ஆயுள் பயிர் கறிவேப்பிலை!

கறிவேப்பிலை இல்லாமல் சமையல் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை. சமையலுக்கு எப்போதும் தேடப்படும் கறிவேப்பிலையை ஒரு முறை மட்டும் நடவு செய்தால், தென்னையைப் போல் ஆயுள் முழுவதும் பயன்பெறலாம் என்கிறார் தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த விவசாயி கே.வீரமணி.

பார்வைக்கு நல்லது

நல்ல மணமும் மருத்துவக் குணமும் கொண்ட கறிவேப் பிலையை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் உடலுக்குக் குளிர்ச்சி கிடைப் பதுடன், பார்வை குறைபாடு பிரச்சினை குறையும் என்பது மருத்துவர்கள் அறிவுரை. இதைத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துத் தலையில் தேய்த்துவந்தால் தலைமுடி கொட்டுவது நின்றுவிடுவதுடன், முடி கருகருவென நன்றாக வளரும்.

ஆயுள் பயிர்

சமையலிலும் மருத்து வத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும் கறிவேப்பிலையை, தன்னுடைய 2 ஏக்கர் நிலத்தில் சாகுபடிசெய்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வருவாய் ஈட்டிவரும் விவசாயி கே. வீரமணி, அது குறித்துப் பகிர்ந்துகொண்டது:

Courtesy: Hindu
Courtesy: Hindu
 • கறிவேப்பிலையில் நாட்டு, மலைக்குழை என இரண்டு வகைகள் உள்ளன.
 • நாட்டுக் கறிவேப்பிலை நல்ல வாசனையாக இருக்கும் மலைக்குழை என்று அழைக்கப்படும் வட்டக்குழை வட்ட வடிவமாகவும் சற்றுப் பெரிதாகவும் இருக்கும். இதில் வாசனை சற்றுக் குறைவாக இருக்கும்.
 • தேனி மாவட்டத்தில் நாட்டுக் கறிவேப்பிலை மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கரிசல், செம்மண், வண்டல் என எந்த நிலத்திலும் கறிவேப்பிலை சாகுபடி செய்யலாம். முதன்முதலில் நடவு செய்யக் கண்டு (செடி), கூலி என மொத்தம் ஒரு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம்வரை செலவு ஏற்படும்.
 • அதன் பின் ஆண்டுக்கு ஒரு முறை இயற்கை உரம் வைக்கலாம். தேவைப்பட்டால் ஆண்டுக்கு மூன்று முறை ரசாயன உரம் வைக்கலாம். 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.
 • ஓர் ஆண்டுக்குப் பின் கவாத்துக்கு (பறிப்பு) தயாராகிவிடும்.
 • அதன் பின் மூன்று மாதத்துக்கு ஒரு முறை கவாத்து செய்துகொண்டே இருக்கலாம். 50 ஆண்டுகளுக்கு மேலாக இதன் மூலம் பயன்பெறலாம். அதனால் இதை விவசாயிகள் ஆயுள் பயிர் என்று கூறுகின்றனர்.
 • மூன்று மீட்டர் ஆழத்துக்கு இதன் வேர்கள் தரையில் செல்வதால் கவாத்து செய்யாமல் விட்டால், பெரிய மரமாக வளர்ந்துவிடும். அதனால் தொடர்ந்து கவாத்து செய்துகொண்டே இருக்க வேண்டும்.
 • கறிவேப்பிலைத் தோட்டத்தில் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மற்ற வேலைகளைச் செய்துவிட்டு இதைக் கவனிக்கலாம்.
 • பனி பொழியும் காலங்களில் இலைப்புள்ளி, கருகல் நோய் தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் குறைவதுடன், இலையின் எடையும் குறைந்துவிடும். அந்த நேரத்தில் பூச்சி மருந்து தெளித்து நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
 • ஆண்டு முழுவதும் இதன் தேவை அதிகரித்துவருவதால் சராசரியாக ஒரு கிலோ ரூ.12வரை விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. முகூர்த்தக் காலங்களில் இன்னமும் கூடுதலாக விலை போக வாய்ப்புள்ளது. ஒரு ஏக்கருக்கு ஒரு முறை 4 ஆயிரம் கிலோவரை கவாத்து செய்ய முடியும்.
 • வெளிநாடுகளில் நாட்டுக் கறிவேப்பிலைக்குக் கிராக்கி இருப்பதால் கவாத்து செய்யப்பட்டவுடன் குளிரூட்டப்பட்ட கண்டெய்னரில் கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சில நிறுவனங்கள் இதை வாங்கிப் பொடி செய்து விற்பனை செய்து வருகின்றன என்கிறார்.

கே.வீரமணி தொடர்புக்கு: 09003397420

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *