கோமாரி நோயை மூலிகை மருத்துவ முறையில் கட்டுப்படுத்த யோசனை

கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மரபு சார்ந்த மூலிகை மருத்துவ முறை மூலம் கட்டுப்படுத்தலாம் என, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ராஜேந்திரன் யோசனை தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை பகுதிகளில் கோமாரி நோயால் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை மாவட்டத்தில் 73 கால்நடைகள் இந்த நோயால் உயிரிழந்ததாகவும், 400-க்கும் மேற்பட்ட கால்நடைகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கால்நடைப் பராமரிப்புத் துறை தெரிவித்தது. இதைக் கட்டுப்படுத்த ஊத்தங்கரை பகுதியில் 20 மருத்துவக் குழு அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த நிலையில், கோமாரி நோயைக் கட்டுப்படுத்த மரபு சார்ந்த மூலிகை மருத்துவ முறைகளைப் பின்பற்றலாம் என, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 • வெந்தயம், சீரகம் தலா 100 கிராம் எடுத்து, 100 மில்லி நீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி நன்றாக அரைக்க வேண்டும்.
 • இவற்றுடன் பூண்டு 4 பல், மஞ்சள் தூள் 10 கிராம், நாட்டுச் சர்க்கரை 100 கிராம் ஆகியவற்றைச் சேர்த்து குழம்பாக அரைக்க வேண்டும்.
 • இவற்றுடன் துருவியத் தேங்காயைச் சேர்த்து உருண்டையாக்க வேண்டும்.
 • இந்த மூலிகை மருந்து உருண்டையை கால்நடைகள் சாப்பிடும் வகையில், அதன் வாயை அகலமாக விரித்து, கடவாய் பல்லில் தடவ வேண்டும்.
 • இந்த உருண்டை உமிழ் நீருடன் சேர்ந்து ரத்த ஓட்டத்தில் கலக்கும்.
 • இதேபோல, 3 மணி நேரத்துக்கு ஒரு முறை புதியதாகத் தயார் செய்த மருத்தை ஒரு நாளைக்கு 3 அல்லது 5 முறை கொடுக்க வேண்டும்.
 • தொடர்ந்து, 3 முதல் 5 நாள்கள் வரை இந்த மூலிகை மருந்தை கொடுப்பதன் மூலம் கால்நடைகளை கோமாரி நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம்.

கால் புண்:

 • காலில் புண் இருந்தால், குப்பைமேனி, காட்டுத் துளசி அல்லது திருநீற்றுப் பச்சை செடிகளில் ஏதேனும் ஒரு செடியின் 100 கிராம் இலையுடன், பூண்டு 10 பல்கள், 100 கிராம் மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்றாக இடித்து 250 மிலி. நல்லெண்ணெய் அல்லது வேப்பெண்ணெயில் காய்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடையின் கால் குளம்புகளில் தடவ வேண்டும்.
 • மருத்தைத் தடவுவதற்கு முன்பு, கால்நடையின் கால் குளம்புகளை உப்பு, மஞ்சள் தூள் கலந்த நீரில் நன்றாகக் கழுவி ஈரத்தை துடைக்க வேண்டும்.
 • கால் புண்ணில் புழுக்கள் இருந்தால் முதல் நாளில் கற்பூரம் சேர்த்து புண்ணில் தடவ வேண்டும்.
 • இவ்வாறு செய்வதன் மூலம் புழுக்கள் உருவாகுவது கட்டுப்படுத்தப்படும்.
 • இந்த மூலிகை மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் கோமாரி நோய் கட்டுப்படுத்தப்பட்டு நல்ல பயனைத் தந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கோமாரி நோயை மூலிகை மருத்துவ முறையில் கட்டுப்படுத்த யோசனை

 1. R.meganathan says:

  இந்த குறிப்பு நாங்கள் வளர்க்கும் எங்கள் கால்நடைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *