செம்மறி ஆடுகளைத் தாக்கும் நீல நாக்கு நோய்

செம்மறி ஆடுகளைத் தாக்கக் கூடிய நோய்களில் மிகக் கொடியது நீல நாக்கு நோயாகும். இந்த நோய் தாக்குவதற்கான சூழல், நோயிலிருந்து ஆடுகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பல்வேறு தகவல்களை அளித்துள்ளது.

இதுகுறித்து கல்லூரியின் கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறை பேராசிரியர் த.ஆனந்த பிரகாஷ் சிங் கூறியது:

  • நீல நாக்கு நோயானது ஆர்பி வைரஸ் குழுவைச் சேர்ந்த ஒரு வகை நச்சுயிரியின் பாதிப்பால் செம்மறி ஆடுகளிலும், மாடுகளிலும் ஏற்படக் கூடியதாகும்.
  • அனைத்து இன செம்மறி ஆடுகளிலும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
  • வெள்ளாடுகளை இந்த நோய் அதிகம் பாதிப்பதில்லை.
  • இது க்யூளிகாய்ட்ஸ் என்ற கொசு போன்ற பூச்சிகள் கடிக்கும் போது நோயுள்ள ஆட்டிலிருந்து மற்ற ஆடுகளுக்கு பரவுகிறது.
  • மழைக் காலங்களில் குறிப்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த நோய் தாக்குதல் அதிகளவில் காணப்படும்.
  • பருவ மழைக்குப் பிந்தைய காலங்களிலும், கோடை காலத்தின் இறுதியிலும் இந்த நோய் பரவ வாய்ப்பு அதிகம்.
  • மழைக் காலத்துக்குப் பிறகும் நச்சுயிரி மாடுகளின் உடலில் இருப்பதால் நோய் கிருமி மாடுகளிலிருந்து ஆடுகளுக்குப் பரவக்கூடும்.
  • நோய்த் தாக்கிய ஆடுகளுக்கு கடுமையான காய்ச்சல் (40 டிகிரி செல்சியஸ்), உதடு, மூக்கு மற்றும் வாய்ப் பகுதியில் சிவந்த புண், உதடு, மூக்கு, காது, நாக்கு, தாடை மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் வீக்கம் ஏற்படக்கூடும்.
  • வாயிலிருந்து அதிகமாக எச்சில் வடியக்கூடும்.
  • மூக்கிலிருந்து வடியும் நீர் ஓரிரு நாள்களுக்குப் பிறகு ரத்தத்துடன் கூடிய சளியாக வரும்.
  • பிறகு இந்தச் சளி உலர்ந்து நாசித் துவாரங்களை அடைப்பதால் மூக்கில் நுரையுடன், மூச்சுத்திணறல் காணப்படும்.
  • சினை ஆடுகளில் கருச் சிதைவு ஏற்படும் அல்லது குறைபாடுடைய வலுவிழந்தக் குட்டிகளை ஈனும். இளம் வயது ஆடுகளில் இறப்பு விகிதம் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளில் 5 முதல் 30 சதம் இறப்பு இருக்கும்.
  • நீல நாக்கு நோய் நச்சுயிரி 24 வகைகள் உள்ளன. இதில், பல வகை நச்சுயிரிகள் ஒன்றிணைந்து ஆடுகளை பாதிப்பதால் அனைத்து வகை நச்சுயிரிகளுக்கும் எதிரான திறன் கொண்ட தடுப்பூசி உருவாக்குவது மிகவும் கடினமாகும்.
  • எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் இந்த நோயை மற்ற ஆடுகளுக்கு பராவாமல் தடுக்க முடியும்.
  • நோய் கண்ட ஆட்டைத் தனியாகப் பிரித்து பராமரிக்கவும், அரிசி, கம்பு, கேழ்வரகு கஞ்சி காய்ச்சி கொடுக்கவும் வேண்டும்.
  • வெயிலில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது.
  • இரவு நேரங்களில் ஆடுகள் அடைக்கும் இடத்தைச் சுற்றி நீர் தேங்கி நிற்காமல் பார்த்துக் கொள்ளவும், கிடைபோடுமிடத்தை தினசரி மாற்றி காற்றோட்டமாகவும், ஈரமில்லாமலும் இருக்கச் செய்யவும், க்யூளிகாய்ட்ஸ் கொசுக் கடியிலிருந்து பாதுகாக்க வேப்பம் பிண்ணாக்கு புகை போடவும், இரவில் ஆடுகளின் மேல் வேப்ப எண்ணெய் தடவி விடவும் வேண்டும்.
  • பல்களை உப்புநீர் (அல்லது) ஒரு லிட்டருக்கு ஒரு கிராம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரில் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை கழுவவும், புண்கள் மீது கிளிசரின் தடவவும் வேண்டும்.
  • நோய் பரவாமலிருக்க ஈ, கொசு போன்றவற்றை அழிக்கும் பூச்சிக் கொல்லி, ஒட்டுண்ணி நீக்கி மருந்துகளையும் அடிக்கலாம்.
  • இறந்த ஆடுகளைக் குழி தோண்டி, சுண்ணாம்புத் தூள் தூவி புதைத்துவிட வேண்டும்.
  • ஆடுகளுக்கு இந்த நோய் அறிகுறி காணப்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகுவது சிறந்தது என்றார் அவர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *