குளோபல் வார்மிங்கை தாக்குபிடிக்கும் சிறுதானியங்கள்!

நெல், கடலை, கரும்பு, பருத்தி என பணம் காய்க்கும் (பணப்பயிர்) பயிர்களை மட்டும் பயிரிட்ட விவசாயிகளில் பலர் தண்ணீர் தட்டுப்பாடு, ஆட்கள் பிரச்னை, சத்தான உணவு தட்டுப்பாடு என்ற அடிப்படையில் ‘சிறுதானிய’த்தின் பக்கம் திரும்பி இருக்கின்றனர்.

சிறுதானிய உணவுகளின் மகத்துவத்தை மட்டும் பலரும் பேசி வந்தாலும், சிறுதானிய சாகுபடியால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், அவை நம்முடைய சூழலுக்கு எவ்வாறு ஏற்றதாக உள்ளன என்பதும் பெரும் பகுதியினருக்கு தெரிவதில்லை.

இந்த சிறுதானியப் பயிர்களின் நன்மைகள் பற்றியும், சூழலுக்கு எவ்வாறு ஏற்ற வகையாக உள்ளது என்பது பற்றியும் இங்கு விளக்குகிறார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் திருவண்ணாமலையில் இயங்கி வரும்  சிறுதானிய மகத்துவ மையத்தின் பேராசிரியர் நிர்மலக்குமாரி.

மண் அரிப்பை தடுக்கும்

”பல ஆண்டுகளாக சூரியகாந்தி, மக்காச்சோளம், பருத்தி என பணப்பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை மறந்துவிட்டோம். சிறுதானிய சாகுபடி என்பது ஒரு தனிப்பயிரை சாகுபடி செய்வது மட்டும் கிடையாது. ‘அது ஒரு பண்ணையம்.’ நம்முடைய கலச்சாரத்தில் எப்போதும் மண்ணுக்கு முக்கியத்துவம் உண்டு. மண்ணை பாதுகாக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக மண் அரிப்பை தடுக்க வேண்டும். இந்த மண் அரிப்பை மானாவாரியில் விளையும் சிறுதானியப் பயிர்கள் 80% அளவுக்கு தடுக்கிறது. இதற்கு காரணம் இதன் சல்லிவேர்கள்தான். ஒரு மக்காசோளப் பயிரை ஒற்றைக்  கையால் பிடுங்கி எடுத்துவிடலாம். ஆனால், வளர்ந்த பெரிய பையனால் கூட 35 நாட்கள் வயதுகொண்ட கேழ்வரகுப் பயிரை பிடுங்க முடியாது. அவ்வளவு உறுதியாக மண்ணுடன் சிறுதானிய பயிர்கள் கூட்டுவாழ்க்கை நடத்துகின்றன.

தண்ணீரை பிடித்துக்கொடுக்கும் வேர்கள்

சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, திணை, பனிவரகு, வரகு, குதிரைவாலி, கான பயிர் ஆகியவற்றைதான் நாம் சிறுதானியங்கள் என்று சொல்கிறோம். மக்காச்சோளம் சிறுதானியப் பயிர் கிடையாது. சிறுதானிய பயிர்களின் வேர் சல்லிவேராகவும், சல்லடைபோலவும் இருப்பதால் மண் இறுக்கத்தைக் குறைந்து பொல பொலப்பாக வைத்திருப்பதுடன், மழைநீரை முழுவதுமாக பிடித்து பயிர்களுக்கு கொடுக்கிறது. சிறுதானிய பயிர்களை பொறுத்தவரை பருத்தி, மக்காச்சோள பயிர்களுக்கு கொடுப்பதைபோல அதிகமான ஊட்டம் கொடுக்க தேவையில்லை. குறைவான அளவுக்கு கொடுத்தாலே போதுமானது. ஒரு போகம் சாகுபடி செய்யும்போது நிலத்தில் இருக்கும் சத்துகளே போதுமானது.

காப்பீடு கொடுக்கும் கலப்பு பயிர்

இன்றைக்கு பயிர் காப்பீடுகளை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், சிறுதானிய பயிர்களை கலப்புப் பயிராக சாகுபடி செய்யும் போது அது விவசாயிகளுக்கான காப்பீடாக இருக்கிறது. கேழ்வரகு, திணை, மொச்சை அல்லது துவரை, எள் அல்லது ஆமணக்கு, கடுகு மாதிரியான  பயிர்களை கலப்பு பயிராக சாகுபடி செய்யும்போது, பயிர்களுக்கு இடையில் போட்டி இல்லாமல் மகசூலை கொடுக்கிறது. முதலில் சிறுதானியங்கள் அறுவடைக்கு வந்துவிடும். அதன்பிறகு எண்ணெய் வித்துப் பயிரோ அல்லது பயிர் வகைகளோ அறுவடைக்கு வரும்.

எல்லா பயிர்களில் இருந்தும் மகசூல் கிடைப்பதால், கூடுதலாக வருமானம் கிடைக்கும். மேலும், மானாவாரியாக விதைப்பு செய்யும் போது மழை இல்லாத  காரணத்தால் சில பயிர்கள் பழுதானாலும் ஒரு சில பயிர்கள் மகசூலை கொடுத்து விவசாயிகளுக்கு காப்பீடாக இருக்கும். கலப்புப் பயிர் செய்யும்போது கம்பளிப் புழு மாதிரியான பூச்சிகள் ஒரு பயிரில் இருந்து மற்றொரு பயிரை தாக்குவதை இடையில் இருக்கும் ஒரு பயிர் தடுக்கும். இதனால் பூச்சிகளின் சேதம் குறைவாக இருக்கும். வழக்கமாக ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்ய வேண்டிய நேரத்தில் போதுமான மழை இல்லாவிட்டால் மாற்றுப் பயிராக 65 நாட்கள், 70 நாட்கள் வயதுகொண்ட திணை, பனிவரகு மாதிரியான சிறுதானியங்களை விதைப்பு செய்து மகசூல் எடுக்கலாம்.

குளோபல் வார்மிங்கை தாக்குபிடிக்கும்

நெல், கோதுமை, மக்காச்சோளம் மாதிரியான பயிர்களை சாகுபடி செய்யும்போது 1 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் அதிகமானாலே ஒரு ஏக்கருக்கு 250 முதல் 300 கிலோ மகசூல் குறையும். இதற்கு காரணம் பயிர் தன்னை பாதுகாத்துக் கொள்வதுதான். வெப்பம் அதிகமாகும்போது இலைகளில் இருக்கும் துவாரங்கள் அடைக்கப்பட்டு, இலைகளில் உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் விளைச்சலும் குறையும். பயிர்களில் இருக்கும் ஒவ்வொரு பூக்களிலும் மகரந்த சேர்க்கை நடந்தால்தான் விதை உருவாகும். நெல் மாதிரியன பகலில் ‘பூக்கும்’ பயிர்களில் மகரந்த சேர்க்கை நடைபெறும்போது அதிகமான வெப்பம் இருந்தால் சரியான முறையில் விதைகள் உற்பத்தியாகாது. ஆனால், சிறுதானிய பயிர்கள் அனைத்தும் இரவு 12 மணி முதல் அதிகாலை 4.30 மணிக்குள் மகரந்த சேர்க்கையை முடித்துக்கொள்வதால், வெப்பநிலை பிரச்னைகள் இல்லாமல் முழுமையான அளவில் மகரந்த சேர்க்கை நடக்கிறது. இதனால் மகசூல் இழப்பு என்பது இருக்காது. குளோபல் வார்மிங் என்று சொல்லப்படும் பூவி வெப்பமயமாதலால் ஏற்படும் இழப்புகள் சிறுதானியத்தில் குறைவு.

சிறுதானியங்களில் நார்சத்து, இரும்பு சத்து, மாவு சத்து, வைட்டமின்-ஏ என உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் அதிகமாக இருப்பதால், கடந்த மூன்று ஆண்டு காலாமாக மத்திய-மாநில அரசுகள் சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகப்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தல் கிராமத்தில் அமைந்திருக்கும் சிறுதானிய மகத்துவ மையம். சிறுதானியங்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களை இங்கு அழைக்கிறேன்” என்று அழைப்பும் விடுத்தார்.

-காசி.வேம்பையன்

நன்றி: பசுமை விகடன் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *