சென்னையின் நுரையீரலுக்கு ஆபத்து

ஒரு காலத்தில் ஐந்து சதுரக் கிலோமீட்டருக்கு முழுமையான காடாக, ஆங்கிலேயர்களின் பொழுதுபோக்கு வேட்டைக் களமாக இருந்த காட்டுப் பகுதி, ஒரு மாநகர வளர்ச்சிக்குப் பலியாகி, துண்டாடப்பட்டு, மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் ஒரு மாநகரின் மையத்தில் உள்ள ஒரே தேசியப் பூங்காவாகவும், இந்தியாவின் மிகச் சிறிய தேசியப் பூங்காக்களுள் ஒன்றுமான அது, கிண்டி தேசியப் பூங்காதான்.

பெயர்தான் பூங்காவே தவிர, அரிய வகைத் தாவரங்களும் உயிரினங்களும் செழித்துள்ள ஒரு சரணாலயம். அதன் எதிர்காலம் இன்றைக்குக் கேள்விக்குறியாகிவிட்டது.

சென்னை கடற்கரை சார்ந்த பகுதிகளிலும், கிழக்கு கடற்கரையின் மற்றப் பகுதிகளிலும் ஒரு காலத்தில் மிகுந்து காணப்பட்ட பசுமைமாறா உலர் காடுகள், முட் செடிகொடிகள் கொண்ட சூழல்தொகுதி (Ecosystem) இந்தக் காட்டின் சிறப்பம்சம்.

ஒருபுறம் ஆளுநர் மாளிகையையும் மற்றொருபுறம் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தையும் (ஐ.ஐ.டி.) கொண்டுள்ள இந்தக் காட்டுப் பகுதி, அழிந்துவரும் ஆபத்தில் உள்ள வெளிமான்களின் (Black buck) இயற்கைப் புகலிடம். 350 தாவர வகைகளும்,130 பறவை வகைகளும், 60 வகை பூச்சிகள், 60 வகை சிலந்திகள் உள்ளிட்ட உயிரினங்களைக் கொண்ட இந்தக் காடு, இன்றைக்கு 2.7 சதுரக் கிலோமீட்டர் பரப்பு கொண்டதாகச் சுருக்கப்பட்டுவிட்டது.

துண்டாக்கப்பட்ட காடு

ஐ.ஐ.டியைக் கட்டுவதற்காக இந்தக் காட்டின் ஒரு பகுதி மத்தியக் கல்வி அமைச்சகத்திடம் 1958-ம் ஆண்டு கொடுக்கப்பட்டது. இந்தக் காட்டுப் பகுதி இப்படித் திருத்தப்பட்டதை, இங்கு வாழும் உயிரினங்கள் எதுவும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆண்டுதோறும் இந்தத் தேசியப் பூங்காவில் நடைபெறும் மான்கள் கணக்கெடுப்பின்போது தேசியப் பூங்காவாக வரையறுக்கப்பட்ட பகுதி மட்டுமில்லாமல், ஒரே வகை தாவரங்கள், உயிரினங்களைக் கொண்டுள்ள அண்டைப் பகுதிகள் என்பதால் ஆளுநர் மாளிகை, ஐ.ஐ.டியிலும் கணக்கெடுப்பு நடத்தப்படுவது இது ஒருங்கிணைந்த காடு என்பதற்கான பல எடுத்துக்காட்டுகளுள் ஒன்று.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1988-ன்படி கிண்டி தேசியப் பூங்காவின் ஏழு முதல் 10 கி.மீ. பரப்பு கொண்ட சுற்றுப் பகுதி சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி (Eco Sensitive Area/ Zone) என்று வரையறுக்கப்பட வேண்டும். இப்படி வரையறுக்கப்படுவதன் நோக்கம், பாதுகாக்கப்பட்ட பகுதியில் வாழும் உயிரினங்கள் பருவகால மாற்றம் சார்ந்து இடம்பெயர வசதியாக இருக்கும் என்பதுதான்.

அத்துடன், மனிதச் சமூகம் சார்ந்த நவீன வளர்ச்சி ஏற்படுத்தும் தாக்கத்தில் இருந்து அந்த உயிரினங்களைப் பாதுகாக்கவும் இப்பகுதி உதவுகிறது. ஆனால், கிண்டி தேசியப் பூங்காவுக்குச் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி தேவை இல்லை எனத் தமிழக அரசு தற்போது பரிந்துரைத்து இருக்கிறது. இது சூழலியல் ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

சூழலியல் முக்கியப் பகுதி

சென்னை மக்கள்தொகை மிகுந்த ஒரு மாநகரம் என்பதால், இங்குச் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி தேவையில்லை என்று முடிவை நியாயப்படுத்த முடியாது. ஏனென்றால், கிண்டி தேசியப் பூங்காவை ஓட்டியுள்ள ஆளுநரின் மாளிகை, ஐ.ஐ.டி. வளாகங்கள் அரிய தாவரங்கள், உயிரினங்கள் அடங்கிய காட்டுப் பகுதியாகவே இன்றைக்கும் இருந்து வருகின்றன.

சென்னை போன்று மோசமாகச் சுற்றுசூழல் சீர்கேடு அடைந்துள்ள நகரத்துக்குக் கிண்டி தேசியப் பூங்கா போன்ற காட்டுப் பகுதி, மாசைக் களைந்து மனிதன் சுவாசிக்க சுத்தமான காற்றை அளிக்கும் நுரையீரலாகப் பெரும் சேவையாற்றி வருகிறது.

இந்தத் தேசியப் பூங்காவுக்குச் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை அறிவிக்கத் தமிழக அரசு முறைப்படி நடவடிக்கை எடுப்பது, அந்த நுரையீரலைக் காப்பதற்கான முதல் படியாக இருக்கும்.

ஜெ. தமிழ்ச்செல்வி- கட்டுரையாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், தொடர்புக்கு: jtamilselvi@gmail.com

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *