ஆடிப்பட்ட தக்காளி சாகுபடி

காய்கறிகள் ஆண்டு முழுவதும் தேவைப்படும் உணவுப் பொருளாக இருந்தாலும் ஆடிப்பட்டம் (ஜூன்-ஜூலை மாதங்கள்) காய்கறிகள் சாகுபடிக்கு ஏற்ற பருவமாக உள்ளது.

tomato

இதைக் கருத்தில் கொண்டு ஆடிப்பட்டத்தில் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை, சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதில் தக்காளி சாகுபடி குறித்து தோட்டக் கலைத் துறையினர் தெரிவிக்கும் தகவல்:

தக்காளி ரகங்களில் கோ 1, கோ 2, மருதம் (கோ 3), பிகேஎம் 1, பூசா ரூபி, பையூர் 1, அர்கா அப்ஜித், அர்கா அஃஹா, அர்கா அனன்யா ஆகியன ஆடிப்பட்டத்துக்கு ஏற்றவை. நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண், தக்காளி சாகுபடிக்கு ஏற்றது. மண்ணின் கார அமிலத் தன்மை 6.0-7.0 என்ற அளவில் இருக்க வேண்டும். வெப்பநிலை 21 முதல் 24 செ.கி வரை இருப்பது வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்

விதை நேர்த்தி – நாற்று நடல்

ஹெக்டேருக்கு 350 முதல் 400 கிராம் விதைகளுடன் 40 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்வது அவசியம். இந்த விதைகளை 1 மீ அகலம் உள்ள மேட்டுப் பாத்திகளில் 10 செமீ வரிசை இடைவெளிகளில் விதைக்க வேண்டும். பின்பு பார்கள் அமைத்து 25 நாள்கள் வயதுடைய நாற்றுகளை பார்களின் ஒரு பக்கத்தில் நட வேண்டும். அதற்கு முன்பு இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

நீர்-உரம் நிர்வாகம்

 நாற்ற நட்ட 2-ஆவது நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். அதன் பிறகு மண்ணின் ஈரத் தன்மையைப் பொருத்து வாரத்துக்கு ஒரு முறை அல்லது 10 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். அடியுரமாக ஹெக்டேருக்கு தொழுஉரம் 25 டன், தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 100 கிலோ, சாம்பல் சத்து 50 கிலா, போராக்ஸ் 10 கிலோ, துத்தநாக சல்பேட் 50 கிலோ இட வேண்டும். நாற்று நட்ட 15 ஆவது நாள் மற்றும் பூக்கும் தருணத்தில் ட்ரைகோன்டால் 1 பிபிஎம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். 30 ஆவது நாள் தழைச்சத்து 75 கிலோ இட்டு மண் அணைக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

காய்ப்புழு மற்றும் புரொடீனியா புழுவைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறிகள் அமைக்கலாம். புழு தாக்கப்பட்ட பழங்களைப் பறித்து அழிக்க வேண்டும். காய்ப்புழுவுக்கு என்.பி.வி. வைரஸ் கலவை தெளிக்கலாம். புரொடீனியா புழுவிற்கு ஹெக்டேருக்கு கார்பரில் 1.25 கிலோ, நெல் தவிடு 12.5 கிலோ, வெல்லம் 1.25 கிலோ மற்றும் தண்ணீர் 7.5 லிட்டர் கலந்து விஷ உணவு தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும்.

இலைச்சுருட்டு நச்சுயிரி நோய்

இது தக்காளிச் செடியைத் தாக்கும் முதன்மை நோயாக இருக்கிறது. வெண் ஈக்கள் மூலமாக இந்த நச்சுயிரி பரவுகிறது. வெய்யில் காலங்களில் மிகவும் அதிகமாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு மெத்தில் டெமட்டான் அல்லது டைமீத்டோயேட் 500 மிலி-ஐ 250 மிலி தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

களை, பூச்சி, நோய் கட்டுப்பாடு தொழில்நுட்பங்களை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் 135 நாள்களில் ஹெக்டேருக்கு 35 டன் பழங்கள் மகசூல் பெற முடியும். மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு அந்தந்த பகுதி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *