குறைந்த தண்ணீர் பயன்பாட்டில் சூரியகாந்தி சாகுபடி

தொடரும் வறட்சி, குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், குறைந்தளவு நீரைக் கொண்டு லாபம் ஈட்டக்கூடிய சூரியகாந்தி சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர் திருச்சி மாவட்ட விவசாயிகள்.

திருச்சி மாவட்டத்தில் தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, மண்ணச்சநல்லூர் ஒன்றியப் பகுதிகள்,  ஸ்ரீரங்கம் வட்டத்திலுள்ள இனாம்புலியூர், சிறுகமணி, பெருகமணி, முதலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏறத்தாழ 750 முதல் 1000 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி பயிரிடப்படும்.

குறைவான செலவில் வருவாய்: 

  • மற்றப் பயிர்கள் போல இல்லாமல் 90 முதல் 100 நாள்களில் சூரியகாந்தி சாகுபடி செய்யலாம்.
  • தினந்தோறும் பயிருக்குத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும்.
  • ஏக்கருக்கு 1 கிலோ வீதம், 2 ஏக்கருக்கு ரூ.1000-ல் விதை,  நடவுக்கூலி, உழவு கூலி, உரம் என எல்லா செலவுகளும் ரூ.5000-க்குள் அடங்கிவிடும்.
  • நோய் பாதிப்பு இல்லாமல் கண்காணித்து வந்தால் ஏக்கருக்கு 1000 கிலோ முதல் 1500 கிலோ வரை விளைச்சல் இருக்கும்.
  • நோய் பாதிப்பு இல்லாத நிலையில் விளைச்சல் அதிகமிருந்து சூரியகாந்தி சாகுபடி செய்தால் ஏக்கருக்கு ரூ. 20,000 வரை வருவாய் கிடைக்கும் என்கிறார் புலியூர் விவசாயி அ.நாகராஜன்.

தேவையும் அதிகமிருக்கிறது: 

  • அறுவடை செய்யப்படும் சூரியகாந்தி வித்துகள் வெள்ளக்கோவில், மணப்பாறை போன்ற பகுதிகளில் விற்பனையாகிறது. முதல் தரம் 1 கிலோ ரூ.40  என்ற விலையிலும், 2-ம் தரம் ரூ.35 என்ற விலையிலும் விற்பனையாகிறது.
  • தற்போது சூரியகாந்தி தேவை அதிகம் இருக்கிறது.  ஜூன், ஜூலை மாதங்களில் சூரியகாந்தி சீசன். இந்த காலத்தில் சாகுபடி அதிகளவில் நடைபெற்றிருக்கும். ஆனால், வறட்சியின் காரணமாக தற்போதுதான் சூரியகாந்தி சாகுபடியைத் தொடங்கியிருக்கின்றனர்.  டிசம்பர், ஜனவரியில் சாகுபடி அதிகம் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம் என்கின்றனர்சூரியகாந்தி வித்துகளைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகள்.

அரசின் உதவி தேவை:

  • சூரியகாந்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதைக்கு மட்டும் மானியத்தை அரசு வழங்குகிறது. சாகுபடியைத் தொடர்ந்து மேற்கொள்ள மானிய உதவிகளை அதிகரித்து வழங்க வேண்டும். சில நேரங்களில் மயில் போன்ற பறவைகள் சூரியகாந்தி தோட்டத்துக்குள் புகுந்து முழுமையாக சேதப்படுத்திச் சென்றுவிடுவதால் பாதிப்பு ஏற்படுகிறது என்கின்றனர் விவசாயிகள்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *