வளம் தரும் சப்போட்டா சாகுபடி

சப்போட்டா சாகுபடியில் உயரிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றினால் கூடுதல் மகசூலும், அதிக லாபமும் ஈட்டலாம் என திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சப்போட்டா பழத்தில் பரக்டோஸ், சுக்ரோஸ் ஆகிய எளிய சர்க்கரைகள் உள்ளதால் சாப்பிட்டவுடன் உடனடி ஆற்றலும், புத்துணர்ச்சியும் பெறலாம். 5.6 சதவீத நார்ச்சத்து உள்ளது.

மலச்சிக்கலைத் தடுக்கும். சப்போட்டாவில் உள்ள டானின் எனும் வேதிப் பொருள் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கி உள் புண்களை ஆற்ற வல்லது.

பொட்டாசியம், தாமிரம், இரும்பு ஆகிய தாது உப்புக்களையும், வைட்டமின் சி, ஏ, பி வகைகளும் சப்போட்டாவில் உள்ளன.

ரகங்கள்:

 • கோ1, 2, 3 மற்றும் பிகேஎம் 1, 2, 3, 4, 5, ஓவல், கிரிக்கெட் பால், கீர்த்திபர்த்தி, காளிப்பட்டி.

மண் மற்றும் தட்பவெப்பம்:

 • அனைத்து வகை மண்களிலும் வளரக் கூடியது.
 • வண்டல் மண் மிகவும் ஏற்றது.
 • கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடி உயரம் வரை வளரக் கூடியது.
 • உப்புத் தன்மை கொண்ட நீரையும் தாங்கி வளரக் கூடியது. ஜூன் முதல் டிசம்பர் வரை நடுவதற்கு ஏற்ற தருணம்.

நடவு:

 • வரிசைக்கு வரிசை 8 மீ, செடிக்குச் செடி 8 மீ இடைவெளியில் நடவு செய்யலாம்.
 • அடர் நடவில் வரிசைக்கு வரிசை 8 மீ., செடிக்குச் செடி 4 மீ இடைவெளியில் நடவு செய்யலாம்.
 • 3 க்கு 3 அடி என்ற அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழுஉரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு, 1.3 சத லிண்டேன் குருணை 100 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இட்டு, ஒட்டு சப்போட்டா கன்றுகளை குழியின் நடுவில் ஒட்டுப்பகுதி தரைமட்டத்திலிருந்து அரை அடி உயரத்தில் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். ஆதரவுக்குக் குச்சி நட்டு தளர்வாகக் கட்டி விட வேண்டும்.

நீர்ப் பாசனம்:

 • நட்டவுடனும், நட்ட மூன்றாம் நாளும் உயிர்த் தண்ணீர் விட வேண்டும்.
 • பின்னர் ஒருவாரம் அல்லது 10 நாள் இடைவெளியில் தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்சலாம்.

ஊடுபயிர் சாகுபடி:

 • முதல் மூன்றாண்டுகளுக்கு காய்ப்புக்கு முன்னதாக பயறு வகைகள், நிலக்கடலை, குறுகிய கால காய்கறிகள் சாகுபடி செய்து கூடுதல் லாபம் பெறலாம்.

பயிர் பாதுகாப்பு:

 • இலை பிணைக்கும் புழுவைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு மில்லி பாசலோன் 35 ஈசி மருந்தைக் கலந்து தெளிக்க வேண்டும்.
 • கம்பளிப் புழுவைக் கட்டுப்படுத்த ஒருலிட்டர் தண்ணீரில் இரண்டு மில்லி குளோர்பைரிபாஸ் 20 ஈசி மருந்து கலந்து தெளிக்கலாம்.

இலைக் கரும்பூசண நோய்:

 • மைதா மாவுக் கரைசலைத் தெளிப்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்.
 • 5 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ மைதா கலந்து கொதிக்க வைத்து கூழ்போல காய்ச்ச வேண்டும். பின்னர் ஆற வைத்து 20 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இந்த பசையானது இலைகளில் ஒட்டிக் கொண்டு காய்ந்து உதிரும்போது பூசணமும் சேர்ந்து உதிர்ந்துவிடும்.

அறுவடை:

 • முதிர்ச்சியடைந்த காய்கள் மேல்புறத்தில் மங்கிய பழுப்பு நிறத்திலும், சுரண்டிப் பார்த்தால் தோலுக்குக் கீழுள்ள பகுதி நிழலான மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
 • முதிர்ச்சியடையாத காய்களில் பச்சை நிறமாக இருக்கும். இதனைக் கண்டுபிடித்து முதிர்ந்த பழங்களை அறுவடை செய்யலாம்.
 • ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அனைத்து வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் 50 சத மானியத்தில் சப்போட்டா கன்றுகள் வழங்கப்படுகின்றன.

மேலும், விவரங்களுக்கு தோட்டக்கலைத் துறை அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம் என உதவி இயக்குநர் (சேரன்மகாதேவி) தி.சு. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

நன்றி: தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *