எள் சாகுபடி செய்வது எப்படி

எள் எல்லாவித மண்ணிலும் விளைச்சல் தரவல்லது. இருப்பினும் வடிகால் வசதியுள்ள மணலும், வண்டலும் சமபங்கு கலந்தது. எள் பயிருக்கு ஏற்றது.

செம்மண் மற்றும் கருவண்டல் மண் வகைகளும் சாகுபடிக்கு ஏற்றதே. கோடையில் டி.எம்.வி.4, டி.எம்.வி.3, கோ1, வி.ஆர்.ஐ.1 ரகங்களை சாகுபடி செய்யலாம்.

எள்ளினை விதைக்கும் முன் ஒரு கிலோ எள்ளிற்கு இரண்டு கிராம் கார்பன்டைசிம் மருந்தை ஒரு பாலிதீன் பையில் போட்டு குலுக்கி குறைந்தது விதைப்பதற்கு முன் 24 மணி நேரம் வைத்திருந்து பின் விதைக்க வேண்டும். ஏக்கருக்கு எள் விதையை மணலுடன் கலந்து சீராகத் தூவி விதைத்தால் 2 கிலோ விதை போதுமானதாக இருக்கும். எள் போடும் நிலத்தை பக்குவமாக உழ வேண்டும். எள் விதையினை விதைத்த பிறகு நிலத்தில் முள் செடி அல்லது படல் கொண்டு இழுத்து விதையை பூமியில்அழுத்தும்படி செய்து விதை மேல் மண் மூடும்படி செய்ய வேண்டும். இது சமயம் நிலத்தில் ஏற்கனவே போடப்பட்டிருந்த கால்வாய் பாத்திகள் பாதிக்கப்படக்கூடாது.

நிலத்தை கடைசி உழவு செய்யும்போது மக்கிய தொழு உரம் ஐந்து டன் அளவு இடுவது அவசியம். இறவைப் பயிருக்கு அடி உரமாக யூரியா 30 கிலோ, மேலுரமாக விதைத்த 20-25 நாளில் 8 கிலோ யூரியாவும், 30-35 நாளில் 7 கிலோ யூரியாவும் இடவேண்டும். யூரியா தவிர சூப்பர் பாஸ்பேட் 56 கிலோ, 15 கிலோ பொட்டாஷ் இடவேண்டும். எள் பயிருக்கு மாங்கனீஸ் சல்பேட் இடுவது அவசியம். இதனை ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ அளவு இருபது கிலோ மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும். எள் செடி அடர்த்தியாக வளருமாதலால் புழுதியாக இருக்கும்போதே அடர்த்தி குறைப்பு செய்து சதுர மீட்டரில் 11 செடிகள் வரும்படி பணி செய்ய வேண்டும். களையை முதலில் வராமல் தடுக்க விதைப்பதற்கு முன் ஒரு எக்டேருக்கு 1 கிலோ பாசலின் களைக்கொல்லியுடன் 10 கிலோ மணல் கலந்து தூவ வேண்டும். செடிகள் முளைத்து வந்தபின் விதை விதைத்த 15வது நாளில் செடிக்கு செடி 15 செ.மீ. இடைவெளி இருக்கும்படியும் வைத்து மற்ற செடிகளைப் பிடுங்கிவிட வேண்டும். எள் பயிருக்கு மற்ற பயிர்களை விட குறைந்த பாசனமே போதும். 60 நாட்களுக்குப் பின் பாசனம் நிறுத்தப்பட வேண்டும்.

எள் செடிகளில் பூக்கள் தோன்றும். அவைகள் உஷ்ணத்தினால் கொட்டும்.இதனைத் தடுக்க பிளேனோபிக்ஸ் என்ற பயிர் ஊக்கியை தெளிக்க வேண்டும். பயிர் ஊக்கி 135 மி.லி. அளவினை 200 லிட்டர் நீரில் கலந்து விதைத்த 30, 45, 50 நாட்களில் மாலை வேளையில் மண்ணில் போதிய ஈரம் இருக்கும்போது தெளிக்கவும். எள் செடியில் எக்கடையான் பூச்சி சாற்றினை உறிஞ்சிவிடுகின்றது. இதனை தடுக்க எள் அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் மாலத்தியான் 5 சத தூளினை நிலத்தில் நன்கு படும்படி தூவ வேண்டும். களத்துமேட்டில் 100 கிராம் என்ற அளவில் இந்த மருந்தை பூமியில் தூவி அதன்மேல் எள் செடிகளை அடுக்க வேண்டும். இளம் செடிகளை வயலில் திட்டு திட்டாக மடிவதைத் தடுக்க ரோகார் தெளிக்கலாம். கொண்டைப்புழுவை அழிக்க ஏக்கருக்கு 300 மில்லி எண்டோசல்பான் அல்லது 300 மில்லி மானோகுரோட்டோபாஸ் தெளிக்க வேண்டும். காய்வீக்கங்களை உண்டாக்கும் பூச்சிகளை அழிக்க 300 மில்லி எண்டோசல்பான் தெளிக்க வேண்டும். பூவிலை வைரஸ் நோயினைத் தடுக்க டைமீதோயேட் அல்லது மானோகுரோட்டோபாஸ் 300 மில்லி தெளிக்கலாம். இலை மேல் படரும் சாம்பல் நோயினைத் தடுக்க டைத்தேன் எம்.45 மருந்து 400 கிராம் அளவினை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். எள் சாகுபடியில் அறுவடைக் கட்டத்தை, செடி வளர்ச்சியை நன்கு கவனித்துவந்து நிர்ணயிக்க வேண்டும். செடிகளின் தண்டு மஞ்சள் நிறத்தை அடைந்து வரவேண்டும். செடியில் காணப்படும் எள் காய்கள் செடியின் மத்தியப்பகுதி வரை பழுப்பு நிறத்தை அடைந்துவர வேண்டும். செடிகளின் பூமி மட்டத்தில் இருந்து 10வது காயினை பறித்து பின் அதனை பிளந்து கவனித்தால் விதைகள் நிறம் மாறி நன்கு முதிர்ச்சியடைந்ததை தெரிந்து செயல்பட வேண்டும். அறுவடை செய்த செடிகளை களத்துமேட்டில் அம்பாரங்களாக போடவேண்டும். அம்பாரத்தில் செடிகளின் நுனித்தண்டில் உள்ள இளம் காய்கள் முதிர்ச்சியடையும். அம்பாரங்களை 45 நாட்கள் கீழே தள்ளாமல் வைத்திருக்கலாம். பிறகு அவைகளை கீழே தள்ளி செடிகளை காயவைக்க வேண்டும். இவ்வாறு செய்த செடிகளைத் தட்டி எள்ளினை பிரித்து சுத்தம் செய்து மூடை பிரிக்க வேண்டும்

நன்றி: erodelive


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “எள் சாகுபடி செய்வது எப்படி

  1. RAJIV says:

    இவ்வளவு விஷத்தை நிலத்தில் போட சொல்றீங்க…… இந்த பதிவை பதிவு செய்தவர்கள், இந்த விஷத்தை தன் குடும்ப உறவுகளுக்கு கொடுப்பார்களா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *