பன்னீர் திராட்சை சாகுபடியில் ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் லாபம்

பன்னீர் திராட்சை சாகுபடி மூலம் நீண்டகாலத்துக்கு, ஆண்டுதோறும் பல லட்ச ரூபாய் வருவாய் கிடைக்கும் என்கிறார் தேனி மாவட்ட விவசாயி சரவணன்.

கோடை வெயிலில் இருந்து உடலைப் பாதுகாக்கவும், தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும் பலர் தர்பூசணி, நுங்கு, திராட்சை உள்ளிட்ட பல்வேறு பழங்களைச் சாப்பிடுவது வழக்கம். இதில் குறிப்பாகச் செரிமானச் சக்தியை அதிகரிப்பது, ஆஸ்துமாவை மட்டுப்படுத்துவது, மார்பகப் புற்றுநோயைத் தடுப்பது, ரத்த அழுத்தத்தைச் சீராக வைப்பது, சிறுநீரகச் செயல்பாட்டுக்கு உகந்தது எனத் திராட்சை பழத்தின் மகத்துவத்தை மருத்துவர்கள் பட்டியல் இடுகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் அணைப்பட்டியை சேர்ந்த விவசாயி எல்.சரவணன் மூன்று ஏக்கர் நிலத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பன்னீர் என்று அழைக்கப்படும் கறுப்பு நிறத் திராட்சையைச் சாகுபடி செய்துவருகிறார். பன்னீர் திராட்சை சாகுபடி குறித்து அவர் பகிர்ந்துகொண்டது:

Courtesy: Hindu
Courtesy: Hindu

120 நாட்களுக்கு ஒரு காய்ப்பு

பன்னீர் திராட்சை சாகுபடிக்கு உப்பு, உவர்மண் தவிரக் கரம்பை மண், செம்மண், வண்டல் மண் போன்றவை ஏற்றவை. கூடுதல் விளைச்சலுக்கு வண்டல் மண்ணில் சாகுபடி செய்யலாம். நிலத்தில் குழி தோண்டி இயற்கை உரங்களுடன், சிறிது செயற்கை உரத்தையும் சேர்த்து இட வேண்டும். அதன் பின்னர்ச் செடியை நட்டு வைத்து நல்ல தண்ணீர் மட்டும் பாய்ச்ச வேண்டும். 15மாதங்களில் பழங்கள் பறிக்கத் தயாராகி விடும். அப்போது ஏழு முதல் எட்டு டன்வரை திராட்சை பழம் அறுவடை செய்ய முடியும்.

அதன் பின் 120 நாட்களுக்கு ஒருமுறை பழம் பறிக்கலாம். அப்போது நான்கு முதல் ஐந்து டன்வரை காய்ப்பு கிடைக்கும். இது 20ஆண்டுகள்வரை தொடர்ந்து பலன் தரும். சராசரியாக ஒரு டன், ரூ. 30 ஆயிரம்வரை விலைபோகிறது. ஆண்டுக்கு ரூ. 3.60 லட்சம் கிடைக்கும். செலவு போக எப்படிப் பார்த்தாலும் ரூ.3 லட்சம் லாபம் கிடைக்கும்.

முதல் சாகுபடி செலவு

கோடை காலத்தில் நான்கு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மற்றக் காலத்தில் 10 நாட்களுக்கு ஒருமுறை வீதம் தண்ணீர் பாய்ச்சினால் போதும். தொடர்மழை பெய்தால் செவட்டை, சாம்பல் நோய் போன்றவை தாக்கலாம். அந்த நேரத்தில் பூச்சிமருந்தைத் தெளித்து நோயைக் கட்டுப்படுத்த வேண்டும். முதன்முதலில் ஒரு ஏக்கரில் திராட்சை சாகுபடி செய்ய வேண்டுமென்றால் குத்துக்கல், வலைக்கம்பி, உரம், செடி, கூலியாட்கள் என ரூ. 4 லட்சம்வரை செலவு ஏற்படும். அதன் பின்னர்ச் செலவு குறையத் தொடங்கும்.

முதல் அறுவடையிலேயே செலவழித்த மொத்தப் பணத்தையும் எடுத்துவிடலாம். குத்துக்கல், கம்பி போன்றவை 70ஆண்டுகள்வரை சாகுபடி செய்தாலும் நீடிக்கும். ஐந்து ஆண்டு வளர்ந்த திராட்சை கொடியில் இருந்து விதைக் குச்சியை வெட்டி பதியன் போட்டுப் புதிய செடி வளர்க்கலாம். அது வேறு இடத்தில் புதிதாகத் திராட்சைத் தோட்டம் அமைப்பதற்குப் பயன்படும்.

சந்தைப்படுத்துதல் எளிது

தமிழகத்தில் மட்டுமல்ல கொல்கத்தா, கேரளம், ஆந்திரம் போன்ற வெளிமாநிலங்களுக்குப் பன்னீர் திராட்சை அதிகளவில் செல்கிறது. மற்ற மாவட்டங் களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து பழங்களை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். பன்னீர் திராட்சையைச் சந்தைப்படுத்துதல் மிகவும் எளியது.

எல்.சரவணன் தொடர்புக்கு: 08012305456

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “பன்னீர் திராட்சை சாகுபடியில் ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் லாபம்

 1. mohandoss says:

  திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பொருந்துமா?
  தேனிமாவட்டத்திற்கு மட்டும்தானா?
  பயிரிடுவதற்கு செடிகள் எங்கு கிடக்கும்? நன்றி

  மோகன்தாஸ்.
  திருவண்ணாமலை.

  பதிலை பதிவிடுங்கள்

 2. Venkatesan says:

  திருவண்ணாமலையில் பன்னீர் திராட்சை சில இடங்களில் வளர்கிறது. விதை எடுத்து வைத்துள்ளேன். விதை நேர்த்தி செய்முறை குறித்து விளக்கம் தர இயலுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *