விருதுநகரைச் சேர்ந்த சங்கர் என்ற எம்.பி.ஏ பட்டதாரி, நாட்டு மாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள்களைவைத்து மதிப்புகூட்டப்பட்ட பொருள்களைத் தயாரித்து வருகிறார்.
மதிப்புகூட்டப்பட்ட பொருள்கள் ( ஆர்.எம்.முத்துராஜ் )
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் இயற்கை மற்றும் பாரம்பர்யத்தை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இயற்கை விவசாயம், நாட்டு மாடு, நாட்டு விதை, நாட்டுக்கோழி, நாட்டு ஆடு, நாட்டு நாய் உள்ளிட்ட நாட்டு இனங்களை மீட்டெடுக்க வேண்டும் என விரும்புகின்றனர். மேலும், மனதிருப்தியுடன் சொந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என நினைக்கின்றனர்.
அதே நேரத்தில், அந்தத் தொழில் அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் லாபகரமானதாகவும் இருக்க வேண்டும். இதை நினைவில்கொண்டு, விருதுநகரைச் சேர்ந்த சங்கர் என்ற எம்.பி.ஏ பட்டதாரி இளைஞர், நாட்டு மாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள்களைவைத்து மதிப்புகூட்டப்பட்ட பொருள்களைத் தயாரித்து வருகிறார்.
அவரிடம் பேசினோம்… “மாடு என்றாலே பாலுக்குத்தான் என்ற நிலை வந்துவிட்டது. இன்று பாலுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. எங்கள் வீட்டிலும் பல ஆண்டுகளாக மாடுகள் வளர்த்துவருகிறோம். எனவே, சிறுவயதிலிருந்தே எனக்குக் கால்நடை வளர்ப்பில் ஆர்வமிருந்தது. ஆரம்பத்தில் நாங்களும் பாலுக்காகத்தான் மாடு வளர்த்தோம். அதிக பால் வேண்டும் என்பதற்காக ஜெர்சி ரக மாடுகளையும் வளர்த்துவந்தோம்.
நான் எம்.பி.ஏ முடித்து தனியார் நிறுவனங்களில் 10 ஆண்டுகள் வேலைபார்த்தேன். ஆனால், அதில் முழு மனதிருப்தி ஏற்படவில்லை. எனவே, பணியிலிருந்து விலகி நாட்டு மாடுகளை வளர்க்க விரும்பினேன். நாட்டு மாடுகள் சம்பந்தமாக நிறைய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளைப் படித்தேன். பின்னர் அதை மட்டுமே வளர்க்கத் தொடங்கினேன். நாட்டு மாடுகளிலிருந்து கிடைக்கும் பஞ்சகவ்யாவைக் கொண்டு என்னென்ன மதிப்புகூட்டப்பட்ட பொருள்கள் தயார் செய்கிறார்கள், எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதை பல இடங்களுக்குச் சென்று பார்த்துவந்தேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு நாட்டு இனம் உண்டு. அது, அந்த மாநிலத்தின் அடையாளமாகவும் உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நாட்டு இனம் உண்டு. இவற்றை வளர்ப்பதால் அதிக பால் எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும் நாட்டு இனங்களைக் காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் தற்சார்புடன் இருக்க முடியும். குறைவான பால் மட்டுமே தரும் நாட்டு மாடுகளைக் கொண்டு எப்படி லாபகரமாகச் செயல்பட முடியும் என நினைத்தேன். இதற்காக நாக்பூரில் உள்ள பயிற்சி மையத்திலிருந்து பஞ்சகவ்யாவில் மதிப்புகூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி பெற்று வருகிறேன். கடந்த 6 ஆண்டுகளாக நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறோம்.
தற்போது கன்றுகளையும் சேர்த்து எங்களிடம் 20 நாட்டு மாடுகள் உள்ளன. வீட்டுத் தேவைக்காக மட்டும்தான் பால் கறப்போம். பஞ்சகவ்யாவிலிருந்து சோப், பற்பொடி, உடல் வலிக்கான தைலம், காதணி, பினாயில், மருந்துப்பொருளான அர்க் போன்றவற்றைத் தயாரித்து வருகிறோம். ஒவ்வொரு தயாரிப்பிலும் 80 சதவிகிதம் பஞ்சகவ்யா சேர்க்கிறோம். இயற்கை அங்காடிகள் மற்றும் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்துவருகிறோம்.
இன்னும் பல பொருள்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இவற்றைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கோ, நம் உடலுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது. கீழே எறிந்தாலும் மண்ணுக்கு உரமாகிவிடும். பஞ்சகவ்யாவில் மதிப்புகூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பது குறித்து பலருக்கும் பயிற்சியளித்து வருகிறோம். நாட்டு மாடுகள் வேண்டும் எனக் கேட்பவர்களுக்கு வாங்கியும் தருகிறோம்.
பொலிகாளை இருந்தால்தான் நிறைய நாட்டு இனக் கன்றுகளை உருவாக்க முடியும். ஒரு பொலிகாளை என்பது நூற்றுக்கணக்கான நாட்டு மாடுகள் இருப்பதற்குச் சமம். எனவே, ஒரு பொலிகாளையை வளர்த்து வருகிறோம். தமிழக அரசால் சமீபத்தில் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள கால்நடை இனப்பெருக்கச் சட்டத்தால் பொலிகாளை வளர்ப்போர் அதைப் பராமரிக்க முடியாமல் காளைகளை விற்பனை செய்யும் சூழல் ஏற்படும். இதனால் மாடுகளில் எல்லாம் கலப்பு இனங்கள் உருவாகி, நாட்டு மாடுகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிடும்” என்றார்.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
MAY I GET HIS CONTACT NO PLEASE