தைப் பட்ட சூரியகாந்தி

ஆண்டு முழுவதும் சூரியகாந்தி சாகுபடி செய்ய உகந்ததாக இருந்தாலும், இப்போது தைப் பட்டம் தொடங்கியிருப்பதால் விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடி தொழில்நுட்பங்களை நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியமானது.

டிசம்பர், ஜனவரி மாதங்களில் சூரியகாந்தி விதைப்பு செய்தால் அதிக மகசூல் கிடைக்கும். தைப்பட்டம் என்பது ஜனவரி-பிப்ரவரியை உள்ளடக்கியது. இந்தப் பட்டத்தில் பூ பருவத்தில், மழையால் பூக்கள் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சூரியகாந்தி பயிர் இதர பயிர்களைவிட மிகக் குறுகிய காலத்தில் மகசூலுக்கு வந்துவிடும். 80 முதல் 85 நாள்களில் மகசூலுக்கு வருவதால் விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்கின்றனர்.

மண் வகை:

நல்ல வடிகால் வசதியுடன் உள்ள எல்லா மண் வகைகளும் சூரியகாந்தி சாகுபடிக்கு ஏற்றது. கரிசல் பூமியில் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் தரும்.

நிலம் தயாரிப்பு:

கார அமிலத் தன்மை 6-7 என்ற கணக்கில் உள்ள நிலத்தில் சூரியகாந்தி நன்கு வளர்ச்சியடையும். ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரம் அல்லது தென்னை நார்க்கழிவு இட்டு நன்றாக உழுது புழுதியாக்க வேண்டும்.

விதையளவு:

 • வீரிய ஒட்டு ரகமாக இருந்தால் ஏக்கருக்கு 2 கிலோ, இதர ரகங்கள் ஏக்கருக்கு 3 கிலோ என்ற அளவில் விதைகள் தேவைப்படும்.
 • தருமபுரி மாவட்டத்தில் எம்எப்எஸ்எச் 17, கேபிஎஸ்எச் 1, 44, டிகே 3890, அருண், டிசிஎஸ்எச் 1, பிஏசி 1091 ஆகிய வீரிய ஒட்டு ரகங்களும் மார்டன், கோ 4 ஆகிய ரகங்களும் ஏற்றவையாக உள்ளன.

விதை நேர்த்தி:

 • மானாவாரியில் விதைக்கும் முன், விதையை ஜிங்சல்பேட் கரைசலில் 12 மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்த வேண்டும்.
 • பிறகு வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகளைச் சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைப்பு:

 • ஒரு குழிக்கு இரண்டு விதை என்ற அளவில் பக்கவாட்டில் 3 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும்.
 • நடவு செய்த 10 முதல் 15-ஆவது நாளில் வளர்ச்சி இல்லாத செடிகளை அகற்றி குழிக்கு ஒரு நல்ல செடி இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்:

 • விதைத்தவுடன் முதல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 7-ஆவது நாள் உயிர்த் தண்ணீராக இரண்டாம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
 • விதைத்த 20-ஆம் நாளில் 3-ஆவது தண்ணீர், மொட்டு பிடிக்கும் பருவத்தில் 4-ஆம் தண்ணீர், பூ பிடிக்கும் தருணத்தில் 5, 6 ஆம் தண்ணீர், விதை பிடிக்கும் தருணத்தில் 7,8-ஆம் தண்ணீர் என்ற வகையில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

போரான் தெளிப்பு:

 • பூக் கொண்டைகளில் வெளிவட்ட மஞ்சள் பூக்கள் மலர ஆரம்பிக்கும் தருணத்தில் வெண்காரத்தை (போரான்) 0.2 சதம் லிட்டருக்கு 2 கிராம் என்ற அடிப்படையில் கலந்து பூக் கொண்டைகள் நனையுமாறு தெளிக்க வேண்டும்.இது மணிகள் நன்றாக பிடிக்க உதவும்.
 • மகரந்தச் சேர்க்கை ஏற்படும் தருணமான காலை 9 மணி முதல் 11 மணிக்குள் மெல்லிய துணிகொண்டு பூவின் மேல் பாகத்தை இரு நாள்களுக்கு ஒரு முறை மெதுவாக தேய்க்க வேண்டும். அருகருகே உள்ள பூக் கொண்டையினை ஒன்றோடொன்று முகம் சேர்த்து தேய்த்துவிட்டாலும் அதிக மணிகள் பிடிக்கும்.

நோய்கள்:

பூ அழுகல், இலைப்புள்ளி, சாம்பல் நோய், வாடல் நோய், துரு நோய் ஆகியவை சூரியகாந்தி பயிரைத் தாக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 400 கிராம் மான்கோசெப்பை தெளிக்க வேண்டும். பூக்கும் சமயம் தேனீக்களின் நடமாட்டம் குறைந்ததும் மாலை 4 மணிக்குப் பிறகு மருந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை:

 • பூவின் அடிப்பாகத்தில் உள்ள இதழ்கள் மற்றும் பின்புறம் மஞ்சள் நிறமடைந்து பூக் கொண்டையிலுள்ள விதைகள் கடினத் தன்மை அடைந்திருப்பதே முதிர்ச்சியடைந்ததற்கு அறிகுறியாகும்.
 • உலர்ந்த பூக் கொண்டைகளைப் பறித்து உலர்த்திய பிறகு விதைகளைத் தனியே பிரித்தெடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.
 • அறுவடைக்குப் பிறகு விதைகளை 8 முதல் 9 சத ஈரப்பதம் வரும் வரை நன்கு உலர வைக்க வேண்டும்.

இவ்வாறு தைப் பட்டத்தில் சூரியகாந்தி சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம் என்று தருமபுரி மாவட்ட வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *