மரபு சாரா தீவனங்கள்

கால்நடைகள் பெரும்பாலும் வைக்கோல், தட்டை போன்ற விவசாய உபபொருட்களை தீவனத்திற்காக நம்பியுள்ளன. வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தின்போது தீவன பொருட்கள் கிடைப்பது அரிதாகின்றது.

இச்சூழ்நிலையில் மரபுசாரா தீவனப் பொருட்களைத் தீவனமாக பயன்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும்.

  • உலர்ந்த புற்கள், காய்ந்த மரக்கிளைகள் போன்ற தீவனங்களின் மீது தண்ணீர் அல்லது உப்புக்கரைசல் (2 சதம்) தெளித்தபிறகு தீவனமாக கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
  • வெல்லம் அல்லது சர்க்கரைப் பாகு (மொலாசஸ்) போன்ற இனிப்பான பொருட்களை தீவனங்களின்மீது தெளித்தபின் கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
  • மரபுசாரா தீவனங்களான கரும்புத் தோகை, கரும்பு சக்கைத்தூள், யூரியா – சர்க்கரைப்பாகு – தாது உப்பு அச்சுக்கட்டி, ஈஸ்ட் கழிவுப்பொருள், மரவள்ளி இலை, மரவள்ளி தோல் / பட்டை, மரவள்ளி திப்பி, புளியங் கொட்டைத்தூள், மாம்பழ தோல், மாங்கொட்டைத்தூள், வேப்பம் புண்ணாக்கு, கருவேல் காய், பருத்திக் கொட்டை உமி, பருப்பு பொட்டு/ குருணை, மக்காச்சோளத்தவிடு, சோளப்பூட்டை, முந்திரிப்பருப்பு கழிவு, காகித கழிவு, கோழி எச்சம், நீர் பூங்கோரை, வாழைஇலை, வாழை மர கிழங்கு மற்றும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மர, புல் வகைகளான வேப்ப இலை, புளியரை இலை, சூபா புல் இலை, மூங்கில் இலை, கிளைரிசிடியா இலை, வாகைமர இலை மற்ற மர இலைகள், புல் வகைகளில் கொழுக்கட்டைப்புல், முயல்மசால், தட்டைப்பயறு போன்ற வேர்முடிச்சு கொண்ட தீவனப் பயிர்களுடன் 3:1 விகிதத்தில் சேர்த்து கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம்.
  • மரபு சாரா தீவனங்களை கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் தீவனப் பற்றாக்குறையை குறைக்கலாம். தீவனத்திற்கு ஆகும் செலவினை இவற்றின் மூலம் குறைக்கலாம்.
  • கரும்புத் தோகையை விவசாயிகள் பொதுவாக வயல்வெளிகளில் வைத்து எரித்துவிடுகின்றனர். இதில் 2 சதம் செரிமான புரதமும் 50 சதம் மொத்த செரிமான சத்துக்களும் அடங்கியுள்ளன.
  • கால்நடைகளுக்கு மிதமான தீவனமாக அளிக்கும்போது புரதம், சுண்ணாம்பு சத்துக்களை சேர்த்து அளிக்க வேண்டும்.
  • தேவைக்கு போக மீதியுள்ள கரும்புத் தோகையை ஊறுகாய்ப்புல்லாக மாற்றி சேமித்து வைக்கலாம். கொடுக்கும் அளவு – மாடுகள்-15-20 கிலோ, ஆடுகள்-1-2 கிலோ.
  • கரும்புச்சக்கைத்தூளில் புரதம் குறைவாகவும் நார்ப்பொருட்கள் அதிகமாகவும் உள்ளன. 4 சதம் யூரியா கரைசலில் 30 சதம் ஈரப்பதத்தில் 3 வாரங்கள் காற்று புகா வண்ணம் வைத்திருந்து பிறகு கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம்.
  • மேலும் சர்க்கரைப்பாகு, யூரியா, உப்பு, தாது உப்பு கலவை ஆகியவைகளைச் சேர்த்து தீவன கட்டிகள் தயாரிக்கவும் கரும்புச் சக்கைத் தூளைப் பயன்படுத்தலாம்.
  • சர்க்கரைப்பாகு, யூரியா, தாது உப்பு, தவிடு, சுண்ணாம்புத்தூள் ஆகியவற்றைக் கொண்டு தீவனக் கட்டிகள் தயாரிக்கலாம். சர்க்கரைப் பாகுடன் தவிடு (20:80) சேர்த்து இனிப்பு தவிடு தயாரித்து மாடுகள், ஆடுகளுக்கு அளிக்கலாம்.
  • தோல் நீக்கிய புளியங்கொட்டைத் தூளில் 12 சதம் செரிமான புரதமும், 65 சதம் மொத்த செரிமான சத்துக்களும் உள்ளன. இதனை நாள் ஒன்றுக்கு 1.5 கிலோ வீதம் கால்நடைகளுக்கு அளிக்கலாம் அல்லது கலப்பு தீவனத்தில் 30 சதவீதம் வரை சேர்க்கலாம்.
  • மாம்பழத்தோலில் சர்க்கரை, நார்ச்சத்து அதிகம் . ஈரப்பதம் அதிகம் இருப்பதால் மரவள்ளி திப்பி அல்லது தவிட்டுடன் 40:60 என்ற விகிதத்தில் கலந்து வெயிலில் உலரவைக்கலாம். அல்லது ஊறுகாய்ப்புல் தயாரிக்கலாம்.
  • கருவேல் காய் – இதில் 5 சதம் செரிமான புரதம், 60 சதம் மொத்த செரிமான சத்துக்கள் உள்ளன. ஆடுகள் இதனை விரும்பி உண்ணும். இதை கலப்பு தீவனத்தில் 30 சதம் வரை சேர்க்கலாம்.
  • காகித கழிவு செல்லுலோஸ் அதிகம் (70 சதம்). 6 கிலோ மசித்த காகித கழிவுடன் சர்க்கரைப்பாகு, 4 கிலோ உப்பு, 50 கிராம் தாது உப்புக்கலவை சேர்த்து கொடுத்தால் போதுமானது.
  • வேப்ப இலை கசப்பாக இருப்பதால் ஆரம்பத்தில் கால் நடைகள் விரும்பி உண்பதில்லை. எனினும் நாளடைவில் உண்ண பழகிக் கொள்ளும். இதில் புரதம், தாது உப்புக்கள் அதிகம். கொடுக்கும் அளவு – மாடுகளுக்கு 5-10 கி, ஆடுகள் -1-2 கி.

(தகவல்: ர.கவிதா, பி.வசந்தகுமார், சு.செந்தில்குமார், கால்நடை உழவியல் துறை, கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்-2)
டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *