கூரை தோட்டம் மூலம் காய்கறிகள் சாகுபடி

மார்க்கெட் சென்றால் எந்த காய்கறி எந்த விலை என்று பயந்து கொண்டே கேட்க  வேண்டி இருக்கிறது! இந்த வாரம் தக்காளி விலை அதிகம் என்றால் போன வாரம் வெங்காயம் விலை அதிகம்!

விளைப்பு குறைந்ததும், வெகு தூரத்தில் இருந்து காய்கறி கொண்டு வருவதால் அதிகரிக்கும் செலவும் காய்கறி விலை ஏற்றத்திற்கு காரணம்..

அபர்ட்மெண்ட் மொட்டை மாடிகளில் இந்த மாதிரி கூரை தோட்டம் போட்டு காய்கறி விளைவித்தால் நல்ல தரமான காய்கறி நமக்கு கிடைக்கும்.. இதோ கூரை தோட்டம் பற்றிய செய்தி….

கூரை தோட்டம் மூலம் காய்கறிகள் சாகுபடி
சூலூர் ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கூரை தோட்டத்தில் இயற்கை வேளாண்மை மூலம் விளையும் காய்கறி விளைச்சல் களைகட்டுகிறது. சந்தைகளில் விற்பதை விட 10 சதவீதம் விலை அதிகமாக இருந்தாலும், ரசாயன கலப்பில்லாத இந்த காய்கறிகளை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் முதன்முறாக சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் மேல் கூரைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

திட மற்றும் திரவ வள மேலாண்மை மையங்களில் உற்பத்தியாகும் உயிர் உரங்களை பயன்படுத்தி இயற்கை வேளாண்மை முறையில் இந்த தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

8000 சதுர அடியில் 1200 மூங்கில் கூடைகளில் கீரை வகைகள், தக்காளி, கத்தரி, முள்ளங்கி, வெங்காயம், பீட்ரூட், பாகற்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறி வகைகள், சோற்றுக்கற்றாழை, தூதுவளை போன்ற மருத்துவ உணவு பொருட்கள் பயிரிடப்படுகின்றன.
இந்த கூரைத் தோட்டத்தை பராமரிக்க மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 10 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு விளையும் காய்கறிகளை விற்று கிடைக்கும் வருமானத்தை அவர்கள் தங்களது சம்பளமாக பிரித்துக் கொள்கிறார்கள். சராசரியாக தலா ஒருவருக்கு தினமும் ரூ.150 வருமானமாக கிடைக்கிறது. மேலும், இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளை விற்பனை செய்ய ஊராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் 400 சதுர அடி பரப்பளவில் அங்காடி கட்டடம் அமைப்பதற்கான கட்டுமான பணியும் நடந்து வருகிறது.
இதுகுறித்து சூலூர் பி.டி.ஓ தேவகி கூறியதாவது:

  • கூரைத்தோட்டம் அமைக்க சத்தியமங்கலத்தில் இருந்து ஆர்டர்கள் மூலமாக மூங்கில் கூடைகள் வாங்கப்பட்டன.
  • அந்த கூடைகளை சாணத்தால் நன்றாக மெழுகி, கூடைகளில் இருக்கும் துவாரங்களை முதலில் அடைக்கப்படுகின்றன.
  • பின்பு, பயிரிடப்படும் காய்கறிக்கு ஏற்ற மண் அதில் நிரப்பப்படுகிறது.
  • தென்னை மஞ்சி, இயற்கை உரங்கள் அந்த மண்ணில் கலந்து பின்பு காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன.
  • இதற்கு தேவையான தண்ணீர் அலுவலக கட்டடத்தின் மேல் கூரையில் டேங்க் மூலமாக சேமிக்கப்படுகிறது.
  • உரங்கள் எங்கள் அலுவலக வளாகத்தில் சேரும் மட்கும் குப்பைகளை கொண்டு தயாரிக்கிறோம்.
  • இயற்கை வேளாண்மை முறையில் விளைவிக்கப்படுதால், இங்கு விளையும் காய்கறிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
  • சந்தை, காய்கறி கடைகளில் விற்கப்படுவதை விட 10 சதவீதம் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டாலும், ரசாயன கலப்பில்லாத இந்த காய்கறிகள், கீரைகளை அவர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
  • தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூரைத்தோட்டத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.
  • அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்போர், தோட்டம் அமைக்க இடமில்லாதவர்கள் தங்களது வீட்டு கூரையில் தோட்டம் அமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “கூரை தோட்டம் மூலம் காய்கறிகள் சாகுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *