சத்தான வருமானம் கொடுக்கும் சம்பங்கி!

  • 6 ஆண்டுகளுக்கு தொடர் மகசூல்
  • நிலையான விற்பனை வாய்ப்பு
  • 90-ம் நாளில் இருந்து அறுவடை
  • தினசரி வருமானம்
  • தனிப் பட்டம் கிடையாது

தினசரி வருமானம் கொடுக்கும் காய்கறிகள், கீரைகள், பூக்கள் போன்ற பயிர்களில் முதன்மையாக இருப்பது பூக்கள்தான். அதிலும் சம்பங்கி மலருக்கு எப்போதுமே நிலையான சந்தை வாய்ப்பு இருந்து வருகிறது. அதனால், மலர் சாகுபடிக்கு மாறும் பெரும்பாலான விவசாயிகளின் தேர்வு சம்பங்கியாக இருக்கிறது. அந்த வகையில், சம்பங்கி சாகுபடியில் வெற்றிகரமாக வருமானம் ஈட்டி வருகிறார், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த பொன்மாரி.

சங்கரன்கோவிலில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலையில் உள்ள செவல்குளம் கிராமத்தில்தான் இவரது சம்பங்கி மலர் தோட்டம் உள்ளது. பறித்த சம்பங்கிப் பூக்களை சந்தைக்கு அனுப்பும் பணியில் இருந்த பொன்மாரியைச் சந்தித்தோம்.

ஆசிரியர் பணியோடு விவசாயமும்!

“என் நண்பர் மரியஇன்பென்டும் நானும் சேர்ந்துதான் இந்த இடத்தை வாங்கி விவசாயம் செய்றோம். எங்க ரெண்டுபேருக்குமே சிதம்பராபுரம் கிராமம்தான் சொந்த ஊர். ரெண்டு பேரோட குடும்பமும் விவசாயக் குடும்பம் கிடையாது. ரெண்டு பேரும் ஒண்ணா டீச்சர் டிரைனிங் படிச்சோம். இங்க வேலை கிடைக்காததால அவன் துபாய் போயிட்டான். எனக்கு இங்கயே ஒரு தனியார் பள்ளியில் வேலை கிடைச்சது. எனக்கு ரொம்ப நாளாவே விவசாயம் செய்யணுங்கிற ஆசை உண்டு. துபாய் போன மரிய இன்பென்டும் அங்க வேலைப்பளு அதிகமா இருந்ததால… சொந்த ஊருக்கே வந்து ஏதாவது பிசினஸ் பண்ற யோசனையில் இருந்தான். அந்த சமயத்துலதான் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து விவசாயம் பண்ணலாம்னு முடிவு செஞ்சு இந்த 6 ஏக்கர் 63 சென்ட் நிலத்தை வாங்கினோம். நல்ல செவல் மண்ணா கிடைச்சது” என்ற பொன்மாரி, நண்பர் மரிய இன்பென்டை செல்போனில் அழைத்து, நாம் வந்திருக்கும் விஷயத்தைச் சொன்னார்.

செல்போன் மூலமாக ஆலோசனை!

நம்மிடம் பேசிய “விவசாயமே தெரியாதுனாலும் ரெண்டு பேருக்கும் அதுல ஆர்வம் இருந்ததால நிலத்தை வாங்கிட்டோம். இந்தப் பகுதியில எலுமிச்சை அதிகங்கிறதால… 4 ஏக்கர் எலுமிச்சை போட்டோம். பொன்மாரிதான் நேரடியா விவசாயத்தைப் பார்த்துக்குவார். நான் இன்டர்நெட் மூலமா தேடி விவசாயத் தொழில்நுட்பங்களை அவருக்குச் சொல்வேன். எலுமிச்சை நட்டது போக, மீதி இருந்த அரை ஏக்கர் நிலத்துல மட்டும் கத்திரி போட்டோம். அதுல அதிகளவுல பூச்சித்தாக்குதல் வந்துடுச்சு.

இணையத்தில் கிடைத்த தீர்வு!

நான் இணையத்தில தேடி சொன்ன நிறைய பூச்சிக்கொல்லிகளை அடிச்சும் பிரயோஜனமில்லை. அந்த விஷயத்தை பொன்மாரி என்கிட்ட சொன்னார். பெரும்பாலும் இன்டர்நெட்ல ஆங்கிலத்துல தேடும்போது, ரசாயனங்களைப் பரிந்துரை செய்ற தளங்களைத்தான் காட்டும். அன்னிக்கு நான் தமிழ்ல ‘கத்திரி நோய்த்தாக்குதல் தீர்வு’னு டைப் செஞ்சு தேடினேன். அப்போதான் இயற்கைப் பூச்சி விரட்டிகள் குறித்த தகவல்கள் கிடைச்சது. அந்த தகவல்கள் எல்லாத்துலயும் ‘பசுமை விகடன்’ புத்தகத்தோட பெயர் இருந்துச்சு. அதுக்கப்பறம்தான் பசுமை விகடனை இணையத்துல படிக்கிறதுக்கு சந்தா கட்டினேன். அதுக்கப்பறம்தான் இயற்கை விவசாயம் குறித்தே எங்களுக்குத் தெரிஞ்சது.

வழிகாட்டிய பசுமை விகடன்!

அதுல முந்தைய இதழ்கள் லிங்க்ல இருக்குற புத்தகங்களைப் படிச்சிட்டு இருந்தப்போதான் ‘திண்டுக்கல் மருதமுத்து சாரோ’ட சம்பங்கி சாகுபடி குறித்து தெரிஞ்சுக்கிட்டேன். சங்கரன்கோவில்லயே பூ மார்கெட் இருக்கிறதால விற்பனைக்கும் பிரச்னை இருக்காதுனு முடிவு பண்ணிணோம். உடனே, ரெண்டு பேருமே, மருதமுத்து சார்கிட்ட செல்போன்ல பேசியே விவரங்களை தெரிஞ்சுக்கிட்டு சம்பங்கி சாகுபடியில் இறங்கிட்டோம். அதுல நல்ல வருமானம் கிடைச்சுக்கிட்டிருக்கு. கூடிய சீக்கிரம் நானும் இந்தியா வந்து இயற்கை விவசாயத்துல இணைஞ்சிடுவேன். மீதி விஷயங்களை நீங்க பொன்மாரிகிட்டயே கேட்டுக்கங்க” என்று சொன்னார்.

தனிப்பயிராக சம்பங்கி… ஊடுபயிராக செண்டுமல்லி!

தொடர்ந்து பேச ஆரம்பித்தார் பொன்மாரி. “மருதமுத்துசார்தான் சம்பங்கி போடச் சொல்லி நம்பிக்கை கொடுத்தார். பூக்கள்ல வருமானம் கிடைக்கும்னு தெரிஞ்சதும்… ஒண்ணே கால் ஏக்கர் நிலத்துல சம்பங்கியை நடவு செய்துட்டோம். சம்பங்கிக்கு சொட்டுநீர்ப்பாசனம் அமைச்சிருக்கோம். அடுத்து 4 ஏக்கர் எலுமிச்சையில் ஊடுபயிரா ஒண்ணே கால் ஏக்கர் நிலத்துல செண்டுமல்லி போட்டோம். ரெண்டுலயும் இப்போ வருமானம் வந்துக்கிட்டிருக்கு. அந்த தெம்புல போன மாசம் எலுமிச்சையில் ஊடுபயிரா ஒண்ணே கால் ஏக்கர்ல கோழிக்கொண்டைப் பூவை போட்டிருக்கோம்.

விற்பனைக்கு பிரச்னையில்லை!

சங்கரன்கோவில் மார்க்கெட்லதான் சம்பங்கியை விற்பனை செய்றோம். இயற்கை முறையில சாகுபடி செய்றதால பூ பெருவெட்டாக இருக்குது. அதனால, நல்ல விலை கிடைக்குது. மல்லி, பிச்சிப்பூ ரெண்டும் அதிகமா வரத்தானா… சம்பங்கிக்கு விலை கொஞ்சம் குறையும். மத்தபடி எப்பவுமே நல்ல விலை கிடைச்சுக்கிட்டே இருக்கு. முகூர்த்தம், பண்டிகை நாட்கள்ல நல்ல விலை கிடைக்கும். இப்போ நட்டு ஒரு வருஷம் ஆச்சு.

ஒண்ணே கால் ஏக்கர் நிலத்துல இருந்து தினமும் சராசரியா 25 கிலோ அளவுல பூ கிடைக்குது. இன்னும் போகப் போக மகசூல் கூடும். முறையா பராமரிச்சா 6 வருஷத்துக்கு மேல மகசூல் எடுக்கலாம்.

தினசரி 2 ஆயிரம் ரூபாய் வருமானம்!

ஒரு கிலோ சம்பங்கி 80 ரூபாய்ல இருந்து 200 ரூபாய் வரை விற்பனையாகுது. குறைஞ்ச விலையா 80 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே… தினமும் 25 கிலோ பூவுக்கு 2 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடும். மாசம் நிச்சய வருமானமா 60 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடும். இதுல பறிப்பு, போக்குவரத்து, இடுபொருள்னு 7 ஆயிரம் ரூபாய் செலவு போக… ஒண்ணே கால் ஏக்கர் சம்பங்கியில இருந்து மாசம் 53 ஆயிரம் ரூபாய் நிச்சய லாபமா கிடைச்சுக்கிட்டிருக்கு” என்ற பொன்மாரி நிறைவாக,

“வாத்தியாருக்குப் படிச்சவனுங்க விவசாயம் செஞ்சு என்ன பண்ணப்போறாங்கனு ஊர்ல எங்களை ஒரு மாதிரி பேசுனாங்க. ஆனா, நான் அரசு வேலைக்குப் போயிருந்தாலும், இவ்வளவு வருமானம் சம்பாதிக்க முடியாது. இந்தளவுக்கு எங்களை சாதிக்க வெச்சது, இயற்கை விவசாயம்தான். சம்பங்கி சாகுபடிக்கு ஆரம்பகட்ட செலவா ஒண்ணே கால் லட்ச ரூபாய் அளவுலதான் செலவாச்சு. இந்த முதலீடுல இவ்வளவு லாபம் வேற எந்தத் தொழில்லயும் கிடைக்காது” என்று பெருமையாகச் சொன்னவர், பூக்களை மார்கெட்டுக்கு அனுப்புவதில் மும்முரமானார்.

ஒன்றே கால் ஏக்கர் நிலத்தில் சம்பங்கி சாகுபடி செய்யும் விதம் குறித்து பொன்மாரி சொன்ன சாகுபடிப்பாடம் இங்கே…

ஸ்ரீகார், சுஹாசினி, பூலோரஜினி, வைபோவ் என சம்பங்கிகளில் பல வீரிய ரகங்கள் உண்டு. ஆனால், ’பிரஜ்வல்’ ரகத்தில்தான் பூக்கள் பெரிய அளவில் கிடைக்கின்றன. மகசூலும் அதிகமாகக் கிடைக்கின்றது.


அனைத்துப் பட்டங்களிலும் விதைக்கலாம்!

பூக்களுக்குப் பட்டம் கிடையாது. தேர்வு செய்த ஒன்றே கால் ஏக்கர் (1 ஏக்கர் 25 சென்ட்) நிலத்தை நன்கு உழுது ஒரு வாரம் காய விட்டு… 10 டிராக்டர் மட்கிய ஆட்டு எருவைக் கொட்டி உழவு செய்ய வேண்டும். அடுத்து 300 கிலோ வேப்பம் பிண்ணாக்கைக் கொட்டிக் கலைத்து உழவு செய்து 2 நாட்கள் நிலத்தைக் காய விட வேண்டும். பிறகு, 100 அடி நீளம், இரண்டரை அடி அகலம், அரை அடி உயரம் என மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். பாத்திகளுக்கான இடைவெளி ஒன்றரை அடி இருக்க வேண்டும். பாத்தி எடுத்த பிறகு சொட்டுநீர் அமைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து பாத்திகள் மீது ‘பாலிதீன் மல்ச்சிங் ஷீட்’டை விரித்து மூட வேண்டும். இந்த ஷீட் அமைப்பதால், களைகள் வராது. தொடர்ந்து மல்ச்சிங் ஷீட்டை துளைத்து… பாத்தியின் இருபக்கமும் 2 அடி இடைவெளியில் ‘ஜிக் ஜாக்’ முறையில் (முக்கோண நடவு முறை) 5 அங்குல ஆழத்துக்கு குழி பறிக்க வேண்டும்.

550 கிலோ விதைக்கிழங்கு!

ஒன்றே கால் ஏக்கர் நிலத்தில் விதைக்க, 550 கிலோ விதைக்கிழங்கு தேவைப்படும். விதைக்கிழங்கை நிழலில் 5 நாட்கள் காய வைக்க வேண்டும். 200 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, ஒரு கிலோ சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இக்கரைசலோடு சரி பாதி ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து, அதில் விதைக்கிழங்குகளை 30 நிமிடங்கள் ஊற வைத்து… 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி விதைத்து தண்ணீர் விட வேண்டும். ஒரு முறை கிழங்கு ஊற வைத்த கரைசலை அடுத்த முறை பயன்படுத்தக்கூடாது. விதைத்த 3-ம் நாள் தண்ணீர் விட்டு… அடுத்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தொடர்ந்து தண்ணீர் விட்டு வர வேண்டும்.

தொடர்ச்சியாக ஊட்டக்கரைசல்!

விதைத்த 15-ம் நாள், ஒரு லிட்டர் பாஸ்போ-பாக்டீரியா, ஒரு லிட்டர் அசோஸ்பைரில்லம் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, இக்கரைசலை சொட்டுநீர் மூலம் கலந்து கொடுக்க வேண்டும்.

18-ம் நாள், ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, ஒரு கிலோ, சூடோமோனஸ் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து சொட்டுநீர் மூலம் கொடுக்க வேண்டும். தொடர்ந்து 2 மாதங்களுக்கு ஒரு முறை சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி கரைசலைக் கொடுத்து வர வேண்டும்.

விதைத்த 30-ம் நாளிலிருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை… 200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து சொட்டுநீர் மூலம் கொடுக்க வேண்டும். அடுத்த 15-ம் நாள், 200 லிட்டர் அமுதக்கரைசலை சொட்டுநீர் மூலம் கொடுக்க வேண்டும். பஞ்சகவ்யா, அமுதக் கரைசல் இரண்டையும் மாற்றி மாற்றி சுழற்சி முறையில் கொடுத்து வர வேண்டும்.

90-ம் நாளுக்கு மேல் அறுவடை!

விதைத்த 15-ம் நாளுக்கு மேல் கிழங்கு முளைப்பு எடுத்து, 35-ம் நாளுக்கு மேல், நிலத்தில் தோகை படரத் தொடங்கும். 45–ம் நாளுக்கு மேல் நன்கு வளரத் தொடங்கி, 70-ம் நாளுக்கு மேல் மொட்டு விட ஆரம்பிக்கும். 90-ம் நாளுக்கு மேல் பூக்களைப் பறிக்க ஆரம்பிக்கலாம். ஆரம்பத்தில் சிறிதளவுதான் பூக்கள் கிடைக்கும். விதைத்த ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் ஓரளவு மகசூல் கிடைக்கும். தொடர்ந்து மகசூல் அதிகரிக்கும். அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை மகசூல் கிடைக்கும். மாவுப்பூச்சி உள்ளிட்ட பூச்சிகள் தாக்கினால்… இஞ்சி, பூண்டு, மிளகாய்க் கரைசல் தெளிக்கலாம்.

ஊடுபயிராக செண்டுமல்லி!

எலுமிச்சையில் ஊடுபயிராக செண்டுமல்லியை சாகுபடி செய்து வருகிறார், பொன்மாரி. அது குறித்துப் பேசியவர்,

“எலுமிச்சையில ஊடுபயிரா ஒண்ணே கால் ஏக்கர்ல செண்டுமல்லி போட்டிருக்கோம். இதையும் மேட்டுப்பாத்தி அமைச்சு அதுலதான் நடவு செய்திருக்கோம். இதுக்கும் சம்பங்கியைப் போலத்தான் பராமரிப்பு. நாற்று நட்ட 40-ம் நாள்ல இருந்து 90-ம் நாள் வரை பூ பறிக்கலாம். இதை சுழற்சி முறையில நடவு செஞ்சுக்கிட்டே இருக்கிறதால தொடர்ந்து பூ கிடைச்சுக்கிட்டே இருக்கு. அந்த வகையில தினமும் 30 கிலோவில் இருந்து 40 கிலோ வரை பூ கிடைக்குது. மாசத்துக்கு எப்படியும் 1,000 கிலோ பூ கிடைச்சுடும். ஒரு கிலோ பூ 40 ரூபாய்ல இருந்து 50 ரூபாய் வரை விற்பனையாகுது. அது மூலமா மாசம் 40 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. இதுல செலவெல்லாம் போக, 35 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைக்குது” என்றார்.

தொடர்புக்கு,
பொன்மாரி,
செல்போன்: 09976724803

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *