கருவேப்பிலையில் சாதிக்கும் பெண்

நாம் கறிவேப்பிலையை என்ன செய்வோம்? சமையலில் சுவைக்காகவும் மணத்துக்காகவும் பயன்படுத்துவோம். ஆனால் அதையே தன் பொருளாதாரத்துக்கான ஆதாரமாக்கி ஜெயித்துக் காட்டியிருக்கிறார் ஜோதிபதி. கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அலுவலக அதிகாரியான இவர், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கறிவேப்பிலையை மதிப்புக்கூட்டு பொருளாக்கி அமேஸான், எக்ஸ்போர்ட் இந்தியா, இந்தியா மார்ட் ஆகிய ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறார் .

கோவை, மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை ஆசிரியர் காலனியில் உள்ள தனது வீட்டில் அதிகாலை வேளையிலேயே கறிவேப்பிலைப் பொடியை கவர்களில் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார் ஜோதிபதி. உதகை வெல்லிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் அதிகாரி நிலையில் பணியாற்றிய இவர், கடந்த 2011-ம் ஆண்டில் ஓய்வுபெற்றார். மூன்று பெண் குழந்தைகளும் திருமணமாகி செட்டில் ஆகி விட்டனர். கணவர் தேவராஜ்பதி, தேயிலை எஸ்டேட்டில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது, முதியோர் பராமரிப்பு இல்லத்தில் மேலாளராகப் பணியாற்றிவருகிறார்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

ஆர்வத்துக்கு ஓய்வில்லை

“ஓய்வூதியமே போதும் என்றாலும் ஓய்வுக்குப் பிறகு என்னால் வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. வீட்டில் இருந்தபடியே ஏதாவது தொழில் ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தேன். எந்தத் தொழிலைத் தேர்வு செய்யலாம் என்ற என் குழப்பத்துக்கு, கோவை வேளாண் பல்கலைக்கழகம் நடத்திய பயிற்சி முகாம்கள் தெளிவு தந்தன” என்று சொல்லும் ஜோதிபதி, இயற்கை வேளாண் பொருட்கள் மூலமாக மதிப்புக்கூட்டு பொருள் தயாரித்து விற்கலாம் என முடிவு செய்தார். மதிப்புக்கூட்டுப் பொருட்களுக்குத் தேவையான மூலப் பொருட்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே கிடைத்தால், தொழிலை நேர்த்தியாகக் கொண்டு செல்ல முடியும் என்பதும் அவருக்குப் புரிந்தது.

“எங்கள் ஊரில் கறிவேப்பிலை விளைகிறது. ஆனால், செயற்கை உர கலப்பினால் விளைவிக்கப்பட்ட கறிவேப்பிலைதான் அதிகமாகக் கிடைத்தது. இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இயற்கை வேளாண்மை மூலமாக ஒரு விவசாயி விளைவித்து வருவது தெரிய வந்தது. அவரைச் சந்தித்து ஒப்பந்தம் போட்டுக்கொண்டேன்” என்று தான் தொழில் தொடங்கிய கதையைச் சொன்னார் ஜோதிபதி.

இதற்காக இரண்டு பெண் ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தியிருக்கிறார். வீட்டிலேயே உலரவைக்கப்படும் கறிவேப்பிலையை அரைத்து தொக்கு, இட்லிப் பொடி ஆகியவற்றைச் செய்கிறார்கள். தவிர கறிவேப்பிலையை பாக்கெட்டுகளில் அடைத்து, கேட்கிறவர்களுக்கு பார்சல் மூலமாக அனுப்பிவைக்கிறார்கள்.

ஆன்லைன் வர்த்தகம்

“இயற்கை முறையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் அருமை குறித்து விற்பனையாளர்களுக்குத் தெரிவதில்லை. சந்தைப்படுத்துவதற்குப் பல கடைகளையும், வியாபாரிகளையும் அணுகியபோது மிக மோசமான அனுபவமே ஏற்பட்டது. சிலர் அடிமாட்டு விலைக்குக் கேட்டார்கள்” என்று சொல்லும் ஜோதிபதி அதற்குப் பிறகுதான் ஆன்லைனில் விற்பனை செய்வது என்ற முடிவுக்கு வந்தார்.

“ஆன்லைன் மூலமாகச் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு எனது தயாரிப்பு குறித்து விவரங்களை அனுப்பிவைத்து, கட்டணம் செலுத்திப் பதிவுதாரர் ஆனேன். தற்போது, அந்த நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக ஆர்டர்களை எனக்குத் தருகிறார்கள். வெளிமாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வருகின்றன. அவற்றுக்குப் பார்சல் மூலமாக அனுப்பி வைத்துவிடுவேன்” என்கிகிர் ஜோதிபதி.

லண்டனில் உள்ள தன் உறவினர் மூலமாக அங்கு சந்தைப்படுத்துவது தொடர்பான செயல்பாடுகளைத் தற்போது மேற்கொண்டு வருகிறார். கோவை வேளாண் பல்கலைக்கழக வேளாண் வணிக மேம்பாட்டு பிரிவும் சந்தைப்படுத்துதல் தொடர்பான வழிமுறைகளை அவருக்கு வழங்கி வருகிறது.

ஆன்லைனில் மட்டுமே சந்தைப்படுத்துவதால், உள்ளூர் மக்களிடம் தராமான பொருளை கொண்டு சேர்க்க முடியவில்லேயே என்ற வருத்தம் இவருக்கு உள்ளது.

“அதையும் ஒருநாள் சாதிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்கிறார் ஜோதிபதி. நம்பிக்கை நிச்சயம் மெய்ப்படும்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *