பீட்ரூட்டில் நல்ல வருமானம்!

மலைப்பிரதேச காய்கறிகளை பயிரிட்டு, அதிக மகசூல் பெற வழி கூறும், புதுவை வேளாண் துறையின் வேளாண் அதிகாரி தமிழ்செல்வன் கூறுகிறார் :

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

 

 

 

 

 

 

 

 

 

  • புதுவை விவசாயிகள் பெரும்பாலும் நெல், கரும்பு, மணிலா, காராமணியை அதிகளவில் பயிரிடுவர். குறிப்பாக, குளிர் காலங்களில் காராமணி மற்றும் சிறுதானியப் பயிர்களைப் பயிரிடுவது வழக்கம். அதன் மூலம் சிறிய முதலீட்டில் ஓரளவு லாபத்தை விவசாயிகள் ஈட்டி வந்தனர்.
  • இச்சூழலில், மாற்றுப் பயிர் மூலம் வருவாய் பெற, புதுவை வேளாண் துறை – ஆத்மா திட்டத்தின் கீழ், மண்ணாடிப்பட்டு, சோம்பட்டு, வம்புப்பட்டு கிராம விவசாயிகளுக்கு, குளிர்ப் பிரதேசங்களில் வளரக் கூடிய, பீட்ரூட், காலிபிளவர், பிரெஞ்ச் பீன்ஸ் பயிர்களை சாகுபடி செய்ய பயிற்சி அளித்தோம்.
  • சமவெளியிலும் இதை சாகுபடி செய்யலாம் என்பதற்காக, வேளாண் சுற்றுலாவிற்கும் அவர்களை அழைத்துச் சென்றோம்.பயிற்சிக்குப் பின், மாதிரிப் பயிராகப் பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் மானியம் வழங்கப்படும் என அறிவித்தோம்.
  • முற்றிலும் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி, விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய, பயோ உரங்களை மானியத்தில் வழங்கினோம்.விவசாயிகளுக்குத் தேவையான காலிபிளவர், பீட்ரூட், பிரெஞ்ச் பீன்ஸ் விதைகளை, பெங்களூரு மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து பெற்று, 100 சதவீத மானியத்தில் வழங்கினோம். அதில் காலிபிளவர் விதைகளை மட்டும், 25 நாள் நாற்றுகளாக உருவாக்கிக் கொடுத்தோம்.
  • கடந்த அக்டோபர் மாத இறுதியில், 5 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிர் செய்து, தற்போது நல்ல முறையில் அதிக மகசூல் பெற்று வருகின்றனர்.
  • இதையடுத்து, புதுவை மற்றும் தமிழகப் பகுதி விவசாயிகளும், அடுத்த ஆண்டில் பீட்ரூட், காலிபிளவர் மற்றும் பிரெஞ்ச் பீன்ஸ் பயிர்களைப் பயிர் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்தால், 1 லட்ச ரூபாயை வருமானமாகப் பெறலாம்.
  • பயிர் சாகுபடிக்கு முன், நிலத்தை நன்றாக உழுது, அடியுரம் இட்டு மீண்டும் உழுது கொள்ள வேண்டும். பின், வரிக்கு வரி, 2 அடி இடைவெளியிலும், செடிக்குச் செடி, 1 அடி இடைவெளியிலும், பீட்ரூட் விதைகளை விதைக்க வேண்டும்.
  • விதைத்த, 60 நாட்களில் பீட்ரூட் கிழங்கை அறுவடை செய்யத் துவங்கலாம். 75 நாட்களுக்கு மேல் அறுவடை செய்தால், கிழங்குகள் அதிக எடை இருக்கும்.
  • விதைத்த, 20வது நாளில் செழுமையாக வளர்ந்துள்ள செடிகளைத் தவிர்த்து, குத்துக்கு ஒரு செடி வீதம் மீதமுள்ள செடிகளை அகற்றி விட வேண்டும். மாதம் ஒருமுறை களை அகற்ற வேண்டும். 5,000 பீட்ரூட் செடிகளில் இருந்து, 1 டன்னுக்கு மேல் அறுவடை செய்யலாம்!

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *