மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி

மானாவாரியில் மக்காச்சோளம் பயிரிடும் முறை குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
பழநி மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மானாவாரியில்  மக்காச்சோளம் சாகுபடி செய்வது குறித்து வேளாண்துறையினர் கூறியதாவது:

மானாவாரியில் மக்காச்சோளம் பயிரிட கோ-1, கோஎச் (எம்)-4, கோ எச்(எம்)-5 ஆகியவை ஏற்ற ரகங்கள். ஹெக்டேருக்கு 25 கிலோ விதை தேவைப்படும். இடைவெளி 45*20 சென்டிமீட்டர் என்ற அளவில் இருக்க வேண்டும். கருவேல மர இலைச்சாறு மற்றும் புங்கம் இலைச்சாறை 1:1 என்ற அளவில் கலந்து 1:0:6 என்ற விகிதத்தில் விதை மற்றும் கலவையினை கலந்து 16 மணி நேரம் ஊர வைத்து நிழலில் உலர்த்தி பின்பு புங்கம் இலைத்தூளை 1 கிலோ விதைக்கு 300 கிராம் என்ற அளவில் கலந்து விதைக்க வேண்டும்.

ரசாயன உரங்களாக இருந்தால் அடி உரத்திற்கு 30 கிலோ தழைச்சத்து அல்லது யூரியா 65 கிலோ, மணிச்சத்து 30 கிலோ அல்லது சூப்பர் பாஸ்பேட் 188 கிலோ மற்றும் சாம்பல் சத்து 30 கிலோ அல்லது மூரியேட் ஆஃப் பொட்டாஷ் 50 கிலோ என்ற அளவில் இருக்க வேண்டும். சிறுதானியம் ஒரு ஹெக்டேருக்கு 12.5 கிலோ என்ற அளவில் தொழுஉரம் 50 கிலோவுடன் கலந்து பார்களின் ஓரங்களில் இட வேண்டும்.

900 லிட்டர் தண்ணீரில் அட்ரசின் 500 கிராம் கலந்து, விதைத்த 3வது நாளில் தெளிக்க வேண்டும். பயறு வகை பயிர்கள் ஊடுபயிராகச் செய்திருந்தால் ஒரு ஹெக்டேருக்கு அலக்குளோர் 4 லிட்டர் கலந்து தெளித்து, களை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

விவசாயிகள் இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதி வேளாண் அலுவலர்களையோ, வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *