அதிக லாபம் தரும் வெந்தய கீரை!

குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் வெந்தயக்கீரை சாகுபடி குறித்து விளக்கும், புதுவையில் செயல்பட்டு வரும், சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அபிவிருத்தி மையத்தின் இயக்குனர் கணேஷ் கூறுகிறார்:

 • நிலத்தை நன்றாக உழுது, தொழு உரமிட்டு, மீண்டும் ஒருமுறை உழுது கொள்ள வேண்டும்.
 • பின், சீரான இடைவெளியில் மேட்டுப் பாத்தி அமைத்து, அதன்மீது விதைகளை விதைக்க வேண்டும்.
 • விதைப்பதற்கு முன் வெந்தய விதைகளை, அசொஸ்பைரில்லம் மற்றும் ட்ரைகோடர்மாவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 • ஏக்கருக்கு, 4 முதல், 5 கிலோ வெந்தய விதைகள் தேவைப்படும். வடிகால் வசதியுடைய கரிசல் அல்லது அங்ககச்சத்து நிறைந்த, மணற்பாங்கான நிலத்தில் வெந்தயம் பயிரிடலாம்.
 • அக்., முதல், டிச., மாதங்களில் வெந்தய விதைகளை பயிரிடலாம். மானாவாரியாகவும், வெந்தயத்தை பயிரிடலாம்.
 • 25 முதல், 28 டிகிரி வெப்பத்தில், இவை வளரக் கூடியவை.
 • விதைத்த, 10 முதல், 15 நாட்களுக்குள் வெந்தயச் செடிகள் முளைத்து விடும். 25 நாட்களில் வெந்தயச் செடியின் தழைகளை, கீரைகளாக அறுவடை செய்யலாம்.
 • 90 முதல் 100 நாட்களுக்குள் வெந்தய விதைகளை அறுவடை செய்யலாம்.
 • சாம்பல் நோய் தாக்குதல் தென்பட்டால், ஹெக்டருக்கு, 25 கிலோ சல்பர் மற்றும் கந்தகப் பொடியை பயன்படுத்தலாம்.
 • மூன்று நாட்களுக்கு ஒருமுறை, நீர் பாய்ச்ச வேண்டும்.
 • வெந்தயம் பயிரிடப்பட்டுள்ள நிலப்பகுதியை, ஈரப் பதத்துடன் இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக, தேங்காய் நாரை செடிகளின் இடையே இடலாம்.
 • வெந்தயச் செடிகளின் தழைகளை, கீரைகளாக விற்பனை செய்யலாம். ஏக்கருக்கு, 4 டன் கீரைகளை அறுவடை செய்யலாம்.
 • நம் பகுதிகளில் வெந்தய விதைகளை அறுவடை செய்ய வேண்டுமென்றால், நிழல் வலை அமைத்து பயிர் செய்ய வேண்டும்.
 • மருத்துவ குணம் கொண்ட வெந்தயத்தை உட்கொண்டால், வயிற்று உபாதைகள் நீங்கும் என்பதோடு, சந்தையில் வெந்தயக் கீரைக்கு எப்போதுமே, ‘டிமாண்ட்’ அதிகம் உள்ளது. ஒரு கட்டு வெந்தயக் கீரையை சராசரியாக, 30 ரூபாய் வரை விற்பனை செய்வதன் மூலம், குறுகிய காலத்தில், அதிக லாபம் ஈட்டலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *