இயற்கை தர்பூசணி சாகுபடி

  • ஊடுபயிருக்கு ஏற்றது.
  • ஊடுபயிரில் சராசரி மகசூல் 10 டன்.
  • தனிப்பயிரில் சராசரி மகசூல் 15 டன்.
  • ஒரு கிலோ 15 ரூபாய்

கோடைகாலத்தில் நமது உடல் வெப்பத்தைத் தணிக்க இயற்கை ஏராளமான கொடைகளை அளித்துள்ளது. அதில் ஒன்றுதான், தர்பூசணி. சாப்பிடுபவர்களுக்கு குளிர்ச்சியையும் நீர்ச்சத்தையும் தாராளமாக வழங்குவதோடு மட்டுமல்லாமல்… சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் நிறைவான வருமானத்தைத் தந்து வருகிறது, தர்பூசணி. அதனால்தான் பல விவசாயிகள் கோடைகாலத்தில் அறுவடைக்கு வருவது போல தர்பூசணியை சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள்.

மாநிலம் முழுக்கவே இது, பரவலாக சாகுபடி செய்யப்பட்டாலும்… டெல்டா மாவட்டங்களில் விரல் விட்டு எண்ணிவிடும்படியான அளவில்தான் தர்பூசணி விவசாயிகள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ரசாயன முறையில்தான் சாகுபடி செய்கிறார்கள். இவர்களில் இருந்து மாறுபட்டு இயற்கை விவசாய முறையில் தர்பூசணி சாகுபடி செய்து வருகிறார், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜேசு.

தஞ்சாவூர்-புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள மின்னாத்தூர் என்ற கிராமத்தில்தான் ஜேசுவின் நிலம் உள்ளது. அவரது தோட்டத்துக்கு நாம் சென்றபோது, அறுவடை செய்த தர்பூசணிப் பழங்களை வாகனத்தில் ஏற்றும் பணியில் இருந்தார், ஜேசு. புன்னகையோடு நம்மை வரவேற்றவர் விரைவாக வேலைகளை முடித்து விட்டு வந்து நம்மோடு உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

ஊடுபயிராக தர்பூசணி!

“பட்டுக்கோட்டை பக்கத்துல உள்ள புனல்வாசல்தான் என் சொந்த ஊர். பாரம்பர்ய விவசாயக் குடும்பத்துல பிறந்த நான் எஸ்.எஸ்.எல்.சி முடிச்சிட்டு, ராணுவத்துல 28 ஆண்டுகள் வேலை பார்த்தேன். ஓய்வுக்குப் பிறகு தஞ்சாவூர் மாதாக்கோட்டை பகுதியில் குடியிருக்கேன். பத்து வருஷத்துக்கு முன்னாடி இந்த 6 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். தண்ணீர் வசதி இல்லாததால் தரிசாவே போட்டு வச்சிட்டேன். இப்பதான் மின் இணைப்பு கிடைச்சு, போர்வெல் போட்டேன். இது செம்மண் பாங்கு கொண்ட களிமண் பூமி. இதை வழக்குமொழியில ‘ஈழை மண்ணு’னு சொல்லுவாங்க. ஒரு ஏக்கர் நிலத்துல மல்லிகைக்கு இடையில ஊடுபயிரா இந்த அடர் பச்சைநிற தர்பூசணியை சாகுபடி செஞ்சிருக்கேன். வீரிய ரக விதையா இருந்தாலும், இயற்கை விவசாயத்துல செழிப்பான விளைச்சலைக் கொடுக்குது. மீதியுள்ள நிலத்துல காய்கறி சாகுபடி செய்றதுக்கான ஆரம்பக்கட்ட வேலைகளைத் தொடங்கியிருக்கேன். மல்லிகை நடவு செஞ்ச 2 மாதம் கழிச்சிதான், தர்பூசணி விதைச்சேன். மல்லிகையில வருமானம் வர 10 மாதங்களுக்கு மேல ஆகும். மல்லிகைக்குப் போட்ட அடியுரம் தர்பூசணிக்கும் சேர்த்து பலன் கொடுக்குது. இப்ப தர்பூசணிக்குக் கொடுக்கிற மேலுரம் மல்லிகைக்குப் பயன் கொடுக்குது. சொட்டுநீர்ப் பாசனம் மூலமாத்தான் பாசனம் பண்றேன்.

வழிகாட்டிய நண்பர்!

என்னோட நண்பர் ராஜ்குமார், ‘பசுமை விகட’னோட தீவிர வாசகர். அவர்தான் எனக்கு இயற்கை விவசாயத்தைச் சொல்லிக் கொடுத்தார். என்கிட்ட மாடுகள் இல்லை. இந்தப் பகுதியில உள்ள ஒரு பால் பண்ணையில சாணம், மூத்திரத்தை இலவசமா வாங்கிட்டு வந்துதான் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல்னு தயார் பண்றேன். இயற்கை முறையில சாகுபடி செஞ்சதுனால கொஞ்சம் கூட பூச்சி, நோய் தாக்குதல் இல்லை.  ஒரு பழம் கூட பழுதாகாம தரமா விளைஞ்சிருக்கு. பழமும் நல்ல சுவையா இருக்கு. சாப்பிட்டவங்க எல்லாருமே ஆச்சர்யப்படுறாங்க. திரும்பத்திரும்ப வாங்குறாங்க. பழக்கடைக்காரங்க தனிமதிப்பு கொடுத்து என் பழங்களை வாங்கிக்கிறாங்க. தஞ்சாவூர் புது  பஸ்-ஸ்டாண்ட் பகுதியில் நான் நேரடியாவும் விற்பனை செய்றேன். இதை சாப்பிட்டுப் பார்த்து இயற்கையில் விளைஞ்ச பழத்தோட மகத்துவத்தைத் தெரிஞ்சுக்கிட்டவங்க, தோட்டத்துக்கே தேடி வந்து வாங்குறாங்க” என்ற ஜேசு, ஒரு பழத்தை நறுக்கிக் கொடுத்தார். நல்ல சதைப்பற்றுடன் அற்புதமான சுவையுடன் இருந்தது, அப்பழம்.

நிறைவாக வருமானம் குறித்துப் பேசிய ஜேசு, “நடவு செய்து 70 நாள் ஆகுது. இன்னையோட முழுசா அறுவடை முடியுது. மொத்தம் அஞ்சரை டன் அளவு மகசூல் கிடைச்சிருக்கு. ஒரு பழம் குறைஞ்சபட்சமா 3 கிலோ எடையிலயும் அதிகபட்சமா 5 கிலோ எடையிலயும் இருந்தது. மொத்த வியாபாரிகள் கிலோவுக்கு 7 ரூபாய்ல இருந்து முதல் 10 ரூபாய் வரை விலை கொடுப்பாங்க. பழக்கடைகள்ல ஒரு கிலோவுக்கு 12 ரூபாய் விலை கொடுக்கிறாங்க. நான், நேரடியா கிலோ 15 ரூபாய்னு விற்பனை செய்றேன். இதுவரை 2 ஆயிரத்து 700 கிலோ பழத்தை கிலோ 12 ரூபாய்னு விற்பனை செய்திருக்கேன். 1,000 கிலோ பழத்தை கிலோ 13 ரூபாய்னு எடுத்துக்கிட்டாங்க. அடுத்து அறுவடையான 1,000 கிலோ பழத்தை கிலோ 14 ரூபாய்னு விற்பனை செய்திருக்கேன். 800 கிலோ பழத்தை கிலோ 15 ரூபாய்னு விற்பனை செய்திருக்கேன். அந்தக் கணக்குல மொத்தம் 71 ஆயிரத்து 400 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. இதுவரை 18 ஆயிரம் ரூபாய் செலவு செய்திருக்கேன். மீதி, 53 ஆயிரத்து 400 ரூபாய் லாபம். மொத்தம் 10 டன் அளவுக்கு மகசூல் கிடைச்சிருக்கணும். ஆனா, மயில்களால ரொம்ப பாதிப்பு. அதனாலதான் மகசூல் குறைஞ்சிடுச்சு. இல்லாட்டி இன்னும் கூடுதலா லாபம் கிடைச்சிருக்கும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பழங்களை ஏற்றிச்செல்ல அடுத்த வாகனம் வந்து விட, வேலையில் கவனமானார்.

 

ஒரு ஏக்கர் நிலத்தில் தர்பூசணி சாகுபடி செய்யும் விதம் குறித்து, ஜேசு சொன்ன விஷயங்கள் இங்கே…

மல்லிகையில் ஊடுபயிராக தர்பூசணி நடவு செய்ய விரும்புபவர்கள்… தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 7 அடி இடைவெளியில், 3 அடி சதுரம் 3 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுக்க வேண்டும். இந்த இடைவெளியில் ஒரு ஏக்கர் நிலத்தில் கிட்டத்தட்ட 800 குழிகள் வரை எடுக்கலாம். ஒவ்வொரு குழியிலும் 5 கிலோ ஆட்டு எருவுடன் நிலத்தின் மேல் மண்ணைக் கலந்து நிரப்பி சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மண்ணை ஈரப்படுத்தி, ஒரு குழிக்கு ஒரு நாற்று என மல்லிகை நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு மல்லிகைச் செடியை சுற்றிலும் அரையடி அளவு இடைவெளி விட்டு 3 அல்லது 4 தர்பூசணி விதைகளை ஊன்ற வேண்டும். விதைகளை பஞ்சகவ்யாவில் அரைமணிநேரம் ஊற வைத்து விதைநேர்த்தி செய்தால் நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்.

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் அரைமணி நேரம் பாசனம் செய்ய வேண்டும். பிறகு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாசனம் செய்தால் போதுமானது. விதைத்த 8-ம் நாளுக்கு மேல் விதைகள் முளைக்கும். 15-ம் நாள் களைகளை அகற்ற வேண்டும். 17, 19 மற்றும் 21-ம் நாட்களில் பாசனம் செய்த பிறகு, ஒவ்வொரு குழியிலும் கால் லிட்டர் அமுதக்கரைசலை ஊற்ற வேண்டும்.

25-ம் நாளுக்கு மேல் தர்பூசணிக் கொடி படரத் தொடங்கும். அதற்குப் பிறகு, காய்ச்சலும் பாய்ச்சலுமாக 4 நாட்கள் இடைவெளியில் பாசனம் செய்தால் போதுமானது. 25, 29, 33 மற்றும் 37-ம் நாட்களில் பாசனம் செய்த பிறகு, ஒவ்வொரு குழியிலும் அரை லிட்டர் அமுதக்கரைசலை ஊற்ற வேண்டும். 30-ம் நாள் ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவை 70 லிட்டர் தண்ணீரில் கலந்து தர்பூசணி இலைகள் மீது தெளிக்க வேண்டும். 32-ம் நாள் இரண்டரை லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியை 70 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 38-ம் நாள் 2 லிட்டர் பஞ்சகவ்யாவை 140 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 39-ம் நாள் 5 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியை 140 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 45-ம் நாள் 2 லிட்டர் வடிகட்டிய ‘வராஹ குணப’த்தை 260 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். அதற்குப்பிறகு இடுபொருட்கள் கொடுக்கத் தேவையில்லை. 45-ம் நாளுக்கு மேல் பூக்கள் பூத்து பிஞ்சுகள் உருவாகும். 65 முதல் 70 நாட்களில் காய்கள் முற்றி அறுவடைக்குத் தயாராகி விடும்.

தனிப்பயிராக தர்பூசணி சாகுபடி செய்பவர்கள்…
நிலத்தை நன்றாக உழுது, வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளி, செடிக்குச் செடி 2 அடி இடைவெளி இருக்குமாறு ஒரு கன அடி அளவில் குழிகள் எடுத்து சொட்டு நீர்ப்பாசனக் குழாய்களை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 2 கிலோ ஆட்டு எருவை மேல் மண்ணுடன் கலந்து நிரப்பி குழிக்கு 4 விதைகள் விதம் விதைத்து பாசனம் செய்ய வேண்டும். சொட்டுநீர்ப் பாசன வசதி இல்லாத விவசாயிகள், 8 அடி இடைவெளியில் வாய்க்கால் எடுத்து, வாய்க்காலின் உள்கரையில் 2 அடி இடைவெளியில், (‘ஜிக்ஜாக்’) குறுக்கு நெடுக்கு முறையில் விதைகளை நடவு செய்யலாம். ஊடுபயிராக சாகுபடி செய்யும்போது 10 டன் வரை மகசூல் கிடைக்கும். தனிப்பயிராக சாகுபடி செய்யும் போது 15 டன் வரை மகசூல் எடுக்கலாம்.

பட்டம்… மண்!

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் உள்ள ஆர்.வி.எஸ். வேளாண் கல்லூரி முதல்வர் சோழன் தர்பூசணி குறித்து சொன்ன விஷயங்கள் இங்கே… “இது குறுகிய காலத்தில் அதிக வருமானம் தரக்கூடிய பயிர். வடிகால் வசதியுடைய அனைத்து வகையான மண்ணிலும் தர்பூசணி விளையும். நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை தர்பூசணியை விதைக்கலாம். இந்த மாதங்களில் விளைச்சலும், விற்பனை வாய்ப்பும் நன்றாக இருக்கும். ஜூன் மாதத்துக்கு முன்பே அறுவடையை முடித்து விட வேண்டும். தர்பூசணியின் தோல் சுமார் ஒரு சென்டி மீட்டர் தடிமன் இருப்பதால்,

10 முதல் 15 நாட்கள் வரை பழங்கள் கெடாது. இதில், மனித உடலுக்கு தேவையான மினரல், சாம்பல், சுண்ணாம்பு, இரும்பு உள்ளிட்ட பலவிதமான சத்துக்கள் அடங்கியுள்ளன. நீர்ச்சத்தும், சர்க்கரைச் சத்தும் இதில் நிறைந்திருப்பதால், மனித உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கிறது. இது வீரிய விதை தர்பூசணி இதன் விதைகள் தனியார் விதைக் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.”

வராஹ குணபம்!

எலும்பு, கொழுப்புடன் கூடிய  5 கிலோ பன்றிக்கறியை எலும்புகள் கரையும் அளவுக்கு நன்கு வேக வைத்து ஆற விட வேண்டும். வேகவைத்த கறியை பிளாஸ்டிக் கலனில் இட்டு அதனுடன் 10 கிலோ பசுஞ்சாணம் சேர்த்துக் கலக்கி, ஒரு கிலோ உளுந்து மாவு, ஒரு லிட்டர் பசும்பால், ஒரு லிட்டர் பசுந்தயிர், 5 லிட்டர் பசு மாட்டுச் சிறுநீர் கலந்து மூடி நிழலில் வைக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை மட்டும் மூடியைத் திறந்து நன்கு கலக்கி விட வேண்டும். இப்படி 45 நாட்கள் செய்து வந்தால் வராஹ குணபம் தயார்.

தொடர்புக்கு,
ஜேசு,
செல்போன்: 09047505575 .

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *