தென்னையில் உர மேலாண்மை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், உர மேலாண்மையை செயல்படுத்தி, அதிக மகசூல் பெறலாம்’ என்று, உழவர் பயிற்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

  • உரமும், நீரும் தென்னைக்கு தலையாய தேவைகளாகும். நீர் தேவையை பொறுத்தவரை, நன்கு வளர்ந்த மரம் ஒன்றுக்கு, ஒரு நாளைக்கு, 100 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
  • பல இடங்களில், தண்ணீர் பற்றாக்குறையால், நீர் மேலாண்மை பின்பற்ற முடியாத நிலை உள்ளது. மேலும், தென்னை மரங்களுக்கு, சரியான அளவில், சரியான நேரத்தில் உரங்களை இடாமல் இருப்பதே, மகசூல் குறைய முக்கியமான காரணமாகும். பொதுவாக, பருவ மழை காலத்தில், மண்ணில் மிதமான ஈரம் இருக்கும்போது, உரமிடுதல் அவசியமாகும்.
  • தென்னையை பொறுத்தவரை பரிந்துரை செய்யப்படும் உரத்தினை, இரண்டு சம அளவாக பிரிந்து, ஜூன், ஜூலை மாதத்தில், மரத்தை சுற்றி, அரை வட்டத்தில் ஒரு பாதியும், மறு பாதியை, இரண்டாவது அரை வட்டத்தில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களிலும் இட வேண்டும்.
  • தென்னை மரத்திலிருந்து, 1.50 மீட்டர் முதல், 2 மீட்டர் வரையிலான பகுதியில் உள்ள வேர்கள், அதிக உறிஞ்சும் திறன் கொண்டதாக இருக்கும். எனவே, மரத்தில் இருந்து, 1.80 மீட்டர் தொலைவில், ஒரு அடி ஆழத்தில், அரைவட்ட வடிவில் குழி எடுத்து, உரமிட்டு, நீர் பாய்ச்ச வேண்டும்.
  • மேலும், தென்னையை சுற்றிலும், பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு ஆகியவற்றை பயிரிட்டு, மண்ணில் மடக்கி உழ வேண்டும்.
  • தென்னையில் நடவு செய்த, ஆறு மாதத்தில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை தொழு உரம், யூரியா, பொட்டாஷ், வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை இட வேண்டும்.
  • தென்னைக்கு என, நுண்ணூட்ட சத்து கலவையை, தமிழ்நாடு வேளாண்மை துறையினரால் தயாரித்து அளிக்கப்படுகிறது. இக்கலவை, ஒரு கிலோ மற்றும், ஒரு பாக்கெட் அஸோஸ்பைரில்லம், ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை கலந்து இட வேண்டும்.
  • நுண்ணூட்ட சத்து கலவை மற்றும் உயிர் உரங்களை, தேவையான அளவு, தொழு உரத்துடன் கலந்து, தனியே இடலாம்.
  • எக்காரணத்தை கொண்டும், ரசாயன உரங்களுடன், நூண்ணூட்ட சத்து கலைவையை கலக்கக் கூடாது. எனவே, தென்னை விவசாயிகள், உர பரிந்துரையின்படி ஆண்டு தோறும் தவறாமல் உரமிட வேண்டும்.
  • இவ்வாறு செய்தால், குரும்பைகள் அதிகம் பிடித்து, குரும்பை கொட்டுவது வெகுவாக குறைக்கப்பட்டு, மகசூல் அதிகரிப்பதுடன், காய்களின் தரம் மற்றும் எண்ணைய் சத்து அதிகரிக்கும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “தென்னையில் உர மேலாண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *