைத்து செடியினை களைத்துவிட வேண்டும்.
  • விதைத்த 30ம் நாள் 30 செமீ இடைவெளி வைத்து மீண்டும் ஒருமுறை செடியினை களைத்து விட வேண்டும். இதனால் அதிக கிளைகள் வெடித்து அதிக காய்கள் பிடிக்க உதவுகிறது.
  • விதை விதைத்தவுடன் ஒரு முறையும்,  7ம் நாள் ஒரு முறையும், விதைத்த 25ம்நாள் ஒரு முறையும், பூக்கும் தருணம் ஒரு முறையும், காய் பருவத்தில் ஒரிரு முறையும் நீர்பாசனம் செய்ய வேண்டும்.
  • இவ்வாறு தொழில் நுட்பங்களை கடைபிடித்தால் எள் பயிரில் குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம். தற்போது வி.ஆர்.ஐ.எஸ்.வி1 ரகம் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *