பணம் கொடுக்கும் பசு மாடு செல்வம்!

சில்லறைச் செலவுக்குக் கோழி முட்டைகள் கை கொடுக்கும். விருந்தினர் உபசரிப்புக்குக் கோழி விற்ற காசு உதவும். குழந்தைகளின் கல்விச் செலவைப் பால் மாடு பார்த்துக் கொள்ளும். திருமணச் செலவு என்றால், பசுக்களை விற்கலாம். அதனால்தான், ஏழை விவசாயிகளின் ஏ.டி.எம். என்று கால்நடைகளைக் கூறுகிறார்கள்.

பசு ஆண்டுதோறும் ஈன்றால்தான் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதற்கு மாட்டை நன்றாகப் பராமரிக்க வேண்டியது அவசியம் என்பது கால்நடை மருத்துவர்களின் அறிவுரை. அந்த ஆலோசனையுடன் அவர்கள் உதாரணமாகச் சுட்டிக்காட்டுவது அலங்காநல்லூர் விவசாயி ர.பார்த்திபனைத்தான். இவரது பசு ஆண்டுக்கு ஒன்று வீதம் 13 கன்றுகளை ஈன்றிருக்கிறது.

மாடுதான் செல்வம்

“வங்கிக்கடனில் நான் வாங்கிய பசு ஒன்று, 1997-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ரெட்டைக் கன்றுகளை ஈன்றது. அந்தக் கன்றுகளில் ஒன்றுதான் இந்தப் பசு. 3 வயதில் முதல் கன்றை ஈன்ற இந்தப் பசு, 2004, 2005-ஆண்டுகளைத் தவிரத் தொடர்ந்து ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டிக் கன்றுகளை ஈன்று வருகிறது. கடைசியாக இந்த மாதம் 13-வது கன்றை ஈன்றிருக்கிறது.

Courtesy: Hindu
Courtesy: Hindu

அது மட்டுமல்ல, தினமும் காலையில் 8 லிட்டர், மாலையில் 7 லிட்டர் பால் தருகிறது. இந்தப் பசு வந்த பிறகுதான் எங்கள் வீட்டில் கால்நடை செல்வம் பெருகியது. எனவே, இதற்கு எங்கள் குலத் தெய்வம் பெத்தனாட்சியின் நினைவாகப் பெத்தா என்று பெயரிட்டுள்ளோம். கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி, 3 மாதத்துக்கு ஒருமுறை குடல்புழு மருந்து கொடுப்பதுடன், அவ்வப்போதுத் தடுப்பூசி போடுகிறேன்.

பால் கொடுக்கும் காலங்களில் தினமும் 100 மில்லி வீதம், 10 நாட்களுக்கு வாய்வழி கால்சியம் கொடுப்பதோடு, 30 கிராம் மினரல் மிக்ஸ்சரும் தருகிறேன். எவ்வளவு கஷ்டப்பட்டாவது தினமும் 10 கிலோ பசுந்தீவனத்தைக் கொடுத்துவிடுவேன். இப்போது என் வீட்டில் பெத்தா, அவளது மகள் பெரிய கருப்பு, பேத்தி சின்ன கருப்பு, கொள்ளு பேத்தி குட்டி பெத்தா என்று 4 தலைமுறை மாடுகள் இருக்கின்றன.

விருது கொடுக்கலாமே!

பெத்தாவுடன் சேர்த்து வீட்டில் 7 பால் மாடுகள் இருக்கின்றன. சுழற்சி முறையில் குறைந்தது 5 மாடுகளிலாவது பால் இருக்கும். பண்ணைகளுக்குப் பால் ஊற்றுவதில்லை. லிட்டர் 36 ரூபாய்க்கு எனச் சில்லறைக்கு விற்கிறேன். சொட்டுத் தண்ணீர்கூடச் சேர்க்க மாட்டேன் என்பதால், தினசரிக் காலையிலும் மாலையிலும் 30 பேர் வீடு தேடி வந்து பால் வாங்குகிறார்கள்.

மாதம் 50 ஆயிரத்துக்குக் குறையாமல் வருமானம் வரும். எனவே, எவ்வளவு பண நெருக்கடி வந்தாலும் பசுக்களைப் பராமரிக்கத் தவறுவதில்லை. என்னுடைய இளைய மகனும் கால்நடை மருத்துவம் படிப்பதில் ஆர்வமாக இருக்கிறான்” என்றவர், ஒரு வேண்டுகோளையும் முன்வைக்கிறார்.

“ஒரு ஏக்கர் நிலத்தில் 3 மாதம் கடும் உழைப்பைக் கொடுத்து அதிக விளைச்சல் எடுக்கிற விவசாயிகளுக்கு அரசு விருது வழங்குகிறது. 18 ஆண்டுகள் ஒரு பசுவைச் சிறப்பாக வளர்த்துள்ள என்னைப் போன்ற விவசாயிகளுக்கும், அது போன்ற விருது கொடுத்தால் கால்நடை வளர்ப்போருக்கு ஊக்கம் தருவதாக இருக்கும்” என்கிறார்.

கைவிடாத பசு

அலங்காநல்லூர் அரசு கால்நடை மருத்துவர் ரவிச்சந்திரனிடம் பார்த்திபனின் மாடுகளைப் பற்றி கேட்டபோது, “விவசாயி பார்த்திபன் வீட்டில்தான் நானும் பால் வாங்குகிறேன். பசுவின் கர்ப்பக் காலம் 9 மாதமும் 1 வாரமும். கன்று ஈன்ற 45 நாட்களுக்குப் பிறகு மாடு மீண்டும் இனப்பெருக்கத்துக்குத் தயாராகும். நன்றாகப் பராமரிக்கப்படும் மாடுகள் மட்டுமே ஆண்டுதோறும் கன்றுகள் ஈனும்.

பொதுவாகப் பசுக்கள் 10 கன்றுகளுக்கு மேல் ஈனாது என்பதால், ஆறேழு கன்றுகள் ஈன்றதுமே மாடுகளை விற்றுவிடுவார்கள். ஆனால், பார்த்திபன் பசுவைக் கைவிட வில்லை. பசுவும் அவரைக் கைவிடவில்லை. பசுவின் ஆயுட்காலம் சராசரியாக 16 ஆண்டுகள். ஆனால், 18 வயதிலும் இந்தப் பசு தினமும் 15 லிட்டர் பால் கொடுப்பது, பராமரிப்புக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார்.

விவசாயி ர.பார்த்திபன் தொடர்புக்கு: 09865870439

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *