உருளைக் கிழங்கு சாகுபடி

நடப்புப் பருவத்துக்கு ஏற்ற தோட்டப் பயிரான உருளைக்கிழங்கை சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக பயன்பெறலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.தோட்டப் பயிரான உருளைக்கிழங்கு ஜனவரி – பிப்ரவரி, மார்ச் – ஏப்ரல், ஆகஸ்ட் – செப்டம்பர் ஆகிய பருவங்களில் பயிர் செய்யலாம்.

இந்தப் பயிருக்கு மணல் கலந்த வண்டல் மண் சிறந்ததாகும். ஒரு ஹெக்டேருக்கு ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரத்து 500 வரை விதை தேவைப்படும்.

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

விதை நேர்த்தி:

 • விதைக் கிழங்குகளை நோய் தாக்காத நிலங்களில் இருந்து தேர்வு செய்ய வேண்டும். சிறியத் துண்டுகளாக வெட்டிய விதை கிழங்கை உபயோகப்படுத்தும்போது அதை 10-15 செல்சியஸ் வெப்ப நிலையிலும், 85 முதல் 90 சதவீத ஈரப்பதத்திலும், 4 முதல் 6 நாள்கள் வரை வைக்க வேண்டும்.
 • இவ்வாறு வைப்பதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர் கிருமிகள் கிழங்கில் நுழைவதைத் தடுக்கலாம்.
 • விதை முளைப்பை அதிகப்படுத்த 25 பிபிஎம் ஜிப்ராலிக் அமிலத்தில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் நிழலில் உலர்த்த வேண்டும்.
 • இவற்றை 10 நாள்கள் ஒரு கோணியில் நிரப்பி காற்றோட்டமுள்ள இருட்டு அறையில் வைக்க வேண்டும்.
 • 4 அடி அகலமுள்ள உயரப் பாத்தியில் 30 செ.மீ. இடைவெளியில் 4 வரிசை வருமாறு நட வேண்டும்.

நீர் வழி உரமிடல்:

 • தழை, மணி, சாம்பல் சத்துகளை முறையே ஹெக்டேருக்கு 120 : 240 : 120 என்ற அளவில் நீரின் மூலம் உரமிட வேண்டும்.
 • சொட்டு நீர்ப் பாசன முறையில் தினமும் ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
 • தேவையான அளவு நீரில் கரையும் உரத்தை சொட்டு நீர்ப் பாசனத்துடன் இணைக்கப்பட்டுள்ள உரத் தொட்டியின் மூலம் இட வேண்டும்.

பின் செய் நேர்த்தி:

 • ஒரு ஹெக்டேருக்கு, லின்னுயரான் 0.5 லிட்டரை 900 லிட்டர் தண்ணீரில் கலந்தும், 2 லிட்டர் நிஃபென்னுடன் 900 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர் நட்டப் பின் நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
 • நடவு செய்த 25 நாள்களுக்குப் பிறகு விதைக் கிழங்கின் இடைக்கணுப் பகுதியில் இருந்து தண்டு முளைத்து மண்ணை நோக்கி வளரும்.
 • பின்னர் அதன் நுனியில் இருந்து கிழங்கு உருவாகத் தொடங்கும் இந்த நிலையில் மண் அணைத்தல் மிகவும் அவசியம்.

அறுவடை:

 • அறுவடை செய்ய கிழங்குகளைத் தோண்டி எடுத்து சுத்தம் செய்து கோணியில் சேகரிக்கலாம்.
 • விதைக்காக கிழங்குகளை அறுவடைக்கு 15-இல் இருந்து 20 நாள்களுக்கு முன்பிருந்து நீர்ப் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.
 • இதன் மூலம் கிழங்குகளின் தோல் தடிமனாகி அதன் சேமிப்புக் காலத்தை அதிகப்படுத்தும்.
 • மேலும் வைரஸ் நோய்களை மற்றச் செடிகளுக்கு பரப்பும் அசுவினி பூச்சிகளின் பெருக்கத்தைத் தடுக்கிறது.
 • இதை சிறந்த முறையில் விதைக்காகப் பயன்படுத்தலாம்.
 • அறுவடை செய்த கிழங்குகளை ஓரிடத்தில் குவியலாக வைப்பதன் மூலம் அவற்றை சுத்தம் செய்வது எளிதாகிறது.
 • பின்னர் பெரிய, சிறிய, நடுத்தர அளவுள்ள கிழங்குகளைப் பிரித்தெடுக்க வேண்டும். நோய், பூச்சித் தாக்கிய கிழங்குகளை தனியே எடுத்துவிட வேண்டும்.

இந்த முறையில் விவசாயிகள் உருளைக் கிழங்கைப் பயிரிட்டால் அதிக பயன்பெறலாம் என வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “உருளைக் கிழங்கு சாகுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *