அதிக விலை கிடைத்தும் கேழ்வரகு சாகுபடி புறக்கணிப்பு

:போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ், பூஸ்ட், புரோட்டினெக்ஸ் உள்ளிட்ட ஊக்க பானங்களில், புரதச் சத்து அதிகம். இவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள், கேழ்வரகை பயன்படுத்தியே, புரதச் சத்து கொண்ட ஊக்க பானங்களை தயாரித்து, விற்பனை செய்கின்றன. மேலும், பல உணவு பொருட்கள், கேழ்வரகையே அடிப்படை ஆதாரமாக கொண்டு தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.

இதனால், கேழ்வரகுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. ஆனால், கேழ்வரகு உற்பத்தி, ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. அதிக விலை கிடைத்தும், கேழ்வரகை பயிரிடுவதில், விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டுவதுஇல்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் நெல்லுடன், கேழ்வரகு, வேர்க்கடலை, கரும்பு போன்ற பயிர்களையும், விவசாயிகள் பயிரிட்டனர். தற்போது, கேழ்வரகு பயிரிடுவது மிகவும் குறைந்துவிட்டது.

திருக்கழுக்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மட்டுமே, ஒரு சில விவசாயிகள், கேழ்வரகு பயிர் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில், 30-40 ஆண்டுகளுக்கு முன், கிராம உணவில்,கேழ்வரகு பிரதான இடத்தை பிடித்திருந்தது. கேழ்வரகு கூழ், களி, கீரை அடை, தேங்காய் அடை, கொழுக்கட்டை, பிட்டு போன்றவை விரும்பி உண்ணப்பட்டது.

கேழ்வரகை முளை கட்டி, பின் அதில் இருந்து பால் எடுத்து, குழந்தைகளுக்கு உணவாக கொடுப்பதும், வழக்கத்தில் இருந்தது.
நாகரீக மாற்றத்தின் காரணமாக, உணவிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. கேழ்வரகு பின் தள்ளப்பட்டு, அரிசியும், கோதுமையும் உணவில் முக்கிய இடத்தை பிடித்தன.

பயன்பாடு குறைந்த நிலையில், மேலும் சில காரணங்களால், கேழ்வரகு உற்பத்தியும் குறைந்துவிட்டது.

இதுகுறித்து, இந்த காலகட்டத்திலும், கேழ்வரகை பயிரிட்டு வரும் அகத்தீஸ்வர மங்கலத்தைச் சேர்ந்த விவசாயி வேணு கூறியதாவது:

  • எனக்கு சொந்தமான, 30 சென்டில் கேழ்வரகு பயிரிட்டு உள்ளேன்.
  • மற்ற பயிர்களை போல, இதற்கு அதிகமான செலவு பிடிப்பதில்லை, நடவு செய்யும் பொழுதும், நடவுக்கு பிறகு 20 நாட்களில் இரண்டுமுறை உரமிட வேண்டும்.
  • தேவைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும், 90 நாட்களுக்கு பிறகு அறுவடைக்கு தயாராகும். 30 சென்டிற்கு, 4,000 ரூபாய் வரை செலவாகின்றது. 3 மூட்டைகள் கேழ்வரகு கிடைக்கும்.
  • இருப்பினும், அறுவைடையான கேழ்வரகு மணிகளை, கதிரில் இருந்து பிரிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.
  • முன்பெல்லாம், கேழ்வரகு பயிரை அறுவடை செய்து, குறிப்பிட்ட நாள் உலர வைத்து, பின், மாடுகளை கொண்டு போரடித்து, கதிரில் இருந்து மணிகள் பிரித்தெடுக்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறை தற்போது இல்லை.
  • கேழ்வரகை அறுவடை செய்வது முதல், மணிகளை பிரித்தெடுப்பது வரை அனைத்திற்கும், ஆட்களையே பயன்படுத்த வேண்டி உள்ளது. ஆட்கள் கிடைக்காத காரணத்தினாலும், அறுவடையில் சிரமம் உள்ளதாலும், கேழ்வரகை பயிரிட விவசாயிகள் தயங்குகின்றனர்.
  • முன்பு, இரவில் கேழ்வரகு கூழை சமைத்து, மறுநாள் காலையில் கரைத்து குடிப்பார்கள். அந்த கால கட்டத்தில் அரிசி விலை அதிகம் என்பதால், கேழ்வரகு, கம்பு போன்றவை அதிகம் பயன்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது, அரிசி விலைக்கு நிகராக கேழ்வரகும் விலை உயர்ந்து விட்டது. இதனால், அரிசியை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆடி மாதத்தில் மட்டும், கோவில்களில் கூழ் வார்த்தல் விழாவிற்காக, கொஞ்சம் கூடுதலாக விற்பனையாகும்.
  • பல ஆண்டுகளுக்கு முன், கேழ்வரகு முக்கிய உணவாக இருந்தது. இன்றைக்கும், சென்னை உள்ளிட்ட நகரங்களில் கூட, சாலை ஓரங்களில் கேழ்வரகு கூழ் விற்பனை நடந்து வருகிறது. எனவே, தற்போதும் கேழ்வரகினை உணவில் சேர்த்து கொள்ள, மக்கள் விரும்புகின்றனர். ஆனால், விவசாயிகள் தேவைக்கு ஏற்ற அளவிற்கு உற்பத்தி செய்வதில்லை. உற்பத்தியை பெருக்க, விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

 

 நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *