இயற்கை முறையில் பாகற்காய் சாகுபடி

மசினகுடி பகுதியில் இயற்கை முறையில் பாகற்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மலை மாவட்டமான நீலகிரியில் தற்போது உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள மலை காய்கறிகள் அறுவடைக்கு பின்னர் மேட்டுப்பாளையம், ஊட்டி பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கிறார்கள். அங்கிருந்து வெளிமாவட்டங்கள், மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் மசினகுடி மற்றும் வாழைத்தோட்டம் பகுதியில் சில விவசாயிகள் குறைந்த செலவில் அதிக லாபம் பெறுவதற்காக தங்களது நிலங்களில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வாழைத்தோட்டம் கிராமத்தில் உள்ள விவசாயிகள் முதற்கட்டமாக பாகற்காயை பந்தல் அமைத்து இயற்கை வேளாண்மை முறையில் சாகுபடி செய்தனர். நிலத்தில் விதை விதைக்கப்பட்டு 60 நாட்களில் பாகற்காய் கொடியானது நன்றாக வளர்ந்து காய்களை காய்க்க தொடங்கி உள்ளன.

இந்த பாகற்காய் செடிகளுக்கு எந்தவித பூச்சிக்கொல்லி மருந்துகளும் தெளிப்பதில்லை. நோய் தாக்கினாலும் பசுமாட்டின் சாணம், பஞ்ச காவியம், ஜீவாமுர்தம் போன்ற இயற்கை மருந்துகளை பயன்படுத்தி கட்டுபடுத்தி வருகின்றனர். மேலும் சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சியும் வருகின்றனர்.

Courtesy: Dinathanthi
Courtesy: Dinathanthi

 

 

 

 

 

 

 

 

 

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:–

இயற்கை வேளாண்மை முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் பாகற்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. தொடர்ந்து பாகற்காயை 4 நாட்களுக்கு ஒரு முறை 2 மாதங்கள் வரை பறிக்க முடியும். இங்கு அறுவடை செய்யப்படும் பாகற்காய்கள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், கேரளம், கர்நாடகம் போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. தற்போது ஒரு கிலோ பாகற்காய் ரூ. 20 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது.

குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதால் மற்ற விவசாயிகளையும் இயற்கை முறையில் சாகுபடி செய்ய கூறி வருகிறோம். மேலும் மற்ற காய்கறிகளையும் இயற்கை முறையில் சாகுபடி செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

நன்றி:தினத்தந்தி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *