பசுந்தீவன உற்பத்தித் திட்டம்

பசுந்தீவன உற்பத்தித் திட்டத்தில் பயன்பெறத் தகுதியுடைய விவசாயிகள் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனத்தை பெருக்கும் வகையில் மாநில பசுந்தீவன உற்பத்தித் திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு நிகழாண்டில் (2014-15) செயல்படுத்த உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பல்லாண்டு தீவனப் பயிர்களான கோ-3, கோ-4 ரகம் பயிரிடும் விவசாயிகளுக்கு கால் ஏக்கருக்கு நூறு சதவீத மானியமாக ரூ.2000ம் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் அதிகபட்சம் ஒரு ஏக்கருக்கு மானியம் பெறலாம்.

குறைந்தபட்சம் 2 கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியும். இந்த மாநில பசுந்தீவன உற்பத்தித் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 400 ஏக்கரில் தீவனப் பயிர் சாகுபடி செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பாசன வசதியில்லாத விவசாயிகளுக்கு மானாவாரி தீவனப்பயிர்களான சோளம், தட்டைப் பயிர் விதைகள் மானியமாக வழங்கப்பட உள்ளது. கால் ஏக்கருக்கு 8 கிலோ சோளம், ஒரு கிலோ தட்டைப்பயிர் வழங்கப்படும். அதிகபட்சம் ஓர் ஏக்கர் வரை விவசாயிகளின் தேவைக்கேற்ப விதைகளை மானியமாக பெறலாம்.

மேலும், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில் 200 விவசாயிகளுக்கு மழைத்தூவான் கருவி 75 சத மானியத்தில் வழங்கப்படும். கால்நடைகளுக்கு பசுந்தீவன தேவையை நிறைவு செய்யும் வகையில் அகத்தி விதைகள் ஏக்கருக்கு 4 கிலோ வீதம் 250 ஏக்கருக்கு வழங்கப்பட உள்ளது.

அலோசா பாசி உற்பத்தி செய்வதற்காக 350 அலகுகள் அமைக்க அலகு ஒன்றுக்கு ரூ.1600 மானியமாக வழங்கப்படும்.

ஏற்கெனவே கடந்த ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்கள் மீண்டும் பயன்பெற இயலாது. தவிர, ஒருவர் ஒரு திட்டத்தில் மட்டுமே பயன்பெற முடியும்.

விருப்பமுள்ள விவசாயிகள் அருகே உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பசுந்தீவன உற்பத்தித் திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *