பனி வரகு பயிரிட்டால் அதிக லாபம்

அதிக பணம் சம்பாதிக்க பனிவரகு பயிரிடலாமென வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

பனிவரகு பயிரிட கோ (பிவி) 5 ஏற்ற ரகமாகும். ஆடி மற்றும் புரட்டாசி பட்டம் ஏற்ற பருவமாகும்.

நிலத்தை சட்டி கலப்பை கொண்டு ஆழமாக உழுவு செய்ய வேண்டும். வரிசை முறை விதைப்பாக இருந்தால் ஹெக்டேருக்கு 10 கிலோ விதையிட வேண்டும். தூவும் முறை விதைப்பாக இருந்தால் ஹெக்டேருக்கு 12.5 கிலோ விதையிட வேண்டும். 22.5 சென்டி மீட்டர் * 7.5 சென்டி மீட்டர் இடைவெளி விட்டு பயிரிட வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதையளவிற்கு 600 கிராம் அசோபாஸை அரிசி கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

நிலத்தில் இடுவதாக இருந்தால் 1 ஹெக்டேருக்கு 2 கிலோ அசோபாஸை 25 கிலோ மணல் மற்றும் 25 கிலோ தொழுஉரம் கலந்து தூவ வேண்டும். 1 ஹெக்டேர் நிலத்தில் அடியுரமாக 12.5 டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின்போது பரப்பி பிறகு நிலத்தை உழ வேண்டும். தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்தை 44:22 கிலோ என்ற அளவில் கலந்து உரமிட வேண்டும். விதைத்த 18ம் நாள் களை பறிக்க வேண்டும். பின், 40ம் நாளில் மற்றொரு முறை களை எடுக்க வேண்டும்.

நன்கு காய்ந்து முற்றிய கதிர்களை அறுவடை செய்து, களத்தில் காயவைத்து அடித்து பின் தானியங்களை பிரித்து சுத்தம் செய்ய வேண்டும். இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண் அலுவலரை யோ, வேளாண் விரிவாக்க மையத்தையோ அணுகலாமென வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *