தொடர் கண்காணிப்பும், முறையான பராமரிப்பும் இருந்தால் கொய்யாப்பழ சாகுபடியில் குறைவில்லா வருமானம் பெறமுடியும் என்கிறார் உடுமலையை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன.
உடுமலை சுற்றுவட்டாரத்தில் ஒரே பயிர் என்ற நிலைமாறி விவசாயிகள் தற்போது ஊடுபயிர்கள் சாகுபடியை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். சோளம், கீரைவகைகள், காய்கறிகள் போன்ற குறுகிய கால பயிர்கள் ஊடுபயிராக இருந்த நிலை மாறி, தற்போது கோகோ, கொய்யா, மாதுளை உட்பட பழப்பயிர்களையும் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
ஆண்டு முழுவதும் பழங்களுக்கு வரவேற்பு இருப்பதுடன், விளைச்சலும் கிடைப்பதால் விவசாயிகளும் அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வாறு உடுமலை அருகே, மேற்குதொடர்ச்சி மலையடிவாரமான கொங்குரார்குட்டையில் தென்னையில் ஊடுபயிராக கொய்யா சாகுபடி செய்து அசத்தி வருகிறார் விவசாயி ஈஸ்வரன்.
தென்னை நடவு செய்யும் போதே கொய்யாவும் வைத்ததால், தற்போது ஓராண்டை கடந்த நிலையில் முதல் அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறார். விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது:
- நான்கு ஏக்கரில் ஆந்திரா பனாரஸ் என்ற கொய்யா ரகத்தை ஒவ்வொரு மரத்துக்கும், 10 அடி இடைவெளி இருக்கும் வகையில் தென்னையில் ஊடுபயிராக நடவு செய்யப்பட்டுள்ளது.
- ஏக்கருக்கு, 230 செடிகள் வீதம், 920 கொய்யா நாற்றுகள் வைக்கப்பட்டுள்ளது.சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதால் குறைந்தளவு தண்ணீர் போதுமானது என்பதால், மரத்துக்கு வாரத்தில் இரண்டு முறை, 25 லிட்டர் வீதம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
- பழப்பயிர்கள் என்பதால் காய்ப்புழுக்கள் அதிகளவில் காணப்படும். இதனை கட்டுப்படுத்த மாதம் ஒருமுறை மருந்து தெளிக்கப்படுகிறது.
- கிள்ளிவிட வேண்டும்ஆரம்பித்திலேயே மரங்களை உயரமாக வளர்க்காமல் அவ்வப்போது நுனிதளிர்களை கிள்ளிவிட வேண்டும். இதனால், செடிகளில் அடி தண்டுகள் காற்றில் சாய்ந்துவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் தடிமனாக வளரும்.
- அத்துடன் இதுபோன்று நுனிகளை கிள்ளிவிடுவதால் அதிகளவில் கிளைகள் பரப்பி, நிறைய பூக்கள் பிடிப்பதற்கு வாய்ப்புள்ளது. அதே போன்று பிஞ்சு வைத்த பின்பு, வளரும் நுனிகளையும் கிள்ளிவிட வேண்டும். அப்போதுதான் நாம் கொடுக்கும் உரங்கள் அனைத்தும் காய்களுக்கு கிடைத்து, தரத்துடனும், அதிகளவு எடையுடனும் சிறப்பாக காணப்படும்.
- நடவு செய்த ஒரு ஆண்டில் முதல் அறுவடைக்கு வருகிறது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை காய்கள் பறிக்கப்படுகிறது. குறைந்தபட்சம், 500 கிலோ வரைக்கும் கிடைத்து வருகிறது.
- வியாபாரிகள் தோட்டத்துக்கே நேரடியாக வந்து கொள்முதல் செய்வதால் சந்தைப்படுத்துவதற்கு அலைய வேண்டிய அவசியமில்லை. கிலோவுக்கு, 25 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
- ஆண்டு முழுவதும் காய்ப்பு இருந்துகொண்டே இருக்கும். தொடர்ந்து, 25 ஆண்டுகள் வரைக்கும் அறுவடை செய்யலாம்.
- இப்பழத்துக்கு எப்போதும் வரவேற்பு இருப்பதால் சராசரியான விலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. விவசாயிகள் அனைவரும் தனிப்பயிராகவும், ஊடுபயிராகவும் கொய்யா சாகுபடி செய்யலாம். இவ்வாறு ஈஸ்வரன் தெரிவித்தார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்