கோடை வெப்ப தாக்கத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது எப்படி

“கோடை வெப்பத்தின் தாக்கத்தால், கோழிகள் மற்றும் கால்நடைகள் “வெப்ப அயர்வு’ நோயால் உயிரிழக்க அதிக வாய்ப்புள்ளது,” என, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் செல்வராஜ் கூறினார். அவர் கூறியதாவது:

 • வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோழிகள் மற்றும் கால்நடைகள் “வெப்ப அயர்வு’ நோயால் உயிரிழக்கக்கூடிய அபாயம் உள்ளது.
 • உடலின் வெப்பத்தை வெளியேற்ற, மனிதர்களுக்கு வியர்வை சுரப்பி உள்ளது; கோழிகளுக்கு வியர்வை சுரப்பி இல்லை;
 • வாயை திறந்து, உடல் வெப்பத்தை சிறிதளவே வெளியேற்ற முடியும்.
 • வெயில் நேரத்தில் கோழிகள் அதிக தீவனம் சாப்பிடும்போது, அதை ஜீரணிக்க, அதிக வெப்ப ஆற்றல் உடலுக்குள் ஏற்படுகிறது.
 • அதை தவிர்க்க, காலை 7.00 மணிக்குள், அளவான தீவனம் கொடுக்க வேண்டும்; மாலை 4.00 மணிக்கு பிறகே, கோழிகளுக்கு தீவனம் கொடுக்க வேண்டும். பகல் நேரத்தில், தீவனம் கொடுக்கக்கூடாது;
 • வைட்டமின் “சி’ கலந்த குளிர்ந்த நீரை மட்டுமே பருக கொடுக்க வேண்டும்.
 • தீவன தொட்டியை உயர்த்திக்கட்ட வேண்டும். தண்ணீரில் நனைத்த சாக்குகளை, கோழி பண்ணையின் இரு பக்கவாட்டு பகுதிகளிலும் கட்டி தொங்கவிட்டால், பண்ணைக்குள் குளிர்ந்த காற்று வீசும்; வெப்பமும் கணிசமாக குறையும்.
 • கால்நடைகளுக்கு வெப்ப அயர்வை தடுக்கும், “எலட்ரோ கேர்’ சத்துபொருளை, நீரில் கலந்து வைக்க வேண்டும்.
 • மாட்டுக்கொட்டகைகளை பனை மற்றும் தென்னை ஓலைகளால் வேய வேண்டும்.
 • பக்கவாட்டு பகுதிகளில் நனைந்த சாக்குகளை கட்டி, குளிர்ந்த காற்று கால்நடைகளுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்.
 • காலை 10.00 மணிக்கு முன்னதாகவும், மாலை 4.00 மணிக்கு பின்பும், மேய்ச்சல் நிலங்களுக்கு கால்நடைகளை ஓட்டிச்செல்ல வேண்டும். பகல் வெயிலில் மாடுகளை கட்டி வைக்கக் கூடாது.
 • இந்த எச்சரிக்கை முறைகளை கையாண்டால், கால்நடைகளை வெப்ப அயர்வு நோய் தாக்காமல், தடுக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

நன்றி:தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *