நடவு முறையில் துவரைச் சாகுபடி

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மூலம் நடவு முறையில் துவரை சாகுபடி செய்து குறைந்த நாள்களில் விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம். அதோடு, உற்பத்தியை பெருக்குவதற்காக மானிய திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் சார்பில் நடவு முறையில் துவரை சாகுபடி செய்வதற்கு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரம் வரையில் கடன் வழங்கப்படுகிறது. அதில், 50 சதவீதம் வரையில் மானியமும் அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு வட்டார பகுதியிலும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 870 ஹெக்டேர் பரப்பளவில் நடவு முறையில் துவரை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதுவரையில் மானாவாரி மற்றும் கிணற்றுப்பாசனத்தில் விவசாயிகள் துவரையை ஊடுபயிராகவே செய்து வருகின்றனர். இப்பயிர் சாகுபடி செய்வதற்கு 160 நாள்கள் முதல் 170 நாள்களுக்கு பின்னரே சாகுபடி செய்ய முடியும். ஆனால், நடவு முறையில் துவரை சாகுபடி செய்வதன் மூலம் 120 நாள்களில் மகசூல் பெற முடியும்.

இது குறித்து வேளாண்மை இணை இயக்குநர் சுப்பையா கூறுகையில், நடவு முறையில் துவரை சாகுபடி என்பது பாலித்தீன் பையில் 25,30 நாள்கள் வரையில் வளர்த்து அதையடுத்து, விளைநிலங்களில் 2 அடி இடவெளியிட்டு நடப்படுகிறது.

இந்த முறையில் செய்வதால் 120 நாள்களில் அதிகமான சாகுபடி செய்ய முடியும்.

இதற்காக தேசிய வேளாண்மை திட்டம் சார்பில் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் பயிர் வளப்பதற்கான பாலித்தீன் பை, ஹைட்ரோஜெல், நுண்ணூட்ட உரம், உயிர் உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

மேலும், நடவு முறை துவரையில் வறட்சி தவிர்க்கப்படுகிறது. அதோடு பயிர் எண்ணிக்கையும் பராமரிக்கப்படுகிறது.

இதனால், சாதாரண முறையில் ஏக்கருக்கு 450 கிலோ வரையிலும் கிடைக்கும் நிலையில், நடவு முறையில் 800 கிலோ வரையில் மகசூல் பெற முடியும் என்றார்.

இது தொடர்பாக குன்னூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சீ.அழகர்சாமி கூறுகையில், ஒரு ஹெக்டேரில் நடவு முறையில் துவரை சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம் என அலுவலர்கள் தெரிவித்தனர். அதன் அடி்பபடையில் இம்முறையை பின்பற்றி துவரை சாகுபடி செய்துள்ளேன். இதற்காக வேளாண்மைத்துறை சார்பில் 6750 பாலித்தீன் பைகளும், விதைகளும் வழங்கினார்கள். அதை கிணற்றுக்கு அருகில் இரண்டு பாத்தி அளவில் பைககளில் விதைகளை போட்டு வைத்து வளர்த்ததில், 29 நாள்களில் பயிர் வளர்ந்தது. அப்படியே, வேளாண்மை துறையினரின் அறிவுரைப்படி விளைநிலங்களில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு நடவு செய்தேன். தற்போது, 60 நாள்கள் வளர்ந்த பயிராக உள்ளது. நெருக்கடி இல்லாமல் இடைவெளி விட்டு இருப்பதால் நோய்த்தாக்குதலும் குறைவாக உள்ளது. அதோடு, வளர்ந்து வரும் போது கொளுந்துகளை கிள்ளியதால், பக்கச் சிம்புகள் அதிகமாக காணப்படுகிறது. அவ்வப்போது உயிர் உரங்களையும், தெளிப்பு மருந்துகளையும் பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *