அழியும் நிலையில் புங்கனூர் குட்டை மாடு..!

ஒரு காலத்தில் வீடுகளில் மாடுகள் இருப்பது கௌரவம் என்ற நிலை, எந்திரங்களின் வரவுக்குப் பிறகு மாறிவிட்டது. பெரும்பாலான தொழுவங்களில் டிராக்டர்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன.

இருந்தாலும், மண் மீதும், மாடுகள் மீதும் உள்ள பாரம்பர்யப் பிணைப்பை அறுத்தெரிய விரும்பாத பலர், இன்றைக்கும் மாடுகளை… நாட்டு மாடுகளைப் பராமரித்து வருகிறார்கள். நாம் மறந்துபோன, பாரம்பர்ய விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் நாட்டு மாடுகளின் பங்களிப்பு அபாரமானது. இவற்றின் சிறப்பே, குறைந்த தீவனத்தை எடுத்துக் கொண்டு உழவுக்கு உதவி செய்வதோடு, கணிசமான அளவில் பாலும் கொடுப்பதுதான். கலப்பின மாடுகளின் பாலைவிட நாட்டு மாடுகளின் பாலுக்கு தனிச்சுவை உண்டு. அதிலிருந்து கிடைக்கும் தயிர், மோர், நெய்க்குக்கூட தனிச்சுவை இருப்பதை மறுக்க முடியாது!

காங்கேயம், உம்பளாச்சேரி, புலிகுளம், மணப்பாறை, பர்கூர்… என தமிழ்நாட்டுக்கென பாரம்பர்ய ரகங்கள் இருப்பதுபோல… ஆந்திராவுக்கான சிறப்பு, புங்கனூர், ஓங்கோல் இன மாடுகள். அதிலும் ‘புங்கனூர் குட்டை’ என்ற ரகம் இந்திய நாட்டினங்களில் அருகி வரும் இனமாகக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழக-ஆந்திர மாநிலங்களின் எல்லையோரத்தில் இருக்கும் சித்தூர் மாவட்டம், புங்கனூர் மாடுகளுக்குப் புகழ்பெற்ற பகுதி. புங்கனூர் மாடுகளைத் தேடி இம்மாவட்டத்தில் உள்ள குப்பம், சாந்திபுரா, வி.கோட்டா, புங்கனூர் ஆகிய பகுதிகளில் வலம் வந்தபோது, ராமமோகன் என்பவர், நாட்டினங்களை பராமரித்து வருவது பற்றிய தகவல் கிடைத்தது.

மதனப்பள்ளி-பெங்களூரு சாலையில் பதினோராவது கிலோ மீட்டரில் ‘செக் போஸ்ட்’ அருகே ‘சுரபி பண்ணை’ என்ற பெயரில் மாட்டுப் பண்ணை நடத்திக் கொண்டிருக்கிறார் இந்த ராமமோகன். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், வரவேற்று பண்ணைக்குள்ளே அழைத்துச் சென்றார். அங்கே… தார்பார்க்கர், சிந்தி, காங்கிரேஜ், தியோனி இன மாடுகளும், முர்ரா எருமைகளும் அசைபோட்டுக் கொண்டிருந்தன.

இந்திய இனங்கள்ல 32 வகைகள் இருக்கு. அதுல நாலு ரகங்கள், குட்டை ரகத்தைச் சேர்ந்தவை. கேரளாவுல இருக்கிற வெச்சூர், மலநாடு கிட்டா, காசர்கோட் குள்ளன் கிட்டா மாடுகள் மாதிரியே… இந்த புங்கனூர் இன மாடுகளும் குள்ளமானவை. மூணு, நாலடி அடி உயரம்தான் இருக்கும். இந்த ரகத்தை, சித்தூர் மாவட்டத்துல இருக்கிற புங்கனூர் ஜமீன்தார், அவரோட பண்ணையில வெச்சு பராமரிச்சு பிரபலபடுத்தினதா சொல்றாங்க. அதனால இதுக்கு ‘புங்கனூர் குட்டை’னு பேர் வந்துச்சு” என்று பெயர்  காரணம் சொன்ன ராமமோகன், தொடர்ந்தார்.

குறைந்த கொழுப்பு… அதிக புரோட்டீன்!

”வெள்ளை, பழுப்பு, கருப்பு, சாம்பல்னு நாலு நிறத்துல இருக்குது. இதோட பால்ல கொழுப்பு குறைவு. இப்பெல்லாம் தினமும் இரண்டு, மூணுவேளை தவறாம டீ, காபி, பால் குடிக்கிறாங்க. உடம்புல கொழுப்புச்சத்து ஏறாம இருக்கணும்னு நினைக்கறவங்களுக்கு, இந்த மாட்டோட பால் ரொம்ப நல்லது. இதுல, புரோட்டீன் சத்து கூடுதலா இருக்கு. பால் ரொம்ப சுவையா இருக்கும். முப்பது வருஷங்களுக்கு முன்ன மாவட்டம் முழுவதும் பரவலா இருந்துச்சு. நாட்டு மாட்டோட அவசியம் நிறைய பேருக்குத் தெரியாததால, இந்த இனங்களோட எண்ணிக்கை படிப்படியா குறைஞ்சுடுச்சு. முன்ன இதோட காளைகளை உழவுக்குக்கூட பயன்படுத்தியிருக்காங்க. இப்போ, காளைகள் குறைஞ்சு போயிடுச்சு. பசுக்களைக் கூட, பாலுக்காகத்தான் வளர்க்கறாங்க. இன்னிக்கு ஆந்திரா முழுசும் தேடினாலே, நூறு மாடுகளுக்குள்ளதான் இருக்கும்.

ஒரு நாளைக்கு ஆறு லிட்டர் பால்!

சாதாரணமா நாட்டு மாடுகளுக்குக் கொடுக்கிற பச்சைப்புல், சோளத்தட்டு, வைக்கோல், தவிடு கலந்த தண்ணி மட்டுமே தீவனமாகக் கொடுத்தா போதும். இந்தவகை மாடுகளுக்கு பாயுற பழக்கம் இல்லாததால, யாரும் பயமில்லாம பராமரிக்கலாம். ஒருவேளைக்கு ரெண்டு லிட்டர்ல இருந்து மூணு லிட்டர் வரைக்கும் பால் கிடைக்கும். ஒரு நாளைக்கு ஆறு லிட்டர். என்கிட்ட இருக்கிற மாடு, இப்போ சினையா இருக்குது. வறட்சி காலங்கள்லயும், இருக்கிற தீனியை வெச்சே சமாளிச்சுடும்” என்று பெருமையோடு சொன்ன ராமமோகன்,

”சித்தூர் மாவட்டம், பலமனேர் கால்நடை பண்ணையிலும், புங்கனூர் காளைகள், பசு மாடுகள் இருக்கு. அதற்கான செயற்கை கருவூட்டல் ஊசியும் அங்க கிடைக்குது. ஆனா, யாரும் நாட்டு மாடுகள வளக்கறதுக்கு ஆர்வம் காட்ட மாட்டேங்கறாங்க. எங்களை மாதிரி ஆர்வம் உள்ளவங்கள்லாம் குழுவா சேர்ந்து புங்கனூர் மாடுகள பரவலாக்கறதுக்கான முயற்சிகளைச் செஞ்சுட்டு இருக்கோம்” என்று சொன்னார்.

கலப்பினம் கூடாது!

நாட்டு ரகங்கள் பற்றி பேசிய சென்னை, கால்நடை மருத்துவக் கல்லூரியின் மரபியல் துறை பேராசிரியர் சிவச்செல்வம், ”இந்தியாவுல முப்பதுக்கும் மேற்பட்ட நாட்டு மாடு இனங்களும், நாப்பதுக்கும் மேற்பட்ட ஆட்டு இனங்களும் இருக்கு. அந்தந்தப் பகுதி கால நிலைக்கு ஏற்பத்தான் கால்நடைகளும், அதன் குணாதிசயங்களும் இருக்கும். ஆந்திராவுல இருக்கிற புங்கனூர் குட்டை என்ற ரகமும் நாட்டு இனம்தான்.

அதேமாதிரி, தமிழ்நாட்டோட நாட்டு இனங்களான காங்கேயம், புலிகுளம், உம்பளாச்சேரி, பர்கூர் இன மாடுகளும் நம்முடைய சீதோஷ்ண நிலையில் இருப்பவை. தற்போது, நாட்டு இனங்களுக்கான கருவூட்டல் ஊசியும் அந்தந்தப் பகுதி அரசு கால்நடைப் பண்ணைகளில் கிடைக்கிறது.

உதாரணமாக, காங்கேயம் இனத்தின் கருவை அதே இனப் பசுவுக்கு செலுத்தினால்தான், ஒரிஜனல் இனமாகக் கிடைக்கும். இல்லாவிட்டால், குணாதிசயம் மாறி, கலப்பினமாகிவிடும். அந்தந்தப் பகுதி கால நிலைக்குப் பொருந்திப் போகிற இனங்களை வளர்த்து… நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதும், சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் விஷயமே” என்றார்.

நன்றி: ஆனந்த விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “அழியும் நிலையில் புங்கனூர் குட்டை மாடு..!

 1. S. P. Soundara Pandian says:

  Sir,
  What is the cost of Ponganur cow?
  Is it worth for dairy? If we convert this milk as ghee, How much milk is needed to get 1 kg ghee?

  This details I need because in future I plan to start a dairy farm.

 2. Senthilkumar says:

  இவர் உடைய தொடர்பு எண் அனுப்பு வரும் நன்றி என்னுடைய அலைபேசி எண் 9865777789

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *