ஒற்றை நாற்று நடவில் குதிரைவாலிச் சாகுபடி!

விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் பயிர்களில் சிறுதானியங்களும் முக்கியமானவை. தொடர்ந்து சிறுதானியங்களை விடாமல் பயிர் செய்து பாரம்பர்யத்தைக் காத்து வரும் விவசாயிகளும் உண்டு. அவர்களில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருஞானச்சம்பந்தனும் ஒருவர்.

உடுமலைப்பேட்டை வட்டம், செல்லப்பம் பாளையம் கிராமத்தில் இருக்கும் நிலத்தில் தனது மனைவி திருமுருகஞானாம்பாளுடன் சேர்ந்து… அறுவடை செய்து குவித்து வைக்கப்பட்டிருந்த குதிரைவாலி, காராமணி ஆகியவற்றைச் சுத்தப்படுத்தும் பணியில் இருந்த திருஞானச்சம்பந்தனைச் சந்தித்தோம்.

“நாங்க ரெண்டு பேரும் பொறந்து வளர்ந்த ஊர் இதுதான். எங்களுக்குச் சொந்தமா 7 ஏக்கர் பாசன பூமி இருக்கு. ‘பசுமை விகடன்’ புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சோம். இப்போ பத்து வருஷமா இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டுருக்கோம். எங்க குடும்பத்துல எல்லோரும் பசுமைவிகடன் வாசகர்கள். முதல் புத்தகத்துல இருந்து வாங்கிட்டுருக்கோம். அதைப்படிச்சு எங்களுக்குத் தேவையான விஷயங்களை எங்க வயல்ல செயல்படுத்திடுவோம். பசுமை விகடன்ல வர்ற ‘பசுமைச் சந்தை’ பகுதி மூலமா எங்களுக்குத் தேவையான பாரம்பர்ய விதைகளை வரவழைச்சுக்கிறோம். எங்களோட விளைபொருள்களையும் அதுமூலமாத்தான் விற்பனை செய்றோம். அப்படி போன வருஷம் ஒருத்தர்கிட்ட இருந்து குதிரைவாலி விதையை வாங்கினேன்” என்ற திருஞானச்சம்பந்தன், தான் சாகுபடி செய்த முறையைச் சொல்ல ஆரம்பித்தார்.

“மேட்டுப்பாத்தியில நாற்றங்கால் அமைச்சு குதிரைவாலி விதைகளை நாற்றுவிட்டு ஒற்றை நாற்று முறையில ரெண்டு ஏக்கர் நிலத்துல நடவு செஞ்சேன். வழக்கமா தூவி விதைச்சா ரெண்டு ஏக்கருக்கு 15 கிலோ அளவுக்கு விதை தேவைப்பட்டிருக்கும். ஒற்றை நாற்று முறைங்கிறதால அஞ்சு கிலோ விதையே போதுமானதா இருந்துச்சு. உயிர் உரங்கள் கலந்து செரிவூட்டப்பட்ட தொழு உரத்தைத்தான் நாற்றங்காலில் அடியுரமாகப் போட்டேன். விதைச்ச 7-ம் நாள் களையெடுத்து 10 லிட்டர் தண்ணீர்ல 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிச்சேன். 15 நாள்கள்ல நாற்றுகளைப் பிடுங்கி, முக்கால் அடி இடைவெளியில வயல்ல நடவு செஞ்சேன். வாரம் ஒரு முறைதான் பாசனம். 15 நாளுக்கொரு தடவை ஏக்கருக்கு 200 லிட்டர் அளவுல ஜீவாமிர்தக் கரைசலைப் பாசனத் தண்ணீர்ல கலந்துவிட்டேன். 120-ம் நாளுக்கு மேல கதிர்கள் முற்ற ஆரம்பிச்சது. 150-ம் நாளுக்குள்ள எல்லாக் கதிர்களும் முத்திடுச்சு. அறுவடை செஞ்சு வெச்சுருக்கேன்.

வழக்கமா ரெண்டு ஏக்கர்ல 2,500 கிலோ மகசூல் கிடைச்சிருக்கணும். ஆனா, எங்களுக்கு 500 கிலோதான் மகசூலாச்சு. வயல்ல கதிர் முத்த ஆரம்பிக்கிற சமயத்துல பலவிதமான பறவைகள் படையெடுத்து வந்துச்சு. ஏராளமான குருவிகள் வந்து சாப்பிட ஆரம்பிச்சுடுச்சு. நாங்க விரட்டிப் பார்த்தும் ஒண்ணும் முடியலை. அதனால, பறவைகளுக்குப் போக மிச்சத்தை அறுவடை செஞ்சுக்கலாம்னு அப்படியே விட்டுட்டோம். குதிரைவாலியை அறுவடை செஞ்சதும் பசுமைச் சந்தை மூலமா எல்லோருக்கும் தெரியப்படுத்துனேன். அதுமூலமாகக் கேட்டு வர்றவங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமா விற்பனை செய்துட்டுருக்கேன். இந்த வருஷம் அரை ஏக்கர்ல நாட்டுரகக் காராமணியும் (தட்டைப்பயறு) போட்டிருந்தோம். அதுல 100 கிலோ அளவு மகசூல் கிடைச்சது” என்றார்.

தொடர்ந்து பேசிய திருமுருக ஞானாம்பாள், “குதிரைவாலியை மத்த சிறுதானியங்களைச் சமைக்கிற மாதிரி அப்படியே சமைக்க முடியாது. எந்திரம் மூலமா தோல்நீக்கி, பட்டைத் தீட்டி, உமியை நீக்கின பிறகுதான் சமைக்கணும். அந்தக்காலத்துல நெல் விளையுற பகுதிகள்ல மட்டும்தான் பச்சரிசிப் பொங்கல் வைப்பாங்க. சிறுதானிய விவசாயிகள், வரகுப்பொங்கல், தினை அரிசிப் பொங்கல் வெச்சிதான் சாமிக்கு படைப்பாங்க. நாங்க இந்த வருஷம் குதிரைவாலி அரிசியில பாரம்பர்யப் பொங்கல் வெச்சு கொண்டாடினோம். இந்தப் பொங்கல் பண்டிகையில படையலிட்டபோது, அரசாணிக்காய்க் கூட்டு, கத்திரிக்காய், காராமணி போட்டு சமைச்ச குழம்பைப் படையலுக்கு வைத்தோம். இதோடு காராமணியும் கலந்து படையலிட்டோம்” என்றார், பூரிப்புடன்.

தம்பதிகள் இணைந்து பாரம்பர்ய குதிரைவாலியைப் பயிர் செய்வதோடு, அதை வீட்டுக்கும், பண்டிகைக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த முயற்சிக்குப் பசுமை விகடன் சார்பாக வாழ்த்துக்களைச் சொல்லி விடைபெற்றோம்.

தொடர்புக்கு

திருஞானச்சம்பந்தன்,
செல்போன்: 6381642249

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *