துவரை மகசூலை அதிகரிக்க வழிகள்

 துவரை மகசூல் செய்வதன் மூலம் விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம் என வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பாசிப் பயறு, உளுந்து, தட்டை, கொள்ளு, கொண்டைக்கடலை போன்ற பயிறு வகைகள் விளைவிக்கப்படுகின்றன. இதற்கு அடுத்ததாக 250 ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரியாக துவரை சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், மானாவாரியில் கடலை, பாசிப் பயிறு, உளுந்து ஆகிய பயிர்களுடன் ஊடுபயிராக துவரை பயிரிடப்படுகிறது. இதனால், ஹெக்டேருக்கு ஆயிரம் கிலோ என்ற அளவே மகசூல் கிடைக்கிறது. உற்பத்தியைப் பெருக்க நாற்று விட்டு நடவு செய்யும் தொழில்நுட்பத்தை கையாளலாம். இதனால், இரண்டு மடங்கு மகசூல் கிடைக்கும்.

நீண்டகால வயதுடைய ரகங்களுக்கு 45 நாள்கள், நடுத்தர வயதுடைய ரகங்களுக்கு 35 நாள்களும் குறைந்த வயதுடைய ரகங்களுக்கு 25 நாள்கள் வைத்தும் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நீண்டகால வயதுடைய ரகத்துக்கு 6-க்கு மூன்று அடி இடைவெளி விட்டு நடுத்தர ரகத்துக்கு 4-க்கு 3 அடி இடைவெளி குறைந்த வயதுடைய ரகம் 3-க்கு 2 அடி இடைவெளி விட வேண்டும். நடவு வயலை 3 முறை சுட்டிக் கலப்பை மற்றும் கொச்சிக் கலப்பை அல்லது ரோட்டாவேட்டர் மூலம் கட்டிகள் இல்லாமல் நன்கு உழுதல் வேண்டும்.

அதன் பின்பு குறிப்பிட்ட இடைவெளியில் பார்கள் அமைத்து குழி தோண்டி அதில் நாற்று நடவு செய்ய வேண்டும்.

சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சினால் குறைந்த அளவு தண்ணீரே செலவாகும். நடவு செய்த 20 மற்றும் 30 நாள்களில் பயிரின் நுனியைக் கிள்ளி விட வேண்டும். பக்கவாட்டு கிளைகள் அதிக அளவில் வளர்ந்து பூங்கொத்து உருவாகி இருமடங்கு மகசூல் கிடைக்கும். துவரைச் செடிக்கு முறையான விகிதத்தில் மருந்து அடிக்க வேண்டும். பயிரின் பூ மற்றும் பிஞ்சு பருவமானது

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வராதவாறு நடவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *