வீட்டில் சேரும் எல்லாக் குப்பை-கழிவுகளையும் ஒரு பிளாஸ்டிக் பையில் இட்டு, குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறோம். அதையெல்லாம் குப்பை அள்ளும் வண்டியில் வாரிக்கொண்டு போய், ஒரு திடலில் கொட்டி வைத்துவிடுகிறார்கள். உரமாக மாற வேண்டிய மக்கக்கூடிய குப்பையும் பிளாஸ்டிக் பையில் கிடந்து அழுகி, அந்தப் பகுதியே நாற்றம் எடுப்பதுதான் மிச்சம். வீட்டில் சேரும் மக்கக்கூடிய கழிவுகளை ஏன் உரமாக்கக்கூடாது?
பலரும் வீட்டில் தோட்டம் வைத்திருப்பார்கள், தொட்டிச் செடிகளை ஆர்வமாக வளர்ப்பார்கள். தாவரங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டம் அவசியம். இதற்கான உரத்தைக் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை. மக்கக் கூடிய கழிவுகளை நாமே உரமாக்கலாம். இதற்குப் பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை.
- 7 மண் தொட்டிகளை வாங்கிக் கொள்ளுங்கள்.
- இதில் ஒவ்வொரு கிழமைக்கும் குறிப்பிட்ட ஒரு தொட்டியில் குப்பைகளைப் போட்டு வரவும். அசைவக் கழிவுகள் அதிகம் வேண்டாம்.
- கழிவு மிகவும் ஈரமாக நொசநொசத்து இருந்தால் கொஞ்சம் மண்ணைப் போடவும்.
- இந்தப் பூந்தொட்டிகள் நிறைவதற்கு 3-4 மாதங்கள் ஆகும்.
- பூந்தொட்டிகள் நிறைந்த பிறகு 20-30 நாட்கள், அப்படியே விடவும். அவ்வப்போதுக் காற்று போவதற்குக் கிளறி விடவும்.
- இந்தத் தொட்டிகளில் காய்கறிச் செடிகள், பூச்செடிகளை உங்கள் விருப்பம் போல் இட்டு வளர்க்கலாம்.
- அப்படிச் செடிகளை வைத்துவிட்டால், புதிய தொட்டிகளில் கிழமைக்கு ஏற்பக் குப்பைகளை இட்டு வாருங்கள்.
- இல்லையென்றால், பழைய தொட்டிகளில் உள்ள உரத்தைத் தோட்டத்தில் இட்டுவிட்டு, மீண்டும் புதிய கழிவைப் போடத் தொடங்குங்கள்.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்