தென்னங்கன்று வளர்ப்பில் கொடிகட்டும் விவசாயி

தனிச்சுவையுடனும் பெரிய அளவிலும் வரும் பொள்ளாச்சி இளநீர், தேங்காயைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அந்தத் தென்னந்தோப்புகளில் நடுவதற்கான தென்னை நாற்றுகளைப் பெருமளவில் உற்பத்தி செய்து தரும் பணி, கோவையில் ஒரு பண்ணையில் சத்தமில்லாமல் நடைபெற்றுவருகிறது.

கோவை கல்வீரம்பாளையம் வேடப்பட்டி சாலை வழியே செல்லுபவர்கள் வெறும் தென்னை நாற்றுகள் மட்டுமே ஆயிரக்கணக்கில் கடைவிரித்திருக்கும் நர்சரியைத் தவிர்க்காமல் செல்ல முடியாது. அதைப் பார்க்கும்போது பெரிய அளவில் தென்னந்தோப்பு வைத்து விவசாயம் செய்யும் ஒருவர், அதை நடத்துகிறார் என்று எண்ணத் தோன்றும். ஆனால், 20 சென்ட் நிலத்தில் (4 கிரவுண்ட்) சுமார் 25 ஆயிரம் தென்னங்கன்றுகளை வளர்த்து கோவை, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர் பகுதிகளுக்கு மட்டுமல்ல; கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சப்ளை செய்துவருகிறார்கள். 23 ஆண்டுகளாக இந்தப் பணி தொய்வின்றி நடப்பதுதான் விசேஷம்.

தென்னைக்குச் சிறப்புப் பண்ணை

இந்த நாற்றங்கால் பண்ணையைப் பராமரித்துவரும் சண்முகம் பகிர்ந்துகொண்டது: “என் அக்கா மகன் பொள்ளாச்சி அம்பராம்பாளையத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்றதொரு தென்னை நாற்றுப் பண்ணையில் வேலை பார்த்துவந்தார். அப்போது பொள்ளாச்சியிலேயே எண்ணிச் சில பகுதிகளில் மட்டுமே தென்னை நாற்றுப் பண்ணைகள் இருந்தன. அவற்றில் வேறு பூ, காய்கறி நாற்றுகளும் வைத்துப் பராமரிக்கப்பட்டன. தென்னை நாற்றுகளைப் பராமரிப்பதைவிட வேறு நாற்றுகள் பராமரிப்பதில் நிறைய சிரமங்களும், நிறைய நீரும் தேவைப்பட்டதை உணர்ந்து அப்பகுதியிலேயே சிறிய இடம் பிடித்துத் தென்னை நாற்றுப் பண்ணையை நான் ஆரம்பித்தேன்.

அந்த முயற்சி ஓரளவுக்கு நன்றாக வரவே, 13 ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு நாற்றுப் பண்ணையை மாற்றினேன். அப்போதில் இருந்து இப்போதுவரை நான்தான் இதைப் பராமரித்து வருகிறேன்.

வெளி மாநில ஏற்றுமதி

தென்னை நாற்று வேணும்னு இன்டர்நெட்டைத் தட்டினீங்கன்னா, முதல்ல வந்து விழற பெயர் எங்கள் நாற்றுப் பண்ணைதான். முளைப்பு வந்து மூன்று மாசத்துக்குள் இருக்கும் மூன்றாயிரம் முதல் ஆறாயிரம்வரை நாற்றுகளை ஒசூரில் வாங்கி வர்றோம். அதை நார்க்கழிவு கொண்ட பாலிதீன் பையில் போட்டு வளர்க்கிறோம் இப்படி வளர்த்தா நிறைய இடம் தேவைப்படும் என்பதால் நிலத்துலயும் நார்க்கழிவை கொட்டி வளர்க்கிறோம். இதுல தேவை என்னவோ, அதை விவசாயிகள் வாங்கிச் செல்கிறார்கள்.

இங்கிருந்து கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்களுக்கும் தென்னை நாத்துகள் போகின்றன. பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர், கோவையில் நாங்க சப்ளை செய்யாத தோட்டமே கிடையாது. எல்லா நர்சரிகளிலும் மற்ற நாற்றுகளுடன்தான் தென்னை நாற்றுகளை வைத்திருப்பார்கள். நாங்கள் தென்னை நாற்றுகளை மட்டுமே வளர்க்கிறோம். அதனால நிறைய வகைகளையும், பக்குவமாகவும் வளர்த்தெடுக்க முடிகிறது. இதுமாதிரி தென்னை நாற்று மட்டுமே உள்ள நர்சரிகள் பொள்ளாச்சியில்கூட விரல் விட்டு எண்ணுகிற அளவில்தான் இருக்கு.

முதலீடு குறைவு

வேறு காய்கறிகள், பழம், பூ நர்சரிகள் என்றால் இருவேளைகளும் தண்ணீர் விட வேண்டும். நோய் தாக்காமல் பாதுகாக்க வேண்டும். தென்னை நாற்றுப்பண்ணைக்கு ஒரு வேளை தண்ணீர் விட்டாலே போதும். பராமரிக்கவும் ஆட்கள் அதிகமாகத் தேவையில்லை. ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் கவனித்தால் போதும். ஆயிரம் நாற்றுகள் இருந்தால், அவற்றில் 50 – 60 நாற்றுகளை அழுகிப் போவதால் தூர வீச வேண்டிவரும். மற்றபடி இந்தத் தொழிலில் எந்தச் சிக்கலும் இல்லை.

நாற்றுகளை ஒசூரிலிருந்து கொண்டு வரும்போது ஏற்றும்போதும், இறக்கும்போதும் மட்டும் ஆட்களைக் கூலிக்கு அழைத்துக் கொள்ளலாம். இடமும் பெரிய அளவில் தேவையில்லை. தென்னை நார்க்கழிவு 20 கிலோ ஒரு மூட்டை ரூ.60-க்கு விற்கிறது. ஆயிரம் தென்னங்கன்றுகளுக்கு 40 மூட்டைகள் நார்க்கழிவு தேவைப்படும். மூன்று மாதங்கள் நாற்றை முழுமையாக வளர்த்து முடிக்கும்போது, ஒரு நாற்றுக்குச் சராசரியாக ரூ. 40 வரை செலவாகலாம். அதை உத்தேசித்து விலை வைக்கிறோம். எங்களிடம் கிடைக்கும் விலையில் தென்னை நாற்றுகள் வேறு எங்கும் கிடைக்காது!’ என்கிறார்.

தென்னை நாற்று வளர்க்கும் சண்முகம் தொடர்புக்கு: 9443651846

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *