எள் சாகுபடி நுட்பங்கள்

தை, மாசி பட்டத்தில் எள் சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நான்கு மடங்கு மகசூல் அதிகரிக்கலாம் என கோபி வேளாண் உதவி இயக்குனர் ஆசைத்தம்பி தெரிவித்தார்.

தமிழகத்தில், 2.5 லட்சம் ஏக்கரில் எள் சாகுபடி செய்யப்படுகிறது. சராசரி மகசூல் ஏக்கருக்கு, 100 முதல், 200 கிலோ வரை கிடைக்கிறது.

சில எளிய தொழில் நுட்பங்கள் மூலம், நான்கு மடங்கு மகசூல் பெறலாம்.

 • தை, மாசி மற்றும் பங்குனி, சித்தரை பட்டம் இறவைக்கு ஏற்றதாகும்தை, மாசி பட்டத்தில் டி.எம்.வி., 3, 6, கோ 1, வி.ஆர்.ஐ., 1 பையூர் 1 ஆகிய ரங்களும், பங்குனி மற்றும் சித்திரை பட்டத்தில் டி.எம்.வி., 3, 4, 6, கோ 1, வி.ஆர், 1, எஸ்.வி.பி.ஆர்., 1 ஆகிய ரங்களும் பரிந்துரை செய்யப்படுகிறது.
 • ஏக்கருக்கு இரண்டு கிலோ அனைத்து ரகங்களுக்கும் போதுமானதாகும். விதையை மணலுடன் கலந்து தூவ வேண்டும்.
 • விதை, மண் மூலம் பரவும் நோயை கட்டுப்படுத்த விதை நேர்த்தி அவசிமாகும். ஒரு கிலோ விதைக்கு கார்பன்டைசிம், இரண்டு கிராம் மருந்து கலக்க வேண்டும்.
 • விதை நேர்த்தி செய்து, 12 மணி நேரம் வைத்திருந்த பின் விதைக்க வேண்டும்.
 • ஒரு ஏக்கருக்கு ஒரு பொட்டலம், 200 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் ஒரு பொட்டலம் பாஸ்போபேக்டீரியா விதையுடன் கலந்து விதைக்க வேண்டும். தழைசத்து பயிருக்கு கூடுதலாக கிடைக்க வழி வகுக்கிறது.
 • உயிர் உரங்கள் விதையுடன் நன்கு கலக்க ஆறிய அரிசி கஞ்சியை சிறிது சேர்க்கலாம்.
 • முதலில் விதை நேர்த்தி செய்து விட்டு பிறகு அரை நாள் கழித்து, உயிர் உரங்களை கலந்து ஈரம் உலர்ந்தவுடன் விதைக்க வேண்டும்.
 • ஏக்கருக்கு இரண்டு கிலோ மாங்கனீசு சல்பேட்டை மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும்.நுண்ணூட்டம் எள் மகசூலை அதிகரிக்கவும், எண்ணெய் சத்தை கூட்டவும் பயன்படுகிறது.
 • செடிக்கு செடி ஒரு அடி இடைவெளியும், வரிசைக்கு வரிசை ஒரு அடி இடைவெளி இருக்க வேண்டும்.
 • விதைத்த, 15 வது நாளில் செடிக்கு செடி அரை அடி இடைவெளி இருக்கும் படியும், 30வது நாளில் செடிக்கு செடி ஒரு அடி இடைவெளி உள்ளவாறும் வைத்து மற்ற செடிகளை பிடுங்கிட வேண்டும்.
 • எள் பயிரில் பயிர் கலைத்தல் ஒரு முக்கிய பணியாகும். இவ்வாறு செய்யாவிட்டால் மகசூல் கணிசமாக குறையும் என்பதை விவசாயிகள் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 • ஒரு சதுர மீட்டர் பரப்பளவில், 11 செடிகள் இருப்பது அவசியமாகும். செடி கலைக்கும் போது வயலில் ஈரம் இருப்பது நல்லது.
 • இறவை எள் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு, 14-9-9 தழை, மணி, சாம்பல் சத்துக்களை கொண்ட யூரியா, 30 கிலோ, சூப்பர், 55 கிலோ, பொட்டாஷ், 15 கிலோ ஆகிய உரங்களை இட வேண்டும்.
 • எள் பயிருக்கு அனைத்து உரங்களையும் அடி உரமாக இட வேண்டும்.
 • விதைத்த, 25ம் நாள், 35ம் நாளில் ஒரு முறை களை எடுக்க வேண்டும்.
 • களை எடுத்த பின் இரண்டு, முன்று நாள் கழித்து நீர் பாய்ச்சுவது நல்லது. விதைத்த, 20 நாளில் கொண்டைப்புழு தாக்குதல் தென்படும். இப்புழுக்கள் இலைகளை ஒன்றோடு ஒன்றாக பிணைத்து கொண்டு, அதில் இருந்து கொண்டு பூ, இளம் காய்கள் மற்றும் குருத்துகளை உண்ணுகின்றன. இதை வேப்பங்கொட்டை ஆறு கிலோவை இடித்து, ஒரு நாள் ஊற வைத்து, காதி சோப் கலந்து தெளிக்கலாம். நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூலை பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *