புதுவையைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் காய்கறித் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார்.
விவசாய நாடான இந்தியாவில், விளை நிலங்களின் பரப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. ஆனால், மக்கள் தொகை வேகமாகப் பெருகிவரும் சூழலில், உணவுப் பொருள், தானியம், காய்கறிகளின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் உணவுப் பொருள்களின் விலையானது ஏறுமுகத்தில் இருப்பதும், சாதாரண மக்களின் மாத பட்ஜெட்டில் இதற்காகப் பெரும் தொகையை செலவிட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
இதனை நன்கு உணர்ந்துகொண்ட புதுவை உருளையன்பேட்டையைச் சேர்ந்த திருஞானசம்பந்தம், தனது வீட்டு மொட்டை மாடியில் 850 சதுர அடி பரப்பில் தோட்டம் அமைத்து காய்கறிக்கான செலவை மிச்சப்படுத்தி வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பஞ்சாலை ஊழியர் ஆவார்.
இத் தோட்டத்தில் பீர்க்கங்காய், பரங்கி, சுரக்காய் மற்றும் கொம்பன் அவரை, பட்டை அவரை, பாகற்காய் என கொடிகளில் கொத்துக், கொத்தாய் காய்த்துத் தொங்குகின்றன.
கத்தரிக்காய், தக்காளி, வெண்டைச் செடிகளுடன் சிவப்பு முருங்கை, பச்சை முருங்கை, சடை முருங்கை என்று 21 வகையான முருங்கைகளையும் வளர்த்து வருகிறார். ஒரே செடியில் 37 ரக வெள்ளைக் கத்தரிக்காய்கள் காய்த்துள்ளன. மேலும், துளசி, புதினா, சோற்றுக்கற்றாழை, கருவேப்பிலை போன்ற மூலிகைச் செடிகளுக்கும் பஞ்சமில்லை.
செடிகளை புதுப்பிக்க வசதியாக தக்காளி, கத்தரி, வெண்டை உள்ளிட்டச் செடிகளுக்கான விதைகளை விதைத்து, நாற்றுகளையும் பராமரித்து வருகிறார்.
பூத்துக் குலுங்கும் மலர்கள்:
இங்கு குண்டுமல்லி, முல்லை, கனகாம்பரம், சிவப்பு ஊசி மல்லி, அலரி, செம்பருத்தி, அரிய வகையான பாரிஜாதம், சங்கு பூச்செடி உள்ளிட்ட மலர்களும் பூத்துக் குலுங்குகின்றன. கொய்யா, மனத்தக்காளி என்று வகை, வகையான காய், கனிச் செடிகளும் வளர்க்கப்பட்டுள்ளன.
இது குறித்து திருஞானசம்பந்தம் கூறியது:
இளம் வயதில் வேளாண் படிப்பை முடித்தேன். தனியார் ஆலையில் வேலை கிடைத்ததால் திசை மாறிவிட்டேன். இருந்தபோதும், விவசாயத்தின் மீதான எனது ஆர்வம் குறையவில்லை. ஆரம்ப காலத்தில் வீட்டின் பின் பகுதியில் தோட்டம் அமைத்திருந்தேன். கடந்த 4 ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற பின், வீட்டு மாடியில் தோட்டம் அமைத்தேன். இது எனது நீண்ட நாள் கனவு. மாடித் தோட்டத்தில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பூக்கள், கனிகள் மன நிறைவாகக் கிடைக்கின்றன. அருகில் வசிப்போருக்கும் காய்கறிகளை இலவசமாக வழங்கி வருகிறேன்.
மாடித் தோட்டத்தை எளிதாகப் பராமரிக்க முடியும். மண்புழு உரம், சாணம் போன்ற இயற்கையான உரத்தை பயன்படுத்துவதால், பூச்சிக்கொல்லியின் தாக்கம் இல்லாத ஆரோக்கியமான காய்கறிகளை சுவைக்க முடிகிறது.
இச்செடிகளுக்கு சிறிதளவு தண்ணீரே போதுமானது. மாடித் தோட்டம், சமையலுக்கு பயன்படுவதோடு வீட்டுக்கும் அழகு சேர்க்கிறது. ஓய்வு நேரத்தில் எனக்கு மன அமைதியைத் தருகிறது என்கிறார் அவர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்