லாபம் தரும் தீவனப்புல் சாகுபடி

 கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா கடைமடைப் பாசனப் பகுதியான சிதம்பரத்தை அடுத்த மணலூர் கிராமத்தில் மண்ணின் தன்மை மற்றும் இயற்கைச் சூழலை அடிப்படையாகக் கொண்டு அதிக லாபம் தரும் புல்வகை பயிர்கள் பன்னெடுங்காலமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

சிதம்பரம் அருகே மணலூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி எம்.எஸ்.ஜாகீர்உசேன் கடந்த பல ஆண்டுகளாக தீவனப்புல் சாகுபடி செய்து தினந்தோறும் வருமானம் பெற்று வருகிறார்.

விவசாயி ஜாகீர்உசேன் நல்ல நீரில் தீவனப்புல் சாகுபடியை தனது வயலில் முதலில் சிறிய அளவில் தொடங்கினார். தற்போது 10 ஏக்கர் பரப்பளவில் புல் பண்ணையை விரிவாக்கம் செய்து சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்களின் கால்நடைகளுக்கு புல் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்து லாபம் பெற்று வருகிறார்.

இது குறித்து விவசாயி ஜாகீர்உசேன் தெரிவித்தது:

  • எனது நிலத்தை முதலில் நன்றாக உழவு செய்தேன்.பின்னர் 10 டன் நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் டிஏபி உரம் 2 மூட்டை ஆகியவற்றைநேரடியாக போட்டு, ஒரு ஏக்கர் நிலத்துக்கு விதை கட்டிங் வாங்கி ஒரு அடி இடைவெளியில் நடவு செய்தேன்.
  • பின்னர் 2 அல்லது 3 நாள்களுக்கு ஒரு முறை காயவிட்டு, வெப்பத்தின் அளவுக்கேற்ப நீர்ப் பாசனம் செய்தேன்.
  •  பின்னர் ஒரு மாதம் கழித்து தீவனப்புல் நன்றாக வளர்ந்து வரும் போது ஏக்கருக்கு 50 கிலோ அளவில் யூரியாவை இரண்டாகப் பிரித்து தீவனப்புல் வெட்டுவதற்கு முன்பாக ஒரு முறையும், வெட்டியதற்கு பின்பு ஒருமுறை உரமிடும் முறையை பின்பற்றி வருகிறேன்.
  •  பூச்சித் தாக்குதல் காணப்பட்டால், குறிப்பாக புகையான் தாக்குதலினால் ஏற்படும் உற்பத்தி இழப்புகளை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் அளவில் எண்ணெய் கரைசலை மண்ணுடன் கலந்து ஒரு ஏக்கர் நிலத்தில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.இதன் வாயிலாக வேர்ப்பூச்சி தாக்குதலையும் எளிதில் கட்டுப்படுத்த முடியும்.
  • தற்போது நாள் ஒன்றுக்கு 500 முதல் 600 கட்டுகள் வரை எனக்கு தீவனப்புல் மகசூல் கிடைக்கிறது.
  • தினந்தோறும் மாட்டு வண்டிகள் வாயிலாக சிதம்பரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இந்த புல் கட்டுகளை விற்பனை செய்து வருகிறேன். ஒரு கட்டு ரூ.5 என்ற விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து லாபம் பெற்று வருகிறேன்.
  •  இந்த தீவனப்புல் சாகுபடி 2 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வருமானத்தைத் தருகிறது. பனிப்பொழிவு உள்ள காலங்களில் புகையான் தாக்குதல் அதிகம் காணப்படும். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தீவனப்புல்லை அழித்து விடுவேன்.
  •  பின்னர் இரண்டு மாத காலத்துக்கு பின் மீண்டும் தீவனப்புல் மறுதாம்புப் பயிராக மீண்டும் துளிர விட்டு சாகுபடி மற்றும் அறுவடை பணிகளை தொடங்கலாம்.
  •  தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் உலக வங்கி பங்களிப்புடன் செயல்பட்டு வரும் தேசிய வேளாண் புதுமைத் திட்டத்தின் கீழ் எங்கள் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு விரிவாக்க ஆலோசனைகளை வழங்கி வரும் உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் வழிகாட்டுதலுடன் நானும், 50 விவசாயிகளும் தொழில்நுட்ப பயிற்சியில் பங்கேற்றோம்.
  •  காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறைந்த செலவில் தினந்தோறும் அதிக லாபம் தரும் தீவனப்புல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் நேரடி அனுபவம் பெற எனது பண்ணைக்கு வருகை புரிந்து தொழில்நுட்பங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
  •  விதை கட்டிங் தேவைப்படுபவர்கள் முன்கூட்டியே தெரிவித்தால் உற்பத்தி செய்து தர தயாராக உள்ளேன் என முன்னோடி விவசாயி எம்.எஸ்.ஜாகீர்உசேன் தெரிவித்தார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “லாபம் தரும் தீவனப்புல் சாகுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *